ஜெ.பிஸ்மி எழுதும்… களவுத்தொழிற்சாலை

1814

பத்திரிகையாளனாக திரையுலகின் ஒரு முகத்தை மட்டுமே பார்த்திருந்த எனக்கு,
படத்தயாரிப்பாளராக நான் பார்த்த திரையுலகம் அதிர்ச்சிகரமாக இருந்தது.

களவுத்தொழிற்சாலைக்கு செல்வதற்கு முன்…

திரைப்படப் பத்திரிகையாளராக கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைத்து ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளாகி விட்டதை இன்னமும் நம்ப முடியவில்லை. நேற்றுதான் வந்ததுபோலிருக்கிறது. காலம் கையைப் பிடித்துக் கொண்டு வெகு தூரம் அழைத்து வந்துவிட்டது.

இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் என்ன செய்தோம் என்று பின்னோக்கிப் பார்க்கையில் என் மீதே கோபமும், அவமானமும் ஏற்படத்தான் செய்கிறது.

ஏறக்குறைய முதல் பதினைந்தாண்டுகள் வரை கிசுகிசு, துணுக்குகள், பேட்டிகள் என ஒரு சராசரி சினிமாப் பத்திரிகையாளன் செய்கிற வேலையைச் செய்கிறவனாகவே இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது வெட்கமாகவும் இருக்கிறது.

ஏனெனில், திரைப்படப் பத்திரிகையாளனின் பணி என்பது திரைப்படங்களைப்பற்றி எழுதுவதுதானே அன்றி, திரைப்பட நடிகர், நடிகைகளைப்பற்றி, அவர்களின் விருப்பு வெறுப்புகளைப்பற்றி எழுதுவது அல்ல.

இங்கே திரைப்பட நட்சத்திரங்களுக்கு முதுகு சொறிகிற இழிவான வேலையே திரைப்படப் பத்திரிகையாளர்களின் தலையாயப் பணியாக இருக்கிறது.

துரதிஷ்டவசமாக, நானும் அந்தத் தவறையே செய்து வந்திருக்கிறேன்.

kalavu-tholirsalai_single-wrapperநான் எழுதி வந்த வெகு ஜன பத்திரிகைகளின் தேவையும் திரைப்பட நட்சத்திரங்கள் சார்ந்த செய்திகளாக இருந்ததினாலோ என்னவோ, அவர்களுக்கு புகழ்பாடுகிற பாவத்தைச் செய்ய வேண்டியதாகிவிட்டது என்று எனக்கு நானே சுய சமாதானம் செய்து கொண்டாலும், தொடர்ந்து அந்தப் பாவத்தைச் செய்ய மனம் ஒப்பவில்லை.

சமூகத்தின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் சிறு பங்களிப்பையும் செய்யாமல், பொழுதுபோக்கு என்ற பெயரில் பார்வையாளர்களுக்குக் கிளர்ச்சியூட்டுகிற, வன்முறையைத் தூண்டுகிற, மக்களின் ரசனையை மழுங்கடிக்கிற வேலைகளை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றன – தமிழ்த்திரைப்படங்கள்.

அவற்றின் உருவாக்கத்தில் அங்கமாகத் திகழ்கின்ற திரைப்படக்கலைஞர்களோ, யதார்த்த சமூகத்திலிருந்து அன்னியப்பட்டவர்களாக, தன் சுயதேவைகளை மட்டுமே முன்னிறுத்தி இயங்குபவர்களாக, திரையில் தனக்குக் கிடைத்த பொய்யான பிம்பத்தை உண்மை என  மக்களை நம்பவைப்பவர்களாக, அதன்பொருட்டு தன்னை வாழ வைக்கிற மக்களுக்கும், சமூகத்துக்கும் தீங்கிழைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களைப் போற்றிப் புகழ்ந்து எழுதியது போதும் என்ற எண்ணம் என்னை ஆட்கொண்டபோது, என் பார்வையும், எழுத்தின் நிறமும் மாறின.

அதன் தொடர்ச்சியாய், தமிழ்த்திரைப்படங்கள் குறித்தும், அதன் இயல்புகள் குறித்தும் நான் எழுதிய கட்டுரைகள், நல்ல சினிமாவை விரும்புகிறவர்களிடமும், தமிழ்சினிமா மீது அதிருப்தியுற்று, மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களிடமும் மிகப்பெரிய, எழுச்சிமிக்க வரவேற்பைப் பெற்றன.

தமிழ்த்திரைப்படங்கள் மீது எனக்குக் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், திரைப்படக்கலை மீது எனக்கு சிறிதும் வெறுப்பு இல்லை.

