பெரிய ஹீரோக்களால் பெரிய நஷ்டம்!

1554

 

05 பெரிய ஹீரோக்களால்  பெரிய நஷ்டம்!

ஜெ.பிஸ்மி எழுதும்…

‘களவுத்தொழிற்சாலை’

மார்க்கெட் மதிப்பு கொண்ட முன்னணி நட்சத்திரங்களின் கால்ஷீட் கிடைத்தால் போதும், நான்கைந்து மாதங்களில் (ஒரு படத்தை எடுத்து வெளியிடும் காலம்) சில கோடிகளை லாபமாகப் பார்த்துவிடலாம் என்று பல தயாரிப்பாளர்கள் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஒரு நினைப்பில் தயாரிப்பாளர்கள் இருப்பதால்தான் மார்க்கெட்டில் உள்ள ஹீரோக்களுக்குக் கிராக்கி!

அவர்களின் கால்ஷீட்டை வாங்க கடும் போட்டியும்   நடக்கிறது.

”ஸார்.. உங்களுக்கு அந்த ஹீரோ ப்ரண்ட் தானே? அவர் இப்ப  வாங்குற சம்பளத்தைவிட ஒரு கோடி அதிகமாகவே கொடுக்கலாம். சிங்கிள் பேமெண்ட் கேட்டாலும் ஓகே. அவர்
கிட்ட ரெகமண்ட் பண்ணி கால்ஷீட் வாங்கித் தர்றீங்களா?” என்று என்னிடமே சிலர் கேட்டிருக்கிறார்கள். அந்தப்பாவத்தை மட்டும் என்றைக்கும் நான் செய்ததில்லை.

இன்றைக்கு திரையுலகில் இருக்கும் பல தயாரிப்பாளர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது.

அதற்காக, அதிக சம்பளம் கொடுப்பது உட்பட எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

எப்படியாவது கால்ஷீட்டை வாங்கிவிட வேண்டும் என்பதற்காக, பத்து கோடி சம்பளம் வாங்கும் ஹீரோவுக்கு பதினைந்து கோடி கொடுக்க முன் வருவது, முக்கால்வாசித் தொகையை கணக்கில் வராத கருப்புப் பணமாகக் கொடுப்பதாக ஆசைக் காட்டுவது என குறுக்கு வழியையும் தேடுகிறார்கள்.

அதாவது, முன்னணி ஹீரோக்களை வைத்துப் படம் எடுத்தால் நஷ்டமே வராது, லாபம் நிச்சயம் என்பது இவர்களின்  நினைப்பு! அந்த நினைப்பினால்தான் இப்படி எல்லாம் செய்து வருகிறார்கள்!

உண்மை என்ன?

முட்டாள்தனமான கணக்கு தவிர வேறில்லை இது.

முக்கால்வாசிப் படங்களின் தயாரிப்பாளர்கள் பட வெளியீட்டு அன்று பணப்பற்றாக்குறையால் (டெஃபிஸீட்) திண்டாடி, கடைசியில் கந்து வட்டிக்குப் பணம் வாங்கித்தான் படத்தையே ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

கடைசிநேரத்தில் முட்டி மோதியும் பணம் புரட்ட முடியாமல்போனதினால் சிலரால் படத்தை வெளியிட முடியாமல் போன சோகமும் பல தடவை நடந்திருக்கிறது.

எதிர்பார்த்த அளவுக்கு படம் வியாபாரமாகாததினால் ஏற்பட்ட இன்னல் இது!

இப்படி தயாரிப்பாளர்களை அல்லாட வைத்ததில் முன்னணி ஹீரோக்கள், முன்னணி இயக்குநர்களின் படங்களும் அடக்கம் என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.

சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு சில ஹீரோக்களின் படங்கள்தான் இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் வெளியாகின்றன.

அதாவது படம் தயாரிப்புநிலையில் இருக்கும்போதே  அனைத்து ஏரியாக்களும் விற்பனையாகிவிடுகின்றன.

மற்ற ஹீரோக்களின் படங்கள் பெரும்பாலும் சிரமதிசையில் சிக்கித்தான் தியேட்டருக்கு வருகின்றன.  கமல் நடித்த உத்தமவில்லன் இதற்கொரு உலகமகா உதாரணம்.

சில வருடங்களுக்கு முன், ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்திருந்த சீனியர் ஹீரோ நடித்த படங்கள் மாதத்துக்கு ஒன்றேனும் வெளியாகிக் கொண்டிருந்தன.

அதை வைத்து அவருக்கு மார்க்கெட் இருப்பதாக நினைத்து பல தயாரிப்பாளர்கள் அவரை மொய்த்தார்கள். மினிமம் கியாரண்டி ஹீரோ என்ற பெயரையும் பெற்றிருந்தார் அவர்.

வெளித் தோற்றத்துக்குத்தான் இப்படி.

நிஜமான நிலவரம் என்ன தெரியுமா?

அந்த ஹீரோ நடித்து அப்போது வெளியான எட்டுப் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தின. ஒவ்வொரு தயாரிப்பாளர்களுமே முப்பது லட்சம் முதல் ஒரு கோடி வரை இழந்திருந்தார்கள்.

குருட்டுத்தனமான குற்றச்சாட்டு அல்ல இது. அவரை வைத்து படம் எடுத்த ஒரு தயாரிப்பாளர் அப்போது சொன்ன புள்ளி விவரம்தான் இது. இங்கே இதைக் குறிப்பிடக் காரணம், அந்த ஹீரோவை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காக அல்ல!

முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்தால் கட்டுக்கட்டாக கரன்ஸிகளை அள்ளலாம் என்ற கனவில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு உண்மை நிலவரத்தை சுட்டிக்காட்டவே!

