கடாரம் கொண்டான் படம் லாபத்தைக் கொடுக்குமா?

32

கமல் த்ரிஷா நடித்த ‘தூங்காவனம்’ படத்தை தொடர்ந்து ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி கடந்தவாரம் வெளியாகியுள்ள படம் ‘கடாரம் கொண்டான்’.

விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபிஹாசன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் இந்த படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

தஞ்சாவூரில் உள்