திரைப்படம் என்கிற அற்புதமான கலைவடிவம், இங்கே தவறானவர்களின் கையில் மாட்டிக்கொண்டு மூச்சுத் திணறிக்கொண்டிருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

எனில், அவர்களிடமிருந்து திரைக்கலை விடுதலை பெற வேண்டும், நல்ல சினிமாவை படைக்க விரும்புகிறவர்களிடம், குறிப்பாக சமூகத்துக்குப் பயன்தரும் படைப்புகளைத் தர வேண்டும் என விழைகிறவர்களிடம் வந்து சேர வேண்டும்.

எனக்குள் உருக்கொண்ட இப்படியானதொரு எண்ணம் வலுப்பெறவும், தீவிரமடையவும் காரணமாக அமைந்தது 2002 ஆம் ஆண்டில் நான் ஈடுபட்ட திரைப்படத் தயாரிப்பு.

தத்தி தாவுது மனசு என்ற அத்திரைப்படத்தின் தயாரிப்பில் இணை தயாரிப்பாளராக இருந்தாலும், ஒரு தயாரிப்பு நிர்வாகி செய்யும் அத்தனை பணிகளையும் நானே செய்தபோது, திரைப்படத்துறையின் இன்னொரு பக்கத்தைத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அதுவரை, ஒரு பத்திரிகையாளனாக திரையுலகின் ஒரு முகத்தை மட்டுமே பார்த்திருந்த, அதுதான் திரையுலகின் நிஜமுகம் என்று முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருந்த எனக்கு, படத்தயாரிப்பாளராக நான் பார்த்தத் திரையுலகம் உண்மையிலேயே அதிர்ச்சிகரமாக இருந்தது.

எங்கு திரும்பினாலும் ஏமாற்றுக்காரர்கள்!

தயாரிப்பாளர் தொடங்கி, தியேட்டரில் போஸ்டர் ஒட்டுகிறவன் வரை எத்தர்களாக, தன்னை வாழ வைக்கும் திரைப்படத்துறைக்கு துரோகம் செய்கிறவர்களாக இருந்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

கோடம்பாக்கத்தில் நடக்கும் இந்தக் களவு, சுரண்டல் திரைப்படத்துறையிலேயே பல்லாண்டுகளாக உழல்பவர்களுக்கே தெரியாது என்பது என் அதிர்ச்சியின் அளவை மேலும் அதிகரித்தது.

சினிமா என்கிற கனவுத்தொழிற்சாலை, களவுத்தொழிற்சாலையாக இருப்பது இங்குள்ளவர்களுக்கே தெரியாதபோது, சினிமாக் கனவில் எங்கிருந்தோ கோடம்பாக்கத்துக்கு வருபவர்களுக்கு எப்படி தெரியும்?

தெரிய வைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில், ஆசையில் எழுதப்பட்டதுதான் – களவுத்தொழிற்சாலை.

நக்கீரன் குழுமத்தின் சினிக்கூத்து வார இதழில் 2005 – 06 காலக்கட்டத்தில் சுமார் ஓராண்டுகள் இதை தொடராக எழுதினேன்.

அத்தொடர் வெளியானபோது, ஒவ்வொரு வாரமும் கோடம்பாக்கம் கொந்தளித்தது, கோடம்பாக்கவாசிகளின் கண்கள் கோபத்தில் சிவந்தன.

தயாரிப்பு நிர்வாகிகள் செய்யும் தகிடுதத்தங்களைச் சொன்னபோது அதிகபட்சமான எதிர்ப்பு!

கூட்டமாகத் திரண்டு பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள், சினிக்கூத்து இதழின் ஆசிரியரான நக்கீரன் கோபாலிடம் நியாயம் கேட்டார்கள்.

அதோடு, என்னைக் கண்டித்தும், நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரியும், என் வீட்டு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும், உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் கூச்சலிட்டார்கள்.

இன்னொரு பக்கம் தொலைபேசி மிரட்டல்கள்!

இப்படிப்பட்ட எத்தனையோ மிரட்டல்களை எதிர்கொண்டு களவுத்தொழிற்சாலை தொடரை எழுதி முடித்த சில மாதங்களிலேயே  போதி பதிப்பகத்தின் வெளியீடாக புத்தக வடிவம் பெற்றது அது.

தொடராக வெளியானபோது நான் எதிர்கொண்ட அனுபவத்துக்கு மாறான அனுபவங்கள் – புத்தகமாக வெளியானதும்!

ஒரு படப்பிடிப்பில் இருந்த நடிகர் நாசரை சந்திக்கச் சென்றபோது, ‘யூனிட் முழுக்க உங்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்’ என்ற முன்னுரையுடன், அங்கே படக்குழுவில் இருந்த பல பேர் களவுத்தொழிற்சாலை புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்ததை விவரித்தார் நாசர்.

ஒரு புதிய தயாரிப்பாளரிடம் நண்பர் ஒருவர் என்னை அறிமுகப்படுத்தியபோது,

‘நீங்கள்தான் ஜெ.பிஸ்மியா?’

