எந்திரன் காட்டிய வழியில் ஏகப்பட்ட தியேட்டர்கள்….

1979

07 எந்திரன் காட்டிய வழியில் ஏகப்பட்ட தியேட்டர்கள்….

ஜெ.பிஸ்மி எழுதும்…

‘களவுத்தொழிற்சாலை’

‘வார்தா புயலில் நீ வீட்டையே இழந்தாலும் பரவாயில்லை…. அரசாங்கம் தரும் நிவாரணத்தொகையை வாங்கிக் கொண்டு தியேட்டருக்கு வா!

வியாபாரம் என்பது பணம் சம்பாதிப்பதுதான்.

அதே நேரம் வாடிக்கையாளர்களின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

அப்படிப்பட்ட வியாபாரமே வெற்றியடையும்.

தன்னைப் பற்றி மட்டுமின்றி, வாடிக்கையாளர்களின் நலனைப் பற்றியும் கவலைப்படுபவனே நல்ல வியாபாரியாக இருப்பான்.

காலா காலத்துக்கும் அவனால் வெற்றிகரமான வியாபாரியாகவும் இருக்க முடியும்.

சற்றே ஆழமாக யோசித்துப்பார்த்தால்…. ஒருவகையில், வியாபாரத்தில் இது தொலைநோக்குப் பார்வை!

இந்தத் தொலைநோக்குப் பார்வையில்லாத எந்த வியாபாரமும் உருப்படாது, அந்த வியாபாரியும் உருப்பட மாட்டான்.

கலை வடிவமான சினிமாவும் இன்றைக்கு வியாபாரம்தான்.

சினிமா என்கிற வியாபாரத்தில் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் மக்கள்தான் வாடிக்கையாளர்கள்.

அவர்கள் அள்ளித்தரும் பணத்தில்தான் சினிமா வாழ்கிறது.

சினிமாக்காரர்களும் கார், பங்களா என வசதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தன்னையும், தான் சார்ந்த தொழிலையும் வாழ வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அதாவது மக்களுக்கு இந்த சினிமா வியாபாரிகள் எந்தளவுக்கு நேர்மையாக, மக்களின் நலனில் அக்கறையாகவும் இருக்க வேண்டும்?

ஒரு சதவிகிதம் கூட சினிமாக்காரர்கள் மக்களுக்கு உண்மையானவர்களாக இல்லை என்பதே இன்றையநிலை, யதார்த்தம்!

புயலடித்தால் என்ன?

வீடுகள் வெள்ளத்தில் மிதந்தால் என்ன?

அல்லது சுனாமியே வந்து மக்களை சுருட்டிக் கொண்டு போனால்தான் என்ன?

என்று நினைக்கும் சுயநலக்காரர்களாக, மக்களின் கஷ்டங்களை, சிரமங்களைப் பற்றி துளியும் சிந்திக்காதவர்களாகவே இருக்கிறார்கள்.

மக்கள் எத்தனை துயரத்தில் துவண்டு கிடந்தாலும், அவர்களிடமிருந்து பணத்தை சுரண்டுவதே சினிமா வியாபாரிகளின் நோக்கமாக இருக்கிறது.

கடந்த வாரம் அதாவது 12 டிசம்பர் 2016 அன்று வார்தா புயல் சென்னை நகரத்தை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களையும் பதம் பார்த்தது.

வார்தா புயலினால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொலைந்துபோனது.

ஆனாலும் படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டுதான் இருந்தன.

இப்போது மட்டுமல்ல, கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

சில வருடங்களுக்கு முன் தொடர் மழையால், வெள்ளக்காடாகி, உறவுகளையும், வீட்டையும், பொருட்களையும் இழந்து தவித்தார்கள் மக்கள்.

உண்ண உணவில்லாமல், ஒண்ட இடமில்லாமல் அகதிகளாய் அவதிப்பட்டு அவஸ்தைப்பட்டு கொண்டிருந்தார்கள்.

அது பற்றி எல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல், வரிசையாக படங்கள் ரிலீஸாகிக் கொண்டிருந்தன.

உதாரணத்துக்கு  2010 ஆம் ஆண்டிலும் கூட இப்படியே.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடர் மழையினால் தமிழகமே தண்ணீரில் தத்தளித்தது. ஆனாலும் இவ்விரு மாதங்களில் மட்டுமே சுமார் இருபத்தைந்து படங்கள் வெளியிடப்பட்டன.

எனில், சினிமா வியாபாரிகளின் எதிர்பார்ப்புதான் என்ன? ‘நீ வெள்ளத்தில் வீட்டை இழந்து தவித்தாலும் சரி, அரசு தரும் நிவாரணத் தொகையை வாங்கிக் கொண்டு வந்தாவது தியேட்டருக்கு வந்து பணத்தைக் கொட்டிக் கொடு! என்பதுதானே?

