தயாரிப்பாளர்கள் அல்ல, தலையாட்டி பொம்மைகள்

1320

02

தயாரிப்பாளர்கள் அல்ல, தலையாட்டி பொம்மைகள்

ஜெ.பிஸ்மி எழுதும்…

‘களவுத்தொழிற்சாலை’

திரைப்படங்களின் வீச்சு, நவநாகரிகம் துள்ளி விளையாடும் நகரங்களில் மட்டுமல்ல, நாகரிகம் எட்டிப் பார்க்காத சின்னச்சின்ன கிராமங்கள் வரை பரந்து விரிந்து பரவியிருக்கிறது.

பத்திரிகைகள் மட்டுமின்றி, தொலைக்காட்சி, இணையதளம் போன்ற நவீன ஊடகங்கள் ஊடுருவாத குக்கிராம மக்களின் மனதில் இன்னமும் சினிமாவே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது.

எளிதில் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மட்டுமின்றி, இமாலயப்புகழ் அடையக் கூடிய துறையாகவும் இருக்கிறது சினிமா!  இதில் ஈட்டும் வருமானத்தைவிட அதிக வருமானம், லாபம் கிடைக்கும் தொழில்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆனாலும், சினிமாவுக்கு இருக்கும் கவர்ச்சியும், புகழும் வேறு எந்தத் தொழிலுக்குமே இல்லை. சினிமாக்காரர்களைவிட அதிகம் சம்பாதிக்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் வெகு ஜனங்களிடம் அவர்களுக்கில்லாத வீச்சும், புகழ்வெளிச்சமும், ரசிகர் பட்டாளமும் சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமே உண்டு.

அதுதான் சினிமா என்ற மூன்றெழுத்தின் மந்திரம்!

ஏன் கிரிக்கெட் இல்லையா?

கிரிக்கெட்டுக்கு சமீப காலமாக நட்சத்திர அந்தஸ்து இருப்பது உண்மை. ஆனாலும், சினிமாவோடு ஒப்பிடும்போது அதன் பார்வையாளர்களும், ரசிகர்களும் மிகக் குறைவு.

நகரங்களில் வேண்டுமானால் கிரிக்கெட் வீரர்களுக்கு நட்சத்திரப்புகழ் இருக்கலாம். கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் பாமர மக்களுக்கு அவர்கள் இன்னமும் கூட அந்நியன்களே! அறிமுகமில்லாதவர்களே!

அவர்களுக்கு விஜய்யை  தெரியும். விராட் கோலியைத் தெரியாது.

ரஜினியைத் தெரியும், ராகுல் ட்ராவிட்டைத் தெரியாது.

சினிமாவில் நுழைய வேண்டும், ஜெயிக்க வேண்டும் என்பது பலரின் லட்சியமாக, கனவாக இருப்பதன் அடிப்படை இதுவே!  எனவேதான், சினிமாவில் நுழைய விரும்புகிறவர்கள் தங்கள் லட்சியத்தை அடைய பட்டினிக்கிடக்கிறார்கள். கோடம்பாக்க வீதிகளில் பைத்தியமாக அலை கிறார்கள்.

இத்தனை மகாபலம் கொண்ட சினிமாவுக்கு மற்ற துறையினரிடம் மரியாதை எப்படி இருக்கிறது? குதிரைப் பந்தயத்துக்கும், சூதாட்டத்துக்கும் என்ன மரியாதையோ அவ்வளவே என்றால் உங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்! ஆனாலும் இதுவே நிஜம்.

நம் நாட்டில் பொருளாதாரக் கொள்கை சீர்திருத்தப்பட்ட பிறகு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்யவும், முதலீடு செய்யவும் படை எடுத்தன. வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் சூப்பர் மார்க்கெட் என்ற பலசரக்குக் கடை வைப்பதற்கும்  வந்திறங்கின.

எந்த வெளிநாட்டு  நிறுவனமாவது தமிழ்சினிமாவில், அதாவது படத்தயாரிப்பில் முதலீடு செய்ய – முன் வந்திருக்கின்றனவா?

என்.ஆர்.ஐ. என்கிற வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் படம் எடுக்க வந்திருக்கிறார்களே தவிர எந்தப் பன்னாட்டு நிறுவனமும் பெரும் முதலீட்டோடு படத்துறையை முற்றுகையிடவில்லை.  – லைகாவை விடுங்கள்… அவர்களுக்கு வேறு நோக்கம் –

வால்ட் டிஸ்னியோ வந்த வேகத்தில் வாலை சுருட்டிக் கொண்டு ஓடியே போய்விட்டது.

