திரைப்படத்துறையின் திருவிழா வியாபாரிகள்…

1327

03 – திரைப்படத்துறையின் திருவிழா வியாபாரிகள்

ஜெ.பிஸ்மி எழுதும்…

‘களவுத்தொழிற்சாலை’

படத்தயாரிப்பில்  ஏற்பட்ட நஷ்டம்  மற்றும் கடன் பிரச்சனையால் தற்கொலையே  செய்து கொண்டார்  நட்சத்திர  தயாரிப்பாளரான  ஜீ.வி.

‘ஒரு பக்கம் நட்சத்திரங்கள், இன்னொரு பக்கம் விநியோகஸ்தர்கள் என இரண்டு  பக்கமும் மாட்டிக் கொண்டு தயாரிப்பாளர்கள் அவஸ்தைப்படுவதைப் பார்க்கும்போது, ‘பாவம்.. படம் எடுப்பதற்குள் படாதபாடுபடுகிறார்களே..!’- என்று  தயாரிப்பாளர்கள் மீது  உங்களுக்கு அனுதாபமும், பச்சாதபமும் தோன்றக்கூடும்.

கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து, அடிப் படையை ஆராய்ந்து பார்த்தால்  சினிமாத் துறையை சீரழித்ததும் இதே தயாரிப்பாளர்கள்தான் என்ற நிதர்சனம் புரியும். அவர்கள் விதைத்த, பாவத்தின் பலனைத்தான்  இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த  இருபதாண்டுகளை எடுத்துக் கொள்வோம்..!

தொடர்ந்து பல படங்களைத் தயாரித்து பிரபலமாக விளங்கிய முப்பதுக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இன்றைக்கு இருக்குமிடம் தெரியவில்லை.

ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரித்து திரையுலகை மிரட்டியவர்களும், பல வெற்றிப்படங்களைத் தயாரித்து திரையுலகினரையும், ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்களும் இதில் அடக்கம்!

90 களில் நட்சத்திர தயாரிப்பாளராக இருந்த ஜீ.வி. படத் தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் பிரச்சனையால் தற்கொலையே செய்து கொண்டார்.

ஒரே நேரத்தில் பத்துப் படங்கள், இருபது படங்கள் எடுக்கப் போவதாக  பாவ்லா காட்டிய சாய்மிரா என்ற கோபுரம் சடசடவென சரிந்து போனதையும் பார்த்தோம்.

எப்பேற்பட்ட தயாரிப்பாளராக இருந்தால் என்ன?

எத்தனை வெற்றிப் படங்களைத் தயாரித்தவராக இருந்தால் என்ன?

ஒரு சிலர் தவிர மற்றவர்களால் அதிக பட்சமாக ஐந்தாண்டுகள் கூட திரையுலகில் நிலைத்து நிற்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் ஓய்ந்து போய் விடுகிறார்கள். அல்லது சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி விடுகிறார்கள்.

அது மட்டுமல்ல, இன்றைக்கு பிஸியாக இருக்கும் தயாரிப்பாளர்கள் அடுத்த வருஷம் திரையுலகில் இருப்பார்கள் என்பதும் நிச்சயமில்லை.

அந்தளவுக்குத் தயாரிப்பாளர்களின் சினிமா வாழ்க்கை வெகு சீக்கிரத்திலேயே முடிவுக்கு வந்துவிடுகிறது.

திருவிழாவில் கடை விரித்து வியாபாரம் செய்துவிட்டு, திருவிழா முடிந்ததும் கூடாரத்தைக் காலி செய்துவிட்டுப் போகும்  திருவிழா  வியாபாரிகளின் நிலையில்தான் இருக்கிறார்கள் திரைப்படத் தயாரிப்பாளர்கள்.

தான் சார்ந்த தொழிலை திறம்பட செய்ய வேண்டும், அதற்கான அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், அதன் மூலம் தங்களின் நிறுவனத்தை உறுதியாய் நிர்மாணித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எவருக்குமே இல்லை.

ஏவிஎம், வாஹினி, பிரசாத் போன்ற பழம்பெரும் பட நிறுவனங்கள் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் திரையுகில் தங்களைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் படத் தயாரிப்பில் ஈடுபட்டது மட்டுமா?

நிச்சயமாக இல்லை!

