08 – ஊருக்கு ஊர் பரங்கிமலை ஜோதி தியேட்டர்கள்

2236

08 – ஊருக்கு ஊர்  பரங்கிமலை ஜோதி தியேட்டர்கள்

ஜெ.பிஸ்மி எழுதும்…

‘களவுத்தொழிற்சாலை’

கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுப்பதும், அதை பெரிய லாபத்துக்கு விற்பதும், அதிக தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்வதும் தயாரிப்பாளர்களின் சாமர்த்தியம்.  தவிர, ஒரு வகையில் அது தொழில் வளர்ச்சி, காலத்தின் கட்டாயம்!

டிஜிட்டல் சினிமாவாகிவிட்ட இன்றைய சூழலுக்கு இந்த வாதம் பொருத்தமானதாக இருக்கலாம்! ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்பம் வருவதற்கு முன், அதாவது பிலிமில் படம் காட்டிய காலத்தில் திரைத்துறையினர் செய்த காரியங்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பொன் முட்டையிடும் வாத்து கதை தெரியும்தானே?

இப்போது  நடந்த விஷயமும் கூட அதற்கு ஒப்பானதே!

அதைப்பற்றி கொஞ்சம் விரிவாகப் பேசலாம்.

நாற்பது பிரிண்ட்டுகள் போட்டு படங்களை ரிலீஸ் செய்த காலத்தில், வெற்றிப்படம் என்றால் ரிலீஸ் சென்டரிலேயே நூறு நாட்களும், சுமாரான படம் என்றால் ஐம்பது நாட்களேனும் ஓடின. அதன் பிறகும் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் வரை, ஷிப்ட்டிங்கில் மற்ற ஊர்களில், ஏதாவது ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டே இருக்கும்.

அதன் மூலம் படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்குக் கணிசமான வருவாய், லாபம் கிடைத்துக் கொண்டே இருந்தது.

தியேட்டர்களுக்கும் படத் தட்டுப்பாடு வந்ததில்லை.

இன்றைய  நிலை எப்படி இருக்கிறது?

ஏகப்பட்ட தியேட்டர்களில், படங்களை வெளியிடுவதால், பெரும்பாலான படங்கள் ரிலீஸ் சென்டர்களிலேயே ஒரு  வாரத்துக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை.

அதன் பிறகு சின்னச் சின்ன ஊர்களுக்கும், டூரிங் டாக்கீஸ்களுக்கும் ஷிப்ட்டிங்கில் போவதோடு, ஒரே மாதத்தில் அந்தப்படத்தின் அத்தியாயம் முடிந்து போகிறது.

அது வெற்றிப்படமாக இருந்தால் படத்தை வாங்கியவர் பிழைத்தார். ஒரு வாரத்துக்குள் கல்லாக்கட்டி இருப்பார்.

தோல்விப் படம் என்றால்?

நஷ்டமாகிவிட்டது என்ற புலம்பலோடு அவருக்குப் படத்தை விற்ற தயாரிப்பாளரின் அடுத்தப் படத்தை அடி மாட்டு விலைக்குக் கேட்பார்.

கொடுக்கவில்லை என்றால் ரெட்கார்ட், கட்டைப்பஞ்சாயத்து, நஷ்டஈடு என்று குடைச்சல்தான்!

வெற்றிப்படங்களின் எண்ணிக்கை அரிதாகிவிட்ட இன்றைய சூழலில் இப்படியான சம்பவங்கள் கோடம்பாக்கத்தில் அடிக்கடி நடக்கின்றன.

இன்னொரு பிரச்சனை… அற்ப ஆயுசில் படங்கள் தியேட்டர்களைவிட்டுப் போவதால் தியேட்டர்களுக்கு எல்லாம் படத் தட்டுப்பாடு!

அந்த வாரம் ஓடிய படத்தை மாற்றி விட்டு, வெள்ளிக்கிழமை புதிய படம் போடுவது என்பது சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள தியேட்டர்களில் காலம் காலமாய் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயம்.

அந்த வாரத்துக்கு படங்கள் கிடைக்கவில்லை என்கிற போது,  செக்ஸ் படங்களையும், டப்பிங் படங்களையும், ஆங்கிலப்படங்களையும் திரையிடுகிறார்கள்.

செக்ஸ் படங்களினால் சமூகத்துக்குக் கேடு ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் திரைத்தொழிலுக்கும் தீமைதான்.

வருடத்தின் பெரும்பாலான நாட்கள் செக்ஸ் படங்களைத் திரையிடும் தியேட்டர்கள் ஒரு கட்டத்தில் மக்களால், குறிப்பாக பெண்களால் புறக்கணிக்கப்படுகின்றன.

தியேட்டருக்குப் போய் படம் பார்க்கலாம் என்று அவர்கள் நினைத்தாலும், அங்கே செக்ஸ் படம்தான் ஓடும் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.

தப்பித் தவறி அந்தத் தியேட்டரில் நல்ல படம் திரையிட்டிருந்தால் கூட, அய்யோ! அது செக்ஸ் படம் ஓடும் தியேட்டராச்சே  என்று அங்கு படம் பார்க்கும் எண்ணத்தையே மாற்றிக் கொண்டுவிடுவார்கள்.

இப்படி செக்ஸ் முத்திரை குத்தப்பட்ட பரங்கிமலை ஜோதி தியேட்டரைப்போல் ஊருக்கு ஊர் இருக்கின்றன.

ஆக.. செக்ஸ் படங்களைத் திரையிடுவதால் மெல்ல மெல்ல சினிமாவின் வாடிக்கையாளர்களைத் தியேட்டர்கள், அதாவது திரையுலம் இழக்கின்றன!

இந்தப் போக்கு தொடர்வதும் தியேட்டர் என்றாலே செக்ஸ் படங்களுக்கானது என்ற அபிப்ராயம் வளர்வதும், சினிமாத்துறைக்கு நல்லதில்லையே!

-தொடரும்

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…