பன்னாட்டு நிறுவனங்களை விடுங்கள்.

இங்கே, பிற தொழில்களில் கொடிக்கட்டிப் பறக்கும் இந்திய நிறுவனங்கள் கூட திரைத்தொழில் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லையே?

கொசுவர்த்தித் தொழிலில் கொடிக் கட்டிப்பறக்கும் குட்நைட் நிறுவனம் தமிழில் படம் தயாரிக்க சில வருடங்களுக்கு முன் வந்தது.

ஒரே படத்தோடு குட்பை சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டது – குட்நைட்.

பிக் பிக்சர்ஸ் என்ற பெயரில் வந்த ரிலையன்ஸும் ரிவர்ஸ் கியர் போட்டுப்போய்விட்டது. பிரமிட் சாய்மிரா என்ற பெயரில் ஏகப்பட்ட பில்ட்அப்களோடு வந்த கார்ப்பரேட் கம்பெனியும் சில வருடங்களிலேயே கடனாளியாகி, பிறகு காணாமல் போய்விட்டது. லண்டனிலிருந்து வந்த ஐங்கரன் பட நிறுவனத்தின் கதையும், கதியும் ஏறக்குறைய இதேதான்.
காரணம் என்ன?

போட்ட முதலீட்டுக்கு உத்திரவாதம், நியாயமான லாபம், தொழில் பாதுகாப்பு, எதிர்கால வளர்ச்சி என எந்தவொரு தொழிலுக்குமே அடிப்படையாய் சில விஷயங்கள் உண்டு! இவை எதுவுமே இல்லாத தொழில் சினிமாதான்! குறிப்பாக தமிழ் சினிமா.

இங்கே முதலீடு செய்யப்படும் பணத்துக்கு எந்த உத்திரவாதமுமில்லை. ஆண்டொன்றுக்கு தமிழ்சினிமாவில் மட்டும்  ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யப்படுகின்றன. எத்தனை தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கிறது? லாபத்தை விடுங்கள். போட்ட முதலீட்டை எத்தனை பேர் திரும்ப எடுக்கிறார்கள்?

ஆண்டுக்கு சராசரியாக நூறு  முதல்  நூற்றைம்பது தமிழ்ப்படங்கள் வெளி வருகின்றன. அவற்றில் அரை டஜன் படங்கள் மட்டுமே வெற்றியடைந்து, அதன் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே லாபம் சாத்தியமாகிறது.

மற்றவரெல்லாம் கொண்டு வந்த பணத்தை கோடம்பாக்கத்தில் தொலைத்துவிட்டு, அவர்களும் தொலைந்து போகிறார்கள்.

படத்துறை இப்படி பரிதாபகரமாக, பரமபதமாக இருப்பது ஏன்?

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அனைத்து அவலங்களுக்கும் தயாரிப் பாளர்களே அடிப்படைக் காரணமாக இருக்கிறார்கள்.

ஆமாம்.. இன்றைக்குத் திரையுலகம் இத்தனை பிரச்சனைகளில் சிக்கி மூச்சுத்திணறிக் கொண்டிருப்பதற்கும், நட்சத்திரங்களின் சம்பளம் அநியாயத்துக்கு உயர்ந்ததற்கும், படங்களின் தயாரிப்புச்செலவு அதிகமானதற்கும் தயாரிப்பாளர்களைத் தவிர வேறு யாரைக் குற்றம் சொல்ல முடியும்?

எல்லா தயாரிப்பாளர்களையும் இப்படி குற்றம் சாட்டவில்லை என்பதை யும் இந்த சந்தர்ப்பத்தில் அடிக்கோடிட்டு சொல்லிக் கொள்கிறேன்.

தயாரிப் பாளர்கள் இரண்டு வகை!

திட்டமிட்டு, முறையாக தொழில் செய்பவர்கள் ஒரு வகை,

எந்த வரையறையும் இல்லாமல், தான்தோன்றித்தனமாக படத்தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் இன்னொரு வகை!

துரதிஷ்டவசமாக, இந்த வகையைச் சேர்ந்தவர்களே திரையுலகில் அதிகமாய் இருக்கிறார்கள்.

