திரையுலகைத் திருத்தி எழுதுவோம்…

1133

01

திரையுலகைத்  திருத்தி எழுதுவோம்… 

ஜெ.பிஸ்மி எழுதும்…

‘களவுத்தொழிற்சாலை’

கனவுத் தொழிற்சாலையான சினிமாவுக்கு புதிய அர்த்தம் கற்பிக்கும் ‘களவுத் தொழிற்சாலை’ என்ற பெயரில் இது பத்திரிகையில் தொடராக வெளிவந்த போது, தலைப்பைப் பார்த்துவிட்டு திரையுலக நண்பர்கள் பலரிடமிருந்தும் ஆரம்பத்திலேயே கண்டனக் குரல்கள்…!

”பத்திரிகையாளராக இருந்தாலும் நீங்களும் படம் எடுத்தவர்தான். அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் உங்களுக்கும் தெரியும்தானே? நீங்களே சினிமாவைப்பற்றி இப்படி எழுதலாமா?” என்று கேட்டனர்.

“ஒரு படத்தின் தலைப்பை மட்டும் வைத்து அந்தப் படத்தின் கதை இதுதான் என்று தீர்மானத்துக்கு வருவது எத்தனை முட்டாள்தனமோ அதுபோல்தான் இதுவும்…!” என்று அப்போது அவர்களுக்கு பதில் சொன்னேன்.

திரையுலகை நோக்கி மண்ணை வாரித்தூற்றுவதுதான் இவருடைய நோக்கமாக இருக்குமோ என்று  நினைப்பவர்களுக்கும் இதையே என் பதிலாக… முன்குறிப்பாகச் சொல்லிக் கொள்கிறேன்!

சரி. அதென்ன களவுத் தொழிற்சாலை?

எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டியார், ஏவிஎம் செட்டியார் உட்பட எத்தனையோ ஜாம்பவான்கள் கோலோச்சிய, அவர்களின் கடும் உழைப்பால் கட்டிக் காக்கப்பட்ட தமிழ்த்திரையுலகம் என்கிற இந்தக் கனவுத் தொழிற்சாலை இன்றைக்கு எப்படி இருக்கிறது?

தூரப்பார்வைக்கு கண்ணைப்பறிக்கும் பளப்பளப்புடன் அதிசய உலகமாகத் தெரியும் திரையுலகின் உள்ளே அழுக்குத் தோற்றம்! அழுகல் நாற்றம்!

எந்நேரமும் நஷ்டம்! நஷ்டம்! என்ற கூக்குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

கூக்குரல்களின் சொந்தக்காரர்கள் வெவ்வேறு ஆட்களாக இருந்தாலும், சப்தம் என்னவோ நஷ்டம்! நஷ்டம்! என்பதாகவே நாராசமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஏன் இந்த அவலநிலை?

இதெற்கெல்லாம் எது? அல்லது யார் காரணம்?

என்பதை விலாவாரியாய் விவாதிக்கும், ஆரோக்கியமான அலசலே இந்த களவுத்தொழிற்சாலை!

இதில், சினிமாவை, சினிமாத்துறையை சீரழித்துக் கொண்டிருப்பவர்களை சிரச்சேதம் செய்வதை, சிலுவையில் அறைவதைத் தவிர்க்கவே முடியாது.

அதே நேரம், ஒட்டு மொத்தத் திரையுலகினரையும் திட்டித் தீர்க்க வேண்டும், அவர்களின் மீது திராவகம் வீச வேண்டும் என்பதல்ல என் நோக்கம்.

சீரழிந்து கொண்டிருக்கும் இந்த செலுலாய்டு தேசத்தை சீர்திருத்த, செப்பனிட, ஆக்கபூர்வமான யோசனைகளை ஆலோசனைகளை முன்வைக்க முயல்வதே  பிரதான நோக்கம்.

பல்வேறு காரணங்களால் அஸ்தமனத்தை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும் திரையுலகைப் புனரமைக்கும் முயற்சியாக, அதில் உள்ள கறைகளை, களங்கங்களை சுட்டிக் காட்டவும் உத்தேசம்.

இத்தனையும் எதற்காக? நானும், என்னைப் போன்ற லட்சக்கணக்கான மக்களும் நேசிக்கும் திரையுலகின் நன்மைக்காகவும், அதன் தலைஎழுத்தைத் திருத்தி எழுத வேண்டும் என்பதற்காகவும்..!

திரையுலக நண்பர்கள் இதைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி.

என்னால் சுட்டிக்காட்டப்படும் விஷயங்கள் திரையுலகுக்கு உபயோகமாய் அமைந்தால் கூடுதல் மகிழ்ச்சி!  இல்லை என்றாலும் வருத்தமில்லை.

சினிமா என்கிற மாய உலகத்துக்கு வரத்துடிக்கும் புதியவர்களை எச்சரிக்கை செய்ய, உஷார்படுத்த இது உதவினாலேபோதும்.

