அபத்தங்களும்… ஆபத்துகளும்…

1773

06 அபத்தங்களும்… ஆபத்துகளும்…

ஜெ.பிஸ்மி எழுதும்…

‘களவுத்தொழிற்சாலை’

ரஜினி, கமல், விஜயகாந்த் என்று முன்னணி ஹீரோக்களை நம்பி படங்களைத் தயாரித்து வந்த ஜீவிக்குக் கடைசியில் மிஞ்சியது தூக்குக் கயிறுதான்.

முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் எடுப்பதில் உள்ள அபத்தங்களை, ஆபத்துக் களை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

காணாமல் போனது அந்த எழுபது நிறுவனங்கள் மட்டுமல்ல, கணக்கில் வராத எத்தனையோ புதிய பட நிறுவனங்களும் இருக்கின்றன.

இந்த புதிய நிறுவனங்களில் பல, பிரபல  ஹீரோக்களை நம்பி மோசம் போனவைதான்.

அவற்றை பட்டியல் போடுவதைவிட, படத் துறையினரைப் பதற வைத்த சில சம்பவங்களை நினைவூட்டுவதே முன்னணி நட்சத்திரங்களை நம்புவது எத்தனை முட்டாள்தனம் என்பதற்கான எச்சரிகைமணியாக இருக்கும்.

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பாண்டு என்ற ஒரு தயாரிப்பாளரைப் பற்றி சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக ஒரு செய்தி அடிபட்டது.

இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இத்தனைக்கும் அவர் என்ன புதுமுகங்களை வைத்துப் படம் எடுத்தவல் இல்லை. விஜயகாந்த் – அமலாவை வைத்து ‘ஒரு இனிய உதயம்’ என்ற படத்தை எடுத்தவர்தான் அவர்.

கடைசியில் பாண்டுவின் நிலை என்ன? கடனாளியாகி, அதை அடைக்க, பரம்பரைச் சொத்துக்களை எல்லாம் விற்றும், சமாளிக்க முடியாமல், கடைசியில் பிச்சை எடுத்து வயிற்றைக் கழுவும் நிலைக்குத் தள்ளப் பட்டார்.

பிரபல தயாரிப்பாளரான ரோஜா கம்பைன்ஸ் அதிபர் காஜா மைதீனோ  வாழ்க்கையையே முடித்துக் கொள்ளுமளவுக்குப் போனார்.

இவர் தயாரித்த அத்தனை படங்களுமே முன்னணி ஹீரோக்களையும், முன்னணி இயக்குநர்களையும் வைத்து எடுக்கப்பட்டவைதான்.

இத்தனைக்கும் காஜா மைதீன் ஊதாரித்தனமானவர் கூட இல்லை. திரையுலகில் உள்ள நல்ல மனிதர்களில் ஒருவர். அவருக்கே இந்த நிலமை!

தற்கொலை முயற்சியில் காஜா மைதீன் உயிர் பிழைத்தார். ஜீவியோ மாண்டு போனார். திரையுலகம் மட்டுமல்ல ரசிகர்களும் வியந்து பார்க்குமளவுக்கு, நட்சத்திர தயாரிப்பாளராக விளங்கிய ஜீவி, ரஜினி, கமல், விஜயகாந்த் என்று முன்னணி ஹீரோக்களை நம்பித்தான் படங்களையே தயாரித்தார். கடைசியில் அவருக்கு மிஞ்சியது தூக்குக் கயிறுதான்.

இது போன்ற சம்பவங்கள் எல்லாம் புரிய வைப்பது என்ன?

முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் எடுத்தாலும் நஷ்டம் வர வாய்ப்புண்டு என்பதைத்தானே?

‘பாம்புக் கடித்துப் பிழைத்தவனும் உண்டு, எறும்புக் கடித்து செத்தவனும் உண்டு’ என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள்.

சினிமாவுக்கு அது மிகச்சரியாய் பொருந்தும்.

புதுமுகங்களை வைத்துப் படம் எடுத்து லாபம் சம்பாதித்தவர்களும் உண்டு, பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுத்த படத்தினால் நஷ்டமடைந்தவர்களும் உண்டு. இதுதான் யதார்த்தம்!

இதற்குக் கடந்த காலத்தில் எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

சமீப காலத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரான பல படங்கள் தோல்வியடைந்து, அதன் தயாரிப்பாளர்களை, தலைகுப்புற விழ வைத்திருக்கின்றன.

அதே நேரம், சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளன.

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கிய  ‘காதல்’ படம் எட்டு கோடி வரை வசூல் செய்தது. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் எண்பத்தைந்து லட்சம்தான்.

தமிழ்சினிமா வரலாற்றில் சரித்திரம் படைத்த சேது, காதல்கோட்டை, அழகி, சுப்பிரமணியபுரம், களவாணி போன்ற படங்கள் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள்தான்.

2010 -ல் வெளியான மைனா படத்தின் பட்ஜெட் ஒன்றரை கோடி. அப்படம் வசூல் செய்ததோ பதினைந்து கோடி ரூபாய்க்கு மேல்.

சில வருடங்களுக்கு முன் வசூலில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய ‘திருடா திருடி’ படத்தின் பட்ஜெட்டும் ஏறக்குறைய எண்பது லட்சம்தான். ஆனால் பதினைந்து கோடிக்கும் மேல் வசூலைக் குவித்தது. அதாவது, இரண்டாயிரம் சதவிகிதம் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. இது திரையுலகில் எந்தத் திரைப்படமும் செய்யாத சாதனை.