முறையாக, திட்டமிட்டு தொழில் செய்யும் தயாரிப்பாளர்களில் உதாரணம் காட்டக்கூட உருப்படியான ஆள் இல்லை என்பதுதான் பரிதாபம்!

ஒரு காலத்தில் திரையுலகினரால் முதலாளிகளாக மதிக்கப்பட்டனர் தயாரிப்பாளர்கள்! முதலாளி என்பதற்கான முழுத் தகுதியும், ஆளுமையும் அவர்களுக்கிருந்தது. திரைத்தொழிலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது மட்டுமல்ல, நடிகர் நடிகைகளையும், இயக்குநர்களையும் உருவாக்குபவர்களாகவும் தயாரிப்பாளர்களே இருந்தார்கள்.

நடிகர்களை, இயக்குநர்களை  தயாரிப்பாளர்கள் உருவாக்கிய காலம் போய், இப்போது தயாரிப்பாளர்களை நடிகர்கள் உருவாக்கும் காலமாகிவிட்டது.

இப்போதெல்லாம் ஹீரோக்கள் வைத்ததே சட்டம்!

அவர்கள் யாரைக் கைக்காட்டுகிறாரோ அவரே தயாரிப்பாளர்.

இப்படிப் பட்ட தயாரிப்பாளர்கள் பெயரளவுக்கே தயாரிப்பாளர்கள்.

உண்மையில் அதிகாரமில்லாத அலங்கார பொம்மைகளே இவர்கள்!

வெறும் பொம்மை கூட இல்லை, தலையாட்டி பொம்மை!

மரியாதையாவது மண்ணாங்கட்டியாவது.. பணம் சம்பாதித்தால் போதும் என்ற மனநிலையில் வாழும் இவர்களிடம் ஒழுங்குமுறையையும், தொழில் நேர்மையையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?

பணத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் சில தயாரிப்பாளர்கள் பிறரை ஏமாற்றவும் தயங்குவதில்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான நிஜம்.

மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பது போல் தயாரிப்பாளர்கள் வழியில் சினிமாவை நம்பிப்பிழைக்கும் மற்ற பிரிவினரும் நடை போடுகிறார்கள்.

இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், ஒளிப்பதிவாளர், டான்ஸ் மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர், ஆர்ட் டைரக்டர், இசையமைப்பாளர், எடிட்டர் போன்ற டெக்னீஷியன்கள், புரடக்ஷன் மானேஜர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஏஜெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஏஜெண்ட், விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், தியேட்டர்காரர்கள், ஃபைனான்ஸியர்கள் என இதற்கு எந்தப் பிரிவினருமே விதி விலக்கில்லை.

தயாரிப்பாளர்களை ஏமாற்ற நினைக்கும் – இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள், விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், ஃபைனான்ஸியர்கள்!

விநியோகஸ்தர்களை ஏமாற்ற நினைக்கும் தயாரிப்பாளர்கள், மீடியேட்டர்கள், தியேட்டர்காரர்கள்!

தியேட்டர்காரர்களை ஏமாற்ற நினைக்கும் விநியோகஸ்தர்கள்!

ஃபைனான்ஸியர்களை ஏமாற்ற நினைக்கும் தயாரிப்பாளர்கள்!

இப்படி ஒவ்வொரு பிரிவினரும் மற்றவரை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று  மண்டையைப்  பிய்த்துக் கொண்டு மாஸ்டர் பிளான் போடுகிறார்களே தவிர, நேர்மையாய் தொழில் செய்து பிழைக்கலாம் என்று எள்ளளவும் எண்ணுவதில்லை.

தனக்கு சோறு போடும் சினிமாத்துறைக்கு விசுவாசமாக, நன்றியுடன் இருப்பவர்கள் மிகக்குறைவு.

நாம் வாழப் பிறரைக் கெடுக்க வேண்டும் என்பதே இவர்களின் கொள்கையாக, குணங்களாக இருக்கின்றன.

சினிமாத்துறைக்குள் இரண்டறக் கலந்துவிட்ட இப்படிப்பட்ட பித்தலாட்டக்காரர்களால்தான் கனவுத்தொழிற்சாலை, களவுத் தொழிற்சாலையானது.

 

-தொடரும்

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…