தவிர, சினிமா என்கிற கனவு உலகம் எத்தனை அழுக்கடைந்துக் கிடக்கிறது என்பதை மக்களும் தெரிந்து கொள்ளட்டுமே.

இதன் மூலம் சினிமா மீதான கவர்ச்சியும், பிரமிப்பும் சுக்குநூறாக உடைந்து நொறுங்கக் கூடிய அபாயம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

அது பற்றிக் கவலைப்படுவதைவிட சிதிலமாகி வரும் திரையுலகின் புனரமைப்பே முக்கியப் பணியாக, முதன்மைப் பணியாகத் தோன்றுகிறது – எனக்கு.

சினிமா அற்புதமான மீடியா!

தமிழ்நாட்டில் இன்றைக்கு அதன் நிலை என்ன?

ஒரு காலத்தில், மக்களின் வாழ்க்கைநிலை உயர்வுக்கு உதவும் கலை ஊடகமாக இருந்த சினிமா,  பின்னாட்களில் பொழுதுபோக்கு  சாதனமாய் தன் நிறத்தை மாற்றிக் கொண்டது. அல்லது மாற்றப்பட்டது. அந்த நிலையிலிருந்தும் முற்றிலுமாக மாறி, பின்னர் முழுக்க முழுக்க வியாபாரம் என்றானது.

அற்புதமான திரைக்கலை, இன்றைக்குக் கலையாகவும் இல்லாமல், பொழுதுபோக்குச் சாதனமாகவும் இல்லாமல், வியாபாரமாகவும் இல்லாமல் சுயம் இழந்து, முகம் இழந்து, முகவரி இழந்து கிடக்கிறது.

இப்படி, தமிழ்த் திரையுலகம் நசிந்து, நாசமாகி, கவலைக்கிடமாகி, கடைசி மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம்?

திருட்டு டி.வி..டி., கேபிள் டி.வி., கதாநாயக நடிகர்களின் சம்பளம் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

திரை உலகினர் சுட்டு விரல் நீட்டிக் குற்றம் சொல்லும் இது போன்ற காரணங்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்து ஒதுக்கிவிட முடியாதுதான். அவர்களின் ஆதங்கத்தில் நிறைய நியாயமும், அர்த்தமும் இருப்பது உண்மையே.

திரையுலகின் தீராத தலைவலியாக, திருட்டு டி.வி..டி. இருப்பது உண்மை! படம் பூஜை போடும்போதே திருட்டு டி.வி..டி..க்கான லேபிள்கள் தயாராகி விடுவதையும், படம் வெளி வந்த அன்றே திருட்டு டி.வி..டி. விற்பனைக்கு வந்து விடுவதையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?

புறநகர் பகுதிகளிலும் கிராமங்களிலும் கேபிள் டி.வி.யில் புதுப்படங்கள் இடையூறுகள் ஏதுமின்றி எளிதாய் ஒளிபரப்பு செய்யப்பட்டு, வெற்றிநடைபோட்டுக் கொண்டிருக்கின்றன.

தியேட்டர்களிலோ படம் ரிலீஸான மறுநாளே ‘இப்படம் இன்று கடைசி’ என்று போஸ்டர் ஒட்ட வேண்டிய துயரநிலை.

திருட்டு வி.சி.டி. மற்றும் கேபிள் டி.வி.யில் புதுப்படங்கள் பார்த்து ருசி கண்டுவிட்ட மக்கள் தியேட்டருக்கு வருவதே இல்லை.

அதனால் கோடிகளைக்கொட்டி படம் எடுத்த தயாரிப்பாளர்களும், அந்தப் படங்களைப் பெரும்தொகை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களும் போட்ட முதலீட்டை மட்டுமல்ல,  முகவரியையும் தொலைத்துவிட்டு  நிற்கிறார்கள் – நடுத்தெருவில்…!

இன்னொரு பக்கம்… கதாநாயக நடிகர்கள், நடிகைகளின் அளவுக்கு அதிகமான சம்பளம்!

திரையுலகின் வீழ்ச்சிக்கு நட்சத்திர சம்பளம் மிக முக்கியமான காரணமாய் இருக்கிறது.

படத்தின் பட்ஜெட்டில் முக்கால்வாசித்தொகையை இவர்களுக்கே சம்பளமாக அழுதுத் தொலைக்க வேண்டியிருக்கிறது என்று புலம்பும் பல தயாரிப்பாளர்களை எனக்குத் தெரியும்.

சில வருடங்களுக்கு முன் மேடை கிடைத்தபோதெல்லாம், கதாநாயக நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது பற்றி ஆவேசமாய் முழங்கினார் இயக்குநர் சேரன். பின்னர், அவரே கதாநாயகனாக நடித்த ஆட்டோகிராஃப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதும், அடுத்தப் படத்தில் நடிக்க ஒண்ணே முக்கால் கோடி சம்பளம் கேட்டதாக அப்போது புலம்பினார் ஒரு தயாரிப்பாளர்.

