விஷால் பற்றிய வண்டவாளங்களை வெளியிடுவேன்… – கலைப்புலி தாணு வைத்த சஸ்பென்ஸ்

544

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வருகின்றனர்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.சிவா சில நாட்களுக்கு முன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு, கலைப்புலி எஸ். தாணுவின் ஆதரவு பெற்ற ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்தார்.

டி. சிவாவைத் தொடர்ந்து மற்றொரு போட்டியாளரான கலைப்புலி ஜி சேகரனும் நேற்று போட்டியிலிருந்து விலகி, ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்தார். இதன் காரணமாக விஷால் அணியின் வெற்றி கேள்விக்குறியாகி இருப்பதோடு, ராதாகிருஷ்ணன் வெற்றிபெறும் சூழலும் உருவாகி உள்ளதாக திரையுலகில் பேச்சு அடிபடுகிறது.

கலைப்புலி ஜி சேகரன் மற்றும் ஆதரவாளர்கள் திடீர் திருப்பமாகப் போட்டியிலிருந்து விலகி ‘தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி’ ஆதரவு தெரிவித்தை அறிவிக்கும் நிகழ்ச்சியில், “தன்னை வைத்துப் படமெடுத்த 12 தயாரிப்பாளர்களை நடுத்தெருவில் நிறுத்தியவர் விஷால்” –  என்று கலைப்புலி எஸ். தாணு ஆவேசமாகப் பேசினார்.

அதற்கு ஆதாரமாக விஷாலுக்கு நாலரை கோடி  சம்பளம் கொடுத்து சமர் படத்தை எடுத்து பல கோடி நஷ்டப்பட்ட தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடுவுக்கு போன் செய்து பத்திரிகையாளர்கள் முன்  பேசினார்.  ரமேஷ் நாயுடு செல்போனில் பேசியதை ஸ்பீக்கரில் ஒலிபரப்பினார். அப்போது பேசிய  தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடு, சமர் பட தயாரிப்பின்போது விஷால் தன்னை எப்படி எல்லாம் சாகடித்தார் என்பதை கண்ணீருடன் விவரித்தார்.

“நூற்றுக் கணக்கான துணை நடிகர்கள் உடன் சமர்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பாண்டிச்சேரியில் படமாக்கினோம். கனல் கண்ணன்தான் ஸ்டண்ட் மாஸ்டர். கடைசி நாள் படப்பிடிப்பு, பூசணிக்காய் உடைக்க வேண்டும் என்பதால் நான் மதிய உணவு இடைவேளையின்போது என் மனைவி, மகன் என்று குடும்பத்துடன் அங்கே போனேன். ஆனால் தயாரிப்பாளர் இங்கு வந்தால், இருக்க மாட்டேன் நடிக்க மாட்டேன் என்று விஷால் அங்கிருந்து கிளம்பி வெளியேறி விட்டார். அதனால் அன்றைய படப்பிடிப்பு நின்று விட்டது.

இத்தனைக்கும் அவருக்கு நான் சம்பளம் முழுவதையும் கொடுத்து விட்டேன். கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டுப் படம் எடுக்கும் தயாரிப்பாளரின் நிலைமையைப் பாருங்கள். நான் படப்பிடிப்புக்கு வரக் கூடாதாம். அந்த ஒரு படத்தோடு தெலுங்கு சினிமாவுக்குப் போய் விட்டேன். எனக்கு நேர்ந்த அவமானம் வேறு எந்த தயாரிப்பாளருக்கும் வரக்கூடாது.” என்றார் குமுறலுடன்.

பிறகு தாணு தொடர்ந்து பேசும் போது, ”பார்த்தீர்களா ஒரு தயாரிப்பாளரின் நிலைமையை? இது என்ன கேலிக் கூத்து?  தயாரிப்பாளர் என்றால் உனக்குக் கிள்ளுக்கீரையா?  விஷால் எதற்கு உனக்கு இந்த  பதவி வெறி..? ஏன் இந்த நாற்காலி வெறி..?  நீ ஒரு அழிவு சக்தி? ” என்று போட்டுத்தாக்கிய தாணு,  “விஷால் உன்னுடைய வண்டவாளங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன. போட்டோ ஆதாரத்துடன் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிடுவேன்.” என்றும் சஸ்பென்ஸ் வைத்தார்.

வண்டவாளம் என்றால்?

டேஷ் லட்சுமி விவகாரமா? லட்சுமி டேஷ் விவகாரமா?

-ஜெ.பிஸ்மி