என்று திரும்பத் திரும்ப, கேட்டுக் கொண்டே இருந்தார்.

அவரது கேள்வி எனக்கு லேசாய் கோபத்தை ஏற்படுத்தினாலும், பிறகு அவர் சொன்ன செய்தி என்னை பெருமைப்படுத்தியது.

சினிமா அனுபவமில்லாமல் படம் தயாரிக்க வந்ததும், அவர் செய்த முதல் வேலை களவுத்தொழிற்சாலை புத்தகத்தை வாங்கி வரச் சொன்னதுதான்.

இந்தத் தகவலை அவர் சொன்னது மட்டுமல்ல, தன் மேஜை டிராயரிலிருந்து களவுத்தொழிற்சாலை புத்தகத்தையும் எடுத்துக் காட்டினார்.

திரைப்படம் எடுக்க வந்த அவருக்கு அங்கே வேதமாக இருந்தது – களவுத்தொழிற்சாலை.

இதுபோன்ற பாராட்டுக்களை ஒவ்வொருமுறை சந்திக்கும் போதெல்லாம், சரியானதொரு புத்தகத்தையே எழுதி இருக்கிறோம் என்று மகிழ்ச்சியுற்றநிலையில், என் நெருங்கிய நண்பரும்,
எவனா இருந்தா எனக்கென்ன, ஆனஸ்ட்ராஜ், மிஸ்டர்.ரோமியோ, என் சுவாசக்காற்றே போன்ற படங்களை இயக்கியவருமான மறைந்த கே.எஸ்.ரவி ஒருநாள் தொலைபேசினார்.

‘நீங்கள் நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறீர்களாமே.. என்னிடம் சொன்னதே இல்லையே?’ என்று கேட்டார்.

பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருந்தாலும் நான் எந்தவொரு புத்தகத்துக்கும் இதுவரை வெளியீட்டு விழா நடத்தியதில்லை.

காரணம்.. வெளியீட்டுவிழா என்ற பெயரில் என் செலவிலேயே என்னை பாராட்டச் சொல்லி, அதைக் கேட்டு காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வதில் எனக்கு என்றைக்குமே உடன்பாடில்லை.

இப்படியொரு இயல்பு கொண்ட நான், புத்தகங்கள் எழுதியிருப்பது பற்றியும் திரையுலக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதில்லை.

இதையே திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவியிடம் பதிலாகச் சொன்னேன்.

நானும் கே.எஸ்.ரவியும் நண்பர்கள் என்று தெரியாமலே, அவருக்கு போன் செய்திருக்கிறார் நடிகர் ராஜேஷ்,

‘பிஸ்மி என்பவர் களவுத்தொழிற்சாலை என்றொரு புத்தகம் எழுதி இருக்கிறார், அதை அவசியம் படிக்க வேண்டும்’ என்று அவரிடம் சொல்லி இருக்கிறார் நடிகர் ராஜேஷ்.

அதை வைத்தே கே.எஸ்.ரவி என்னிடம் கேட்டிருக்கிறார்.

இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்..அந்த நிமிடம் வரை எனக்கும் நடிகர் ராஜேஷுக்கும் அறிமுகமே இல்லை!

இச்சம்பவம் நடந்து சில மாதங்களில்,  சக பத்திரிகையாளர் ஒருவர், ராஜேஷை சந்திக்கச் சென்றிருக்கிறார்.

அவரிடமும் இந்தப் புத்தகத்தைப் பற்றி சிலாகித்துச் சொன்ன ராஜேஷ்,

‘பிஸ்மி இந்தப் புத்தகத்தில் எழுதிய விஷயங்களை அவரை வைத்தே விஷூவலாக , ஒரு ஆவணப்படமாக பதிவு செய்ய வேண்டும்.’ என்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இந்தத் தகவலை அந்த நண்பர் என்னிடம் சொன்ன பிறகே, நான் ராஜேஷை சந்தித்தேன்.

அந்த சந்திப்பின்போது நான் புரிந்து கொண்டது இதுதான்.. களவுத்தொழிற்சாலை புத்தகத்தை ராஜேஷ் படிக்கவில்லை, வரிவரியாய் மனப்பாடமே செய்திருக்கிறார்.

அந்தளவுக்கு அதைப் பற்றி விரிவாக உரையாடினார்.

சினிக்கூத்து இதழில் தொடராக வெளி வந்த, ஏற்கனவே பல பதிப்புகள் புத்தகமாக வெளி வந்த களவுத் தொழிற்சாலை இங்கே தொடராக வெளியாக இருக்கிறது.

திரைப்படத்துறையில் நிலவும் சுரண்டல்களை அம்பலப்படுத்துவதோடு, புதியவர்களுக்கு எச்சரிகையாகவும் அமையும் என்ற நம்பிக்கையோடு…

ஜெ.பிஸ்மி

-தொடரும்