இயற்கைச் சீற்றங்களின்போது மட்டுமல்ல, எல்லாக் காலங்களிலும் சினிமா வியாபாரிகளின் எண்ணமும், எதிர்பார்ப்பும் இவ்வாறே இருக்கின்றன.

கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுப்பதும், அப்படி எடுத்தப் படத்தை  பல மடங்கு லாபம் வைத்து விற்பதின் அடிப்படையும் இதுவே!

அப்படி விற்கப்பட்டப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் என்ன செய்வார்கள்?

தியேட்டர்காரர்களிடம் வழக்கத்தைவிட அதிகத் தொகையை டெபாஸிட்டாக, அட்வான்ஸாக வசூல் செய்வார்கள்.

விநியோகஸ்தரிடம் பெரும் தொகையைக் கொடுத்த தியேட்டர்காரர்கள் என்ன செய்வார்கள்?

அந்தப் பணத்தை  விரைவில்  திரும்ப எடுக்க வேண்டும் என்ற வெறியில் தியேட்டர் கட்டணத்தை இஷ்டத்துக்கு உயர்த்துவார்கள்.

கடைசியில் இளிச்சவாயன் பொதுமக்கள்தான்! என்ன விலையாக இருந்தாலும் டிக்கெட் வாங்கிப் படம் பார்ப்பது அவர்கள்தானே?

இப்படியாக கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைக்கும் சினிமா வியாபாரிகளுக்கு, “முன்னைப் போல் படங்கள் நூறு நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாவதில்லை’’ என்ற அங்கலாய்ப்பு வேறு!

திருட்டு வி.சி.டி.தான் தியேட்டர் வசூலுக்கு உலை வைத்து விட்டதாகவும் வியாக்யானம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நூறு நாட்கள் வரை தியேட்டர்களில் படங்கள் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிய நிலை இன்று கனவாகப் போனதற்கு, திருட்டு வி.சி.டி. பாதிக் காரணம் என்றால் மீதிக் காரணம் இந்தக் கனவுத் தொழிற்சாலைக்காரர்கள்தான்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்புவரை அதிகபட்சமாக நாற்பது தியேட்டர்களில்தான் படங்கள் ரிலீஸாகின.

ரஜினி, கமல் போன்ற ஹீரோக்களின் படங்கள் அறுபது தியேட்டர்கள் வரை ரிலீஸ் செய்யப்பட்டன.

அதனால் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலை மோதியதோடு, நூறு நாட்களைக் கடந்து படங்கள் ஓடுவதும் சர்வ சாதாரணமான விஷயமாக இருந்தது.

உதாரணத்துக்கு, தஞ்சாவூரில் ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு படம் அங்கே உள்ள ஒரு தியேட்டரில் நூறு நாட்கள் வரை ஓடிய பிறகு இரண்டாம்நிலை நகரமான திருத்துறைப்பூண்டி போன்ற ஊர்களில் உள்ள தியேட்டருக்குப் போகும்.

இதை சினிமா பாஷையில் ஷிப்ட்டிங் என்று சொல்வார்கள்.

தஞ்சாவூரில் நூறு நாட்கள் ஓடியிருந்தாலும் திருத்துறைப்பூண்டியைப் பொறுத்தவரை அது புதுப்படம்தான்.

அதனால் அங்கேயும் வசூலைக் குவிக்கும்.

அதன் பிறகு அடுத்த நிலை ஊர்களில் உள்ள தியேட்டருக்குப் போகும்.

இன்றைக்கு என்ன நிலை?

1000க்கும் மேற்பட்ட  தியேட்டர்களில் படத்தை வெளியிடுவதுதான் இப்போது நடைமுறையாக உள்ளது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 400 தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

இத்தனைக்கும் பத்து வருடங்களுக்கு முந்தைய நிலையோடு ஒப்பிட்டால் இப்போது சுமார் ஐம்பது சதவிகிதத் தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன.

பிறகு எப்படி இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார்கள்?

சென்னை போன்ற நகரங்களில் ஒரு  கிலோ மீட்டருக்குள்ளேயே நான்கு  தியேட்டர்களில் ஒரே படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

இதைவிடக் கொடுமையும் நடக்கிறது! பெரிய ஹீரோக்கள் நடித்த படங்களை ரிலீஸ் செய்யும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்களைக் கொண்ட காம்ப்ளக்ஸ் தியேட்டர்களை தேடிப்பிடித்து ரிலீஸ் செய்கிறார்கள். ஏன்? படம் வெளியான சில நாட்களுக்கு அந்த காம்ப்ளக்ஸில் உள்ள அத்தனை தியேட்டர்களிலும் குறிப்பிட்ட ஒரே படத்தைப் போட்டு வசூலை அள்ளத்தான்!