அதே காலகட்டத்தில் மற்றொரு சீனியர் ஹீரோவை வைத்து பிரபல தயாரிப்பாளர் ஒருவர் படம் ஆரம்பித்து ஏறக்குறைய ஒரு வருடம் உருண்டோடி விட்ட நிலையில் அந்தப்படம் வெளியாகவில்லை.  இதோ ரிலீஸ்  அதோ ரிலீஸ் என்று  எத்தனையோ தேதிகள் சொல்லப்பட்டு, சில வருடங்களுக்குப் பிறகே வெளியானது.

இந்தப்படத்தைத் தயாரித்த அதே தயாரிப்பாளர் வேறு முன்னணி ஹீரோக்களை வைத்து எடுத்த இரண்டு படங்களும் கூட வருடக் கணக்கில் பரணில் கிடந்த பிறகே தியேட்டருக்கு வந்தன.

இப்படிப்பட்ட சம்பவங்கள் படத்துறையில் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன.

குடும்பப்படம் எடுப்பதில் வல்லவரான ஒரு இயக்குநர், மற்றொரு இளம் இயக்குநரை வைத்து ஒரு படம்  தயாரித்தார். அன்றைய தேதியில் முன்னணி ஹீரோவாக இருந்த நடிகரை வைத்து ஆரம்பிக்கப்பட்ட அந்தப் படம் ஃபர்ஸ்ட் காப்பி ரெடியாகி, மாதக்கணக்கில் கிடப்பில் கிடந்தது. சுமார் ஒரு கோடி இருந்தால்தான் படத்தையே வெளியிட முடியும் என்ற நிலையில், வழி தெரியாமல் முழி பிதுங்கிப் போனார். கடைசியில். அவரது பரிதாப நிலையைக் கண்டு சில முன்னணி தயாரிப்பாளர்கள் ஆளுக்குக் கொஞ்சம் பண உதவி செய்து அவரது படத்தை வெளியிட வைத்தனர்.

பெரிய ஹீரோக்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் திட்டமிட்டபடி வெளிவராமல் முடங்கிக் கிடந்த, கிடக்கும் இது போன்ற எத்தனையோ சம்பவங்கள் இருக்கின்றன.

இத்தனையும் பட்டியல் போடுவதற்குக் காரணம்..பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுப்பதே பாதுகாப்பான வழி என்ற மாயையை உடைக்கவே!

இந்த மாயையை நம்பி, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைத் தொலைத்தவர்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 1995 முதல் 2010 வரையான பதினைந்து ஆண்டுகளில் சுமார் எழுபது பட நிறுவனங்கள் திரையுலகிலிருந்து காணாமல் போயிருக்கின்றன.

அப்படி, காணாமல் போன அத்தனை பட நிறுவனங்களுமே பெரிய ஹீரோக்களை, பெரிய டைரக்டர்களை மட்டுமே நம்பி, பல படங்களைத் தயாரித்த நிறுவனங்கள்தான்.!

இதில் சுவாரஸ்யமான வேதனையும் உண்டு. ஒரு ஆண்டில் அதிக எண்ணிக்கையில் படங்களைத் தயாரித்த நிறுவனம் என்ற பெருமையைப் பெற்ற நிறுவனங்களும் கூட காணவில்லை பட்டியலில் சேர்ந்ததுதான் துரதிஷ்டம்.

ஒரு ஆண்டில் அதிக எண்ணிக்கையில் படங்களைத் தயாரித்த நிறுவனம் என்ற பெருமை 1996, 1998, 1999, 2001, 2002 ஆகிய ஆண்டுகளில் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கும் கிடைத்தது. மற்ற நிறுவனங்களைப் போல் சூப்பர்குட் காணாமல் போகவில்லை. முன்பு போல் பரபரப்பாக பல படங்களைத் தயாரிக்காவிட்டாலும், படத்துறையில் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டே இருக்கிறது.

இதன் பின்னணி என்ன?

படத் தயாரிப்பில் சூப்பர்குட் பிலிம்ஸ் வகுத்துக் கொண்ட வழிமுறைதான். 1990 ல் புதுவசந்தம் படத்தைத் தயாரித்ததன் மூலம் படத்துறைக்கு வந்த அந்த நிறுவனம், முன்னணி நட்சத்திரங்களை வைத்து அவ்வப்போது ஜில்லா போன்ற சில படங்களை எடுத்தாலும் புதியவர்களுக்கே பெருமளவில் முன்னுரிமைக் கொடுத்து வந்திருக்கிறது.

இருபத்தொன்பது படங்கள் புதிய இயக்குநர்கள், இரண்டாம் நிலை ஹீரோக்கள் கூட்டணியில்  வெளியானவை. அவற்றில் பல படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தவை!

இதே காலக்கட்டத்தில் படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பல  பட நிறுவனங்கள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டன.
காரணம் வெரி சிம்பிள்!

பத்தடி உயரத்திலிருந்து கீழே விழுத்தால் சின்னக் காயத்தோடு தப்பித்து விட முடியும்.

பத்து மாடிக் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்தால்?

முன்னணி ஹீரோக்களை மட்டுமே வைத்துப் படம் எடுப்பதும் இப்படி அபாயகரமான, ஆபத்தான விளையாட்டுதான். லாபத்தின் அளவு எந்தளவுக்கு அதிகமோ, அந்தளவுக்கு நஷ்டத்தின் அளவும் மிக அதிகமானதாக இருக்கிறது.

வட்டிக்குக் கடன் வாங்கிப் படம் தயாரிக்கும் எத்தனை தயாரிப்பாளர்களால் இந்த நஷ்டத்தைத் தாங்க முடியும்?

-தொடரும்

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…