அது மட்டுமல்ல, படங்களின் ஏரியாவை வாங்க ஆட்களே வராத காலக்கட்டத்தில், ‘திருடா திருடி’ படத்தை வாங்க அப்போது பெரும் போட்டியே நடந்தது.

செங்கல்பட்டு ஏரியாவின் விநியோக உரிமையை வாங்கக் கடும் போட்டி ஏற்பட்டதால், கடைசியில் ஏலம் விட்டார்கள்.

இப்படி ஒரு சரித்திர சம்பவத்தை ரஜினி, கமல் நடித்த படங்கள் கூட சந்தித்ததில்லை.

இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டிருப்பதை விட, முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம்  தயாரிப்பது ஒன்றே புத்திசாலித்தனம் என்று நினைப்பவர்கள் ஒரே ஒரு கேள்வியை தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டு, அதற்கான பதிலையும் தேடினால் ஒரு விஷயம் தெளிவாகும். அவர்களும் தெளிவார்கள்.

வியாபார மதிப்பு கொண்ட, முன்னணி ஹீரோக்கள் ஏன் சொந்தப்படம் எடுப்பதில்லை? என்பதே அந்த கேள்வி!

அதானே ஏன் எடுப்பதில்லை?

முன்னணி ஹீரோக்களை வைத்துப் படம் எடுத்தால் குறைந்தது பத்து கோடி லாபம் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். அது அந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோவுக்கும் தெரியும்தானே?

நம்மை வைத்து யாரோ ஒருவர் பத்து கோடி லாபம் சம்பாதிக்கிறார். அதை நாமே தயாரித்தால் அந்த பத்து கோடியும் நமக்கே கிடைக்குமே என்று ஏன் எந்த ஹீரோவும் நினைப்பதில்லை?
காரணம்..ரிஸ்க்!

என்னதான் வியாபார மதிப்புமிக்க ஹீரோவாக இருந்தாலும், சொந்தப்படம் எடுப்பதில் உள்ள சிரமங்களையும், ஆபத்தையும் அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

அண்மையில் ஒரு பிரபல ஹீரோவை நான் பேட்டிக் கண்ட போது, சொந்தப்படம் எடுக்கும் ஆசையில்லையா? என்று கேட்டேன்.

அதற்கு அந்த ஹீரோ சொன்ன பதில் என்ன தெரியுமா?

”ஏன்..நான் சந்தோஷமா இருப்பது உங்களுக்குப் பிடிக்கலையா?” என்று சிரித்துவிட்டுச் சொன்னார்:

”அந்தத் தப்பை என்னைக்குமே நான் செய்ய மாட்டேன்.”

ஏறக்குறைய எல்லா ஹீரோக்களின் மனநிலையும் இதுதான். (விதிவிலக்காக சில ஹீரோக்கள் சொந்தப்படம் தயாரிப்பதைப்பற்றி அப்புறம் பேசுவோம்) சொந்தப்படம் எடுப்பதை ஹீரோக்கள் உலக மகா தப்பு என்று நினைக்கிறார்கள்.

அவர்களைச் சொல்லியும் தப்பில்லை. படம் எடுத்து ரிலீஸ் செய்வது என்பது போராட்டங்கள் நிறைந்த பிழைப்பாகி விட்டது – இப்போது!

சுருக்கமாகச் சொன்னால் கரணம் தப்பினால் மரணம்!

இவ்வளவும் தெரிந்தும் ஏன்.. ஆட்டு மந்தைகளைப் போல் தயாரிப்பாளர்கள் முன்னணி நட்சத்திரங்களை மொய்க்கிறார்கள்?

திரையுலகைத் தூரத்திலிருந்து பார்ப்பவர்கள் மட்டுமல்ல, திரையுலகில் இருப்பவர்களே நிதர்சணத்தைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான்.

இப்போது தொடர்ந்து பெரிய பட்ஜெட்  படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் ஒரு தயாரிப்பாளரை பல தயாரிப்பாளர்கள் பொறாமையோடு பார்க்கிறார்கள்.

காரணம்.. ஒவ்வொரு படங்களிலும் சில கோடிகள் கல்லாக் கட்டுகிறார் என்ற நினைப்பு.

அது ஓரளவுக்கு உண்மையாகவும் இருக்கலாம். அதே நேரம் அவர்  தயாரித்த சில படங்கள் மிகப் பெரிய தோல்வியடைந்ததால் அவர் அடைந்த நஷ்டத்தை எவரும் எண்ணிப் பார்க்கவே இல்லை.

இன்றைய தேதியில் அவர் சுமார் நாற்பது கோடி கடனில் இருக்கிறாராம்.

மாதத்துக்கு வட்டியாக மட்டுமே சில லட்சங்கள் கொடுப்பதாகவும் ஒரு செய்தி உண்டு!

இந்த செய்தி உண்மையாக இருக்கும்பட்சம் அவருக்கு இவ்வளவு பெரிய தொகை இழப்பு ஏற்பட்டது எப்படி?

மெகா பட்ஜெட்டில் படம் எடுப்பதையும், அவற்றில் சில படங்கள் காலை வாரியதையும் தவிர வேறு காரணம் இருக்க முடியுமா?

குறைந்த செலவில் படம் எடுத்திருந்தால்  இந்த நஷ்டம் அவருக்கு ஏற்பட்டிருக்காது அல்லவா?

-தொடரும்

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…