தயாரிப்பாளர்களின் இரட்டை வேடம்

1552

04 தயாரிப்பாளர்களின்  இரட்டை வேடம்

ஜெ.பிஸ்மி எழுதும்…

‘களவுத்தொழிற்சாலை’

ஒரே படத்தில் செட்டிலாகி விட வேண்டும் என்ற குறுக்கு புத்தியோடு படம் எடுக்க வருபவர்கள்தான் இப்படிப்பட்ட தவறுகளை செய்கிறார்கள்.

நட்சத்திர சம்பளம் அதிகமாகிவிட்டது என்று அவ்வப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கூட்டம் போடுகிறார்கள். கூக்குரலிடுகிறார்கள். அங்கே மைக்கைப் பிடித்து வாய்கிழியப் பேசும் தயாரிப்பாளர்களே சத்தமில்லாமல் தன் படத்துக்கு அதிக சம்பளத்தைக் கொடுத்து ஹீரோக்களின் கால்ஷீட்டை வாங்குகிறார்கள். அதோடு, நான் இவ்வளவு கொடுத்ததாக வெளியே சொல்லாதீங்க என்ற அன்புக்கட்டளை வேறு…! கறுப்பு பாதி, வெள்ளை பாதி என்று கரன்ஸிகளைக் கொட்டிக் கொடுப்பதால் எவ்வளவு கொடுத்தார் என்று எவரும், எவரையும் மோப்பம் பிடிக்க முடியவில்லை.

இது ஏதோ கற்பனையாய், தயாரிப்பாளர்களைக் கிண்டலடிக்க சொல்லும் விஷயமல்ல!

திரையுலகின் இன்றைய யதார்த்தம். பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இப்படித்தான் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் முன்னணித் தயாரிப்பாளராக இருந்தவர், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அங்கே நட்சத்திர சம்பளத்தைப் பற்றிக் கவலைப்பட்டு கண்ணீர் வடிப்பவர், இன்னொரு பக்கம், எல்லா பெரிய ஹீரோக்களிடமும் கோடிக்கணக்கில் அட்வான்ஸ் கொடுத்து கால்ஷீட்டை ரிசர்வ் செய்து வைத்திருப்பார்.

மற்றவர்களைவிட பல லட்சங்கள் அதிகமாகக் கொடுத்து ஹீரோக்களின் கால்ஷீட்டை வாங்கிப் படம்  எடுத்து வந்தார்.

அவரது படம் தொடர்பான விழா ஒன்றில், இது பற்றி அவரிடமே கேட்டேன். தன் செயலுக்கு எதேதோ சொல்லி நியாயம் கற்பித்தாரே தவிர தன் தவறை கடைசிவரை ஒப்புக் கொள்ளவே இல்லை. தயாரிப்பாளர் வர்க்கத்தின் நிலையும், நியாயமும் இப்படித்தான் இருக்கின்றன.

நான்கு படங்களை மட்டுமே தயாரித்த ஒரு தயாரிப்பாளர் முன்னணியில் இருக்கும் ஒரு இளம் ஹீரோவை வைத்து ஒரு  படத்தை ஆரம்பித்தார். அப்போது அந்த ஹீரோவின்  படங்கள் அதிகபட்சமாக நான்கு கோடிக்குள்தான் பிசினஸ் ஆகிக் கொண்டிருந்தன. முந்தையப் படங்களில் பெரிய லாபத்தை சம்பாதித்திருந்த அந்தத் தயாரிப்பாளரோ துணிந்து, ஆறு கோடி வரை செலவு செய்தார். எட்டுக் கோடிக்கு வியாபாரம் செய்து இரண்டு கோடியை கல்லாக் கட்டலாம் என்பது அவர் கண்ட கனவு!

கடைசியில் அவர் எதிர்பார்த்த விலைக்குப் படத்தை விற்க முடியவில்லை. ரிலீஸ் தேதியும் நெருங்கிவிட, வேறு வழியில்லாமல் நஷ்டத்துக்கு வியாபாரம் செய்தார். படம் வெளியாகி சுமாரான வெற்றி பெற்றது. ஆனால், அந்தத் தயாரிப்பாளரின் சகாப்தம் அதோடு முடிவுக்கு வந்தது. ஏற்கனவே சம்பாதித்த பணம் தொலைந்து போனதோடு, பல கோடிக்குக் கடனாளியாகவும் ஆனார். ஆனால் அந்தப்படம்  எட்டு கோடி வசூல் பண்ணியதாக ஒரு செய்தி பரப்பப்பட்டது.  அதை அந்தப்படத்தின் ஹீரோ நம்பிவிட…..

பிறகு நடந்ததுதான் கொடுமையின் உச்சம்.

அடுத்து கால்ஷீட் கேட்டு வந்த தயாரிப்பாளர்களிடம் அந்த ஹீரோ போட்ட முதல் கண்டிஷனே, எட்டு கோடி செலவு செய்து படம் எடுப்பதாக இருந்தால்தான் கால்ஷீட் தருவேன் என்பதுதான்..! அதற்கும் ஒப்புக் கொண்டு அந்த ஹீரோவை வைத்து சிலர் படம் எடுக்கவே செய்தார்கள்…

ஒரு தயாரிப்பாளர் செய்த தவறு, மற்ற தயாரிப்பாளர்களையும், திரையுலகத்தையும் எப்படிப் பதம் பார்க்கிறது பாருங்கள்? அடுத்து என்ன நடக்கும்? அந்த ஹீரோவின் படங்களின் பட்ஜெட் எட்டு கோடியானதும் மற்ற ஹீரோக்களும் அவரைப் போலவே, என் படத்தையும் எட்டு கோடிக்கு எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

இது, ஏதோ ஒரு ஹீரோ, ஒரு தயாரிப்பாளர் சம்மந்தப்பட்ட சம்பவம் மட்டுமில்லை. நட்சத்திரங்களின் சம்பளம் உயரும் போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்களே காரணமாக இருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களினால்தான் சில வருடங்களுக்கு முன்புவரை லட்சங்களில் இருந்த நட்சத்திர சம்பளம் இன்றைக்கு பல கோடிகளாக உயர்ந்து திரைத் தொழிலுக்கே உலை வைத்துக் கொண்டிருக்கிறது.

பல படங்களைத் தயாரித்துத் திரையுலகில் நீடித்து நிலைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இது போன்ற தவறுகளை ஒரு போதும் செய்ய மாட்டார்கள்.

ஒரே படத்தில் செட்டிலாகி விட வேண்டும் என்ற குறுக்கு புத்தியோடு படம் எடுக்க வருபவர்கள்தான் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்கிறார்கள்.

பாரம்பர்யமிக்க ஒரு பழம்பெரும் பட நிறுவனம் முன்பு தொடர்ந்து, படத்தயாரிப்பில் ஈடுபட்டது. திரையுலகின் போக்கு கவலைக்கிடமானதும் சின்னத்திரைக்குப் போன அந்த நிறுவனம் இப்போதெல்லாம் எப்போதாவதுதான் படம் தயாரிக்கிறது. அப்படி படம் எடுக்கும் போதெல்லாம் கவனமுடன் திட்டமிட்டுத்தான் காரியத்தில் இறங்குகிறது.

புதுமுகங்களை வைத்தோ, மார்க்கெட் இல்லாத ஹீரோக்களை வைத்தோ அந்த நிறுவனம் படம் எடுத்ததில்லை.

மார்க்கெட் உச்சத்தில் உள்ள ஹீரோக்களை, இயக்குநர்களை வைத்து மட்டுமே அந்த நிறுவனம் படம் தயாரிக்கும். அதாவது பணம் சம்பாதிப்பதுதான் அந்த நிறுவனத்தின் ஒரே நோக்கம்.

அதற்காக ஹீரோக்கள் கேட்கும் சம்பளத்தையும் அள்ளிக் கொடுத்து விடாது. எத்தனை கோடி சம்பளம் வாங்கும் ஹீரோவாக இருந்தாலும் அந்த நிறுவனம் நிர்ணயித்த சம்பளத்துக்கு உடன்பட்டால்தான் அவரை புக் பண்ணும். அப்படி நிர்ணயிக்கப்படும் சம்பளம் அனேகமாக அந்த  ஹீரோ வாங்கும் சம்பளத்தில் பாதியாகவோ, அல்லது அதற்கு சற்றுக் கூடுதலாகவோ இருக்கும். ஆனால் நியாயமான சம்பளமாக இருக்கும். எக்காரணத்தைக் கொண்டும் ஹீரோ கேட்ட சம்பளத்தைக் கண்ணை மூடிக் கொண்டு கொடுத்துவிடாது.

அதனாலேயே பல ஹீரோக்கள் அந்த நிறுவனத்திற்குக் கால்ஷீட் கொடுக்க விரும்புவதில்லை. சில ஹீரோக்கள் பொன்விழாக் கண்ட பெரிய நிறுவனத்தின் படத்தில் நடிப்பது நமக்கு பெருமைதானே என்ற எண்ணத்தில் அட்வான்ஸை வாங்கிவிட்டு பிறகு வேறு ஏதாவது காரணத்தைச் சொல்லி வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்ததும் உண்டு.

அதைப்பற்றி அந்த நிறுவனம் கவலைப்பட்டதில்லை. கலங்கியதில்லை. தன் கொள்கையிலிருந்து இறங்கி வந்து அவர்கள் கேட்ட சம்பளத்தைக் கொட்டிக் கொடுத்ததும் இல்லை.

ஹீரோக்கள் விஷயத்தில் மட்டுமல்ல, இயக்குநர்கள் விஷயத்திலும் இதே கறார் அணுகுமுறைதான். ஒரு இளம் இயக்குநர், பெரிய ஹீரோவை வைத்து, அந்த ஹீரோவின் சொந்தப் படத்தை இயக்கினார். படம் வெற்றி! அந்த இயக்குநரை வைத்துப் படம் எடுக்க விரும்பி அவரை அழைத்துப் பேசியது – அந்தப் பட நிறுவனம். அந்த இயக்குநரோ ஒரு கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டார். ஹீரோக்களுக்கே லட்சங்களில் சம்பளம் கொடுத்துப் பழக்கப்பட்ட அந்தத் தயாரிப்பாளருக்கு,  இயக்குநர் கோடி ரூபாய் கேட்டதும் பேரதிர்ச்சி! ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல், ”யோசிச்சு சொல்றேன் மகாராசனாப் போயிட்டு வாங்க தம்பி” என்று அவரை அனுப்பிவிட்டார்கள்.

இன்னொரு இயக்குநரும் இப்படித்தான். அந்த நிறுவனம் அணுகிய போது, ஐம்பது லட்சம் சம்பளம் கேட்டார். இருபது லட்சம் சம்பளம் தர முன் வந்தார் அந்தத் தயாரிப்பாளர். இயக்குநர் ஒப்புக் கொள்ளவில்லை. அதைப் பற்றிக் கவலைப்படாமல் வேறு இயக்குநரை வைத்து படத்தைத் தயாரித்தார். அந்தப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று ரசிகர்களை ‘ஓ போட’ வைத்தது.

சினிமா எடுப்பது கலைச்சேவை செய்ய அல்ல, லாபம் சம்பாதிக்கத்தான் என்பதில் அந்த நிறுவனம் தெளிவாக இருக்கிறது. அய்யோ! அந்த ஹீரோ நம்பர் ஒன்னாக இருக்கிறாரே.. அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுத்து, அவரை வளைத்துப் போட்டுப் படம் தயாரிக்கலாம் என்று நினைப்பதில்லை. எத்தனை பெரிய ஹீரோவாக இருந்தாலும் தங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவராக இருந்தால்தான் அடுத்த அடியை எடுத்து வைக்கும். அதனால்தான் அறுபத்தைந்து ஆண்டுகளாகியும் அந்த நிறுவனம் திரையுலகில் வெற்றிகரமாய் இன்னமும் இயங்கி வருகிறது.

அதன் அடிப்படைக் காரணம்.. படத் தயாரிப்பில் அவர்களுக்கிருக்கும் அனுபவம், கொள்கை!  இந்த ஹீரோ, இந்த இயக்குநரை வைத்து படம் எடுத்தால் இவ்வளவு ரூபாய்தான் பிசினஸ் செய்ய முடியும். ஹீரோ, இயக்குநர் சம்பளம் இவ்வளவு, தயாரிப்புச் செலவு, பப்ளிஸிட்டி செலவு இவ்வளவு, பிசினஸ் இவ்வளவு என்று பக்காவாகத் திட்டமிட்ட பிறகே தயாரிப்பில் இறங்குகிறது.

இந்தத் திட்டமிடலுக்குப் பின்னால் ஹோம்வொர்க் செய்யவும் அந்த நிறுவனம் தவறுவதில்லை. தாங்கள் திட்டமிட்டிருக்கும் ப்ராஜக்ட் பற்றி விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள், மீடியேட்டர்கள் என பலரிடமும் ஆலோசனை செய்து, அது லாபகரமாக இருக்கும் என்று தெரிந்தால்தான் சம்மந்தப்பட்ட ஹீரோவிடமும், இயக்குநரிடமும் பேச்சுவார்த்தையையே ஆரம்பிப்பார்கள்.

தாங்கள் எதிர்ப்பார்த்தது போல் அந்த ப்ராஜக்ட் லாபகரமாக இருக்காது அல்லது நஷ்டம் வரும் என்று தோன்றினால் பேசாமல் அந்த ப்ராஜக்ட்டையே கைகழுவிவிட்டு வேறு வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். இப்படி எத்தனையோ ப்ராஜக்ட்டுகளை தொடக்க நிலையிலேயே கைவிட்டும் இருக்கிறது அந்தப் பட நிறுவனம். படம் எடுத்து நஷ்டமடைவதைவிட படம் எடுக்காமலே இருப்பது லாபம் அல்லவா?

அகலக்கால் வைத்து அழிந்து போன ஒரு தயாரிப்பாளர்! திட்டமிட்டு அடி எடுத்து வைக்கும் ஒரு தயாரிப்பாளர்! இந்த இரண்டு தயாரிப்பாளர்களின் வழிகளில் எந்த வழி சிறந்தது?

தயாரிப்பாளர்கள் சிந்தித்துத் தெளிந்தால் சந்தோஷம்.!

-தொடரும்

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…