2010 ஆம் ஆண்டு வெளியான களவாணி படத்தில் நடிக்க நடிகர் விமல் வாங்கிய சம்பளம் வெறும் நான்கு லட்சம். அந்தப்படம் வெற்றியடைந்ததும் அடுத்தப்படத்தில் நடிக்க அவர் கேட்டது நாற்பது லட்சம்.

கடந்த கால உதாரணம் இப்படி என்றால்… சமகால உதாரணம் இன்னும் அதிர்ச்சி.

ஒரே ஒரு வெற்றிப் படத்தில் நடித்தவர்களே அடுத்தப் படத்திற்கு நாற்பது லட்சம், ஒண்ணே முக்கால் கோடி என்று சம்பளம் கேட்கும்போது, பல வெற்றிப் படங்களில் நடித்தவர்கள் எவ்வளவு கேட்பார்கள்?

இன்றைய தேதியில் ரஜினியின் சம்பளம் சுமார் 75 கோடியாக இருக்கிறது. பிறமொழி உரிமையில் பங்கு, மெர்ச்சன்டைஸில் கிடைக்கும் பங்கு என பிற வருவாய் சேர்த்தால் 100 கோடியை எட்டும்.

அவரது போட்டியாளரான கமல் 30 கோடியை சம்பளமாக முழுசாக வாங்கிக் கொள்கிறார். அதோடு, பிறமொழி ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், வெளிநாட்டு ரைட்ஸ் ஆகியவற்றிலும் கணிசமான தொகையை கறந்துவிடுகிறார்.

இவர்களிருவருக்கும் அடுத்த இடத்தில் இருக்கும் விஜய், அஜித்துக்கு 30 கோடி மொய் எழுதினால்தான் கால்ஷீட். சூர்யா, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் 25 கோடிக்கு குறைவில்லாமல் சம்பளம் வாங்குகிறார்கள்.

மார்க்கெட் மதிப்புமிக்க இவர்களின் சம்பளம் இப்படி என்றால்…  ஓரளவு மார்க்கெட் உள்ள சிம்பு போன்ற சில்லறை நடிகர்கள் என்றால் குறைந்த பட்சம் ஐந்து கோடி வாங்குகிறார்கள்.

சம்பள விஷயத்தில் கதாநாயக நடிகர்கள் மட்டுமல்ல, கதாநாயகி நடிகைகளும் சளைத்தவர்கள் இல்லை.

குழைந்து, கும்பிடுப்போட்டு, சிரித்து, மயக்கி முதல் பட வாய்ப்பைப் பெற்று, அந்தப்படம் ஹிட்டானதும், அதே நடிகை, அதே தயாரிப்பாளரிடம்,  ஒரு கோடி சம்பளம் கேட்டு ஹார்ட் அட்டாக் வர வைக்கிறார்.

சரி.. தமிழ்த் திரையுலகின் நசிவுக்கு திருட்டு டி.வி.டி.யும், கேபிள் டி.வி.யும், கதாநாயக நடிகர், நடிகைகளின் சம்பளம் மட்டும்தான் காரணமா?

ஊமைப்படநிலையிலிருந்து பேசும்படமாய் புதிய பரிமாணத்தை, பரிணாமத்தைத் தொட்ட தமிழ் சினிமா, சுமார் இருபத்தைந்து வருடங்கள் வரை சீரும், சிறப்புமாய், ஆரோக்யமாகவே இருந்தது. காரணம் அப்போது திரையுலகில் இருந்தவர்களின் நேர்மையும், தொழில் பக்தியும்.

இன்றைக்கு?

தொழில்பக்தி மட்டுமல்ல தொழில் பத்தியும் தெரியாதவர்கள்தான் கோடம்பாக்கத்தில் அதிக எண்ணிக்கையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமா எக்கேடு கெட்டால் நமக்கென்ன?

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வோம் என்று நினைக்கும் குறுக்குபுத்திக்காரர்களின் கூட்டமும் அதிகமாகிவிட்டது.

தவிர, ஏமாற்றிப் பிழைப்பவர்களும் இங்கே எக்கச்சக்கம் பேர்!

இவர்கள் சினிமாவை எந்நேரமும் பணம் கொட்டும் ஏ.டி.எம். இயந்திரமாகவே பார்க்கிறார்கள்.

திரைத்தொழிலின் வரலாறும், அதன் தொன்மையும், அதன் சக்தியையும் உணராத இவர்களால் திரையுலகம் எப்படி உருப்படும்?

இப்படிப்பட்ட மனோபாவம் கொண்ட ஆட்கள் நீக்கமற நிறைந்திருக்கும் தமிழ்த்திரைப்படத்துறை இத்தனை காலம் அழிந்து போகாமல் இருப்பதே  ஆச்சர்யம்தான்.

அதுதான் சினிமாவின் மகத்துவம், மகிமை!

-தொடரும்

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…