திருடனைப் பற்றிய விவரத்தை திருடனுக்கே அனுப்புவதால் என்ன நன்மை ஏற்பட்டுவிடப்போகிறது?

1298

பா.ஜ.க.வின் அடிமை அரசான அ.தி.மு.க.வின் ஆட்சி ஊழல்மயமாகிவிட்டதால் அதை அகற்றியே தீர வேண்டும் என்ற யுத்தத்தைத் தொடுத்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

அவருடைய குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாக கமலை அவன் இவன் என்றெல்லாம் ஏக வசனத்தில் தமிழக அமைச்சர்கள் பேசி வந்தாலும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார் கமல்.

ஆதாரம் இல்லாமல் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறக் கூடாது என்று கண்டித்து வரும் அமைச்சர்களுக்கு பதில் அளித்த கமல்ஹாசன்,

“ஊழல் என்ற சத்தம் ஊரெல்லாம் கேட்கிறது. இதில் அமைச்சர்களுக்கு ஆதாரம் வேண்டுமாம். அமைச்சர்கள் கேட்ட ஆதாரங்களையும், ஊழலால் அனுபவித்த இன்னல்களையும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அனுப்பி வையுங்கள்”

என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த கமல், புகார் அனுப்ப வேண்டிய தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியையும் வெளியிட்டார்.

அமைச்சர்களுக்கு தெரியாமல் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை. அதே அமைச்சர்களுக்கே அனுப்பினால்?

திருடனைப் பற்றிய விவரத்தை திருடனுக்கே அனுப்புவதால் என்ன நன்மை ஏற்பட்டுவிடப்போகிறது? என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்தாலும், இன்னொரு பக்கம் கமலின் அறிக்கையின்படி அந்த முகவரிக்கு ஊழல் புகார் ஆதாரங்களை அனுப்பி வைக்க மக்கள் தயாரானபோது தமிழக அமைச்சர்களின் ஈமெயில் முகவரி பற்றிய விவரங்கள் அனைத்தும் திடீரென மாயமாகி இருந்தன.

இதனால் ரசிகர்கள் ஊழல் ஆதாரங்களை அனுப்ப முடியாமல் குழம்பினார்கள். இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் ரசிகர்களுக்கு புதிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், ஊழல் புகார் ஆதாரங்களை அமைச்சர்களின் முகவரிக்கு பதிலாக லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வையுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்.

அத்துடன், லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகம் இயங்கும் எண்.293, எம்.கே.என்.ரோடு, ஆலந்தூர், சென்னை-600016 என்ற முகவரியையும் 22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய தொலைபேசி எண்கள், 22321005 என்ற பேக்ஸ் எண், dv-ac@nic.in  என்ற இமெயில் முகவரி ஆகியவற்றையும் அனைத்து மாவட்ட ரசிகர் மன்றத்தினருக்கும் அனுப்பி வைத்து உள்ளார்.

இந்த முகவரிக்கு ரசிகர்கள் ஊழல் புகார் ஆதாரங்களை அனுப்பி வருகிறார்கள்.