இப்படியான குறுக்குவழியில் பல பெரிய பட்ஜெட் படங்கள் பணத்தை வாரிக் கட்டியிருக்கின்றன.

குறிப்பாக, 2010 ல், எந்திரன் படம் வெளியானபோது நடைபெற்ற சம்பவங்கள் கொள்ளை அல்ல, பகல் கொள்ளை என்று சொல்லும் அளவுக்கு சில சிம்பவங்கள் நடைபெற்றன.

அவற்றை இங்கே நினைவூட்டுவது முக்கியம் என்று தோன்றுகிறது.

சென்னைப் புறநகரில் உள்ள மாயாஜால் என்ற மல்ட்டிபிளக்ஸ் தியேட்டரில் எந்திரன் படம் ஒரு நாளைக்கு ஐம்பத்தாறு காட்சிகள் திரையிடப்பட்டது.

மாயாஜாலில் மட்டுமல்ல, சென்னையில் உள்ள பல மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கங்களில் ஏறக்குறைய இதே எண்ணிக்கையில்தான் திரையிடப்பட்டது.

அதாவது பல தியேட்டர்கள் இருக்கும் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கத்தில் எத்தனை தியேட்டர்கள் இருக்கின்றனவோ, அத்தனை தியேட்டர்களிலும் எந்திரன் படம் மட்டுமே திரையிடப்பட்டது.

எல்லாவற்றையும்விடக் கொடுமை, அதிகாலை நான்கு மணி, ஐந்து மணிக்கு எல்லாம் காட்சிகள் நடைபெற்றன.

சென்னையில் இப்படி என்றால், மற்ற ஊர்களில் எந்திரன் செய்த தந்திரம் வேறு மாதிரி.

இரண்டாம், மூன்றாம்நிலை நகரங்களில் எத்தனை தியேட்டர்கள் இருக்கின்றனவோ அத்தனை தியேட்டர்களிலும் எந்திரன் படத்தையே திரையிட்டனர்.

திருத்துறைப்பூண்டி என்ற ஊரில் மூன்று தியேட்டர்கள். அந்த மூன்று தியேட்டர்களிலும் எந்திரன் படமே ஓடியது.

2010 ல் எந்திரன் காட்டிய வழியில்தான் கடந்த ஆறு வருடங்களாக, ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்கள் நடித்த பல படங்களை அதிக தியேட்டர்களில் வெளியிட்டு பணத்தை மூட்டைக்கட்டி வருகின்றனர்.

இப்படியாக, வளைத்து வளைத்து மக்களின் பணத்தை முதல் வாரத்திலேயே மூட்டை கட்டிய பிறகும், நூறு நாட்கள் படம் ஓட வேண்டும் என்று சினிமா வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள். இதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

நாற்பது தியேட்டர்களில் ரிலீஸ் செய்த  நிலை மாறி, இன்றைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடப்படும் நிலைக்கு தமிழ்சினிமா தள்ளப்பட்டதற்கு வெளிப்படையாய் சொல்லப்படும் காரணமும்.. வி.சி.டி.தான்!

ரிலீஸான அடுத்த நாளே வி.சி.டி. வந்து விடுகிறது. தமிழ்ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் வெளியிட்டுவிடுகிறார்கள்.

அதனால்தான் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிட்டு குறுகிய நாட்களில் வசூலை அள்ளுவதாகக் காரணம் சொல்கிறார்கள்.

சொல்லப்படாத, உண்மையான காரணம் ஒன்றும் இருக்கிறது.

இப்போது வெளிவரும் பெரும்பாலான படங்கள் அரைத்த மாவையே அரைப்பதால் அவ்வளவாக மக்களை திருப்திப்படுத்துவதில்லை.

அதனால் தோல்விப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

அதை சமாளிக்க சினிமா வியாபாரிகள் கண்டுப்பிடித்த குறுக்கு வழிதான் இப்படி ஐநூறுக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்வது!

அதாவது, பத்திரிகை விமர்சனங்கள், படம் பார்த்தவர்களின் விமர்சனங்கள் (மௌத் டாக்) மூலம் படத்தின் தலை எழுத்து மக்கள் மத்தியில் பரவலாகப் பரவுவதற்குள் பணத்தை அள்ளிவிட வேண்டும் என்பதற்காகவே இப்படி  ஒரு காரியத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதனால் மக்களுக்கு மட்டும் அவர்கள் தீங்கு செய்யவில்லை, அவர்களுக்கு சோறு போடும் சினிமாத்துறைக்கும், நம் நாட்டுக்கும் தீங்கு செய்து கொண்டிருக்கிறார்கள்.

தீங்கு என்பதை விட  துரோகம் என்பது சரியான வார்த்தையாக இருக்கும்!

 

-தொடரும்

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…