சினிமா தயாரிப்புக்குத் தேவையான ஸ்டூடியோ, போஸ்ட் புரடக்ஷன்ஸ் யூனிட், லேப், அவுட்டோர் யூனிட் என அடிப்படைக் கட்டமைப்பில் கவனம் செலுத்தியதுதான்.

இவையே அந்த நிறுவனங்களை திரை உலகில் நிலைக்க வைத்த விஷயங்களும்!

அவர்களின் காலத்தில் எத்தனையோ பட நிறுவனங்கள் திரையுலகில் இருந்தன. அவை இன்று இருக்குமிடம் தெரியவில்லை. காரணம்.. படத்தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி உள்கட்டமைப்பை உதாசீனப்படுத்தியதால் அந்த நிறுவனங்கள் ஒரு கட்டத்தில் காணாமலே போய்விட்டன.

கடந்த கால வரலாறுகளை கவனமுடன் நோக்கினால், திரையுலகில் நிலைத்து நிற்பதற்கான வழிமுறைகளை, சூட்சுமங்களை இன்றைய தயாரிப்பாளர்கள் எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அவற்றிலிருந்து பாடம் கற்றிருந்தால் சுபிட்சமாக இருந்திருக்கவும் முடியும்.

இன்றைக்கு தொடர்ந்து படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களில் எத்தனை பேர் படத் தயாரிப்புக்குத் தேவையான சாதனங்களை, உபகரணங்களை சொந்தமாக வைத்திருக்கிறார்கள்?

அப்படிப்பட்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

காரணம்..திரையுலகில் காலாகாலத்துக்கும் நீடித்து நிற்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அரிதாகி விட்டார்கள்.

நாம் சினிமாவில் இருக்கப்போவதோ சில வருடங்கள்தான், இந்த லட்சணத்தில் தேவையில்லாமல் ஏன் சினிமாவில் முதலீடு செய்ய வேண்டும்? என்ற மனநிலையில்தான் இருக்கிறார்கள் பெரும்பாலான தயாரிப்பாளர்கள்.

அதன் காரணமாய்  அவர்களுக்கு படத் தயாரிப்பிலும் முழுமையான ஈடுபாடோ,  அக்கறையோ, கட்டுப்பாடோ இல்லாமல் போய்விட்டது. தயாரிப்பாளர்களின் இந்த மனோபாவம் எல்லா விஷயங்களிலும் பிரதிபலிக்கிறது.

அதன் தொடர்ச்சியாய் திரையுலகில் பல்வேறு பிரச்சனைகள்.

நட்சத்திரங்களின் சம்பள விவகாரத்தை எடுத்துக் கொள்வோமே..!

பத்துப்பதினைந்து வருடங்களுக்கு முன்பு…. அன்றைக்கு  நம்பர் ஒன் ஹீரோவாக இருந்த நடிகர்களின் சம்பளம் சில லட்சங்கள்தான்.

இன்றைக்கு?

குறைந்தப்பட்ச சம்பளமே கோடி!

பக்கத்து மாநிலமான ஆந்திராவிலும், கேரளாவிலும் நட்சத்திரங்களின் சம்பளம் தொடங்கி எல்லா விஷயங்களிலும் சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்படுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

ஹீரோக்களின் வர்த்தக மதிப்பை வைத்து இவ்வளவுதான் சம்பளம் என்று தயாரிப்பாளர்களே நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

அதை மீறி யாரும் அதிகத் தொகையை அள்ளிக் கொடுத்துவிட முடியாது.

தமிழில் தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் படங்களை எடுத்து வந்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சில வருடங்களுக்கு முன்  தெலுங்கு நடிகர் ஒருவருக்கு அதிக சம்பளம் கொடுத்து புக் பண்ணினார்.

விஷயம் வெளியே தெரிந்ததும் அவரை தெலுங்கில் படம் எடுக்கவே அங்குள்ள தயாரிப்பாளர்கள் அனுமதிக்கவில்லை.

இத்தனைக்கும் ஏ.எம்.ரத்னம் தெலுங்குக்காரர். ஆனாலும் தயவுதாட்சண்யம் பார்க்காமல் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த ஒற்றுமையை இங்கே நினைத்துப் பார்க்க முடியுமா?

இங்குள்ள தயாரிப்பாளர்கள் மார்க்கெட்டில் உள்ள ஹீரோவின் கால்ஷீட்டை வாங்க ‘எதையும்’ செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

வழக்கமாக வாங்கும் சம்பளத்தைவிட எத்தனை லட்சம் அதிகம் கேட்டாலும், மறுபேச்சு பேசாமல் கொடுத்துவிட்டு வருகிறார்கள்.

வெற்றிப்படம் கொடுக்கும் நட்சத்திரங்களின், சில வருடங்களுக்கு முன்பு தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களை எடுத்து வந்த ஒரு தயாரிப்பாளர், நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின்  சம்பளத்தை உயர்த்திவிடுவதையே  தன் பணியாக, பாணியாக வைத்திருந்தார் – இங்கே.

ஒரு படம் மிகப்பெரிய வெற்றியடைந்தால், அந்தப்படத்தின் இயக்குநரோ, ஹீரோவோ அடுத்தப்பட வாய்ப்புக்காக கவலைப்படவோ, காத்திருக்கவோ தேவையில்லை.

குறிப்பிட்ட அந்தத் தயாரிப்பாளர் நிச்சயமாக அவர்களைத் தேடி வந்துவிடுவார்.

அவர்களே எதிர்பார்க்காத பெரும் தொகையை சம்பளமாகத் தர முன் வருவார்.

‘முதல் படத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்தவர்களின் இரண்டாவது படத்தை நாம் தயாரித்தால், அந்தப்படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும், படத்தையும் பெரிய விலைக்கு  விற்கலாம்’ என்பது அவரது கணக்கு. இந்தக் கணக்கின்படியே தொடர்ந்து படங்களைத் தயாரித்து வந்தார் அந்தத் தயாரிப்பாளர். (சில வருடங்களிலேயே ஐம்பது கோடிக்குக் கடனாளியாகி அவர் ஓய்ந்து போனது தனிக்கதை.)

இன்றைக்கு நடிகராகவும் வெற்றியடைந்த ஒரு இளம் இயக்குநரின் முதல் படம் சில வருடங்களுக்கு முன்  வெளியானது. அந்தப்படம் தயாரிப்பு நிலையில் இருந்தபோது, ‘இந்தப்படம் வெற்றியடைந்தால் என் அடுத்தப்படத்தின் சம்பளத்தில் சரிபாதியை காணிக்கையாக செலுத்துகிறேன்’ என்று தன் இஷ்ட தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருந்தார் அந்த இயக்குநர்.

அவரது முதல்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. மேலே குறிப்பிட்ட அந்தத் தயாரிப்பாளர் அந்த இளம் இயக்குநரைத் தேடி வந்தார். ‘அடுத்தப்படத்தை எனக்கே நீங்கள் பண்ண வேண்டும்’ என்று நாற்பது லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்க முன் வந்தார்.

பதினைந்து வருடங்களுக்கு முன் நாற்பது லட்சம் என்பது  மிகப்பெரிய சம்பளம். அந்த இயக்குநருக்கு நடப்பது நிஜமா என்ற நம்பவே சில மணி நேரம் பிடித்தது.  காரணம்..’முதல் படத்தில் சில ஆயிரங்கள் சம்பளமாகப் பெற்ற நமக்கு அடுத்தப் படத்தில் ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ சம்பளம் கிடைக்கும்’ என்று நினைத்திருந்தார். அந்த எண்ணத்தில்தான் கடவுளுக்கு சரிபாதி காணிக்கைக் கொடுக்கவும் வேண்டிக் கொண்டிருந்தார். இப்படி நினைத்திருந்த அந்த இளம் இயக்குநருக்கு நாற்பது லட்சம் சம்பளம்! ‘குஷி’யாகிவிட்டார் அவர்.

தெய்வ பக்தி நிறைந்த அந்த இயக்குநர் கடவுளை ஏமாற்றாமல் இருபது லட்சத்தைக் கோயில் உண்டியலில் போட்டு விட்டு வந்தார்.

இந்த சம்பவத்தை இங்கே குறிப்பிடக் காரணம்..சம்பளத்தை உயர்த்துவதில் தயாரிப்பாளர்கள் எந்தளவுக்கு எல்லை மீறுகிறார்கள் என்பதை புரிய வைக்கத்தான்.

-தொடரும்

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…