இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான ‘கல்கி 2898 கி.பி’ படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது.
சமீபத்தில் மே 22, 2024 அன்று, ஹைதராபாத்தில் விழாவில், படத்திற்காக மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’யை அறிமுகப்படுத்தினர்.
பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, ‘புஜ்ஜி’ யை அறிமுகப்படுத்திய நடிகர் பிரபாஸ் அதனை ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த வாகனம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
பைரவாவாக வரும் பிரபாஸும், புஜ்ஜியும் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறார்கள். புஜ்ஜி டீசர் வைரலாகி, வரவேற்பை பெற்ற நிலையில், இவ்வாகனத்தைக் காண மக்கள் அலையெனத் திரண்டனர்.
கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன், பார்த்தவுடன் எதிர்காலத்தை கண்முன் கொண்டு வரும் வகையிலான புஜ்ஜி வாகனம், பார்த்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஆயிரக்கணக்கில் கூடி இவ்வாகனத்தை பார்வையிட்ட மக்கள், பட டீசரில் நடிகர் பிரபாஸ் அமர்ந்து பயணித்த இடத்தில் அமர்ந்து, ஆவலுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது.
ஒரு பன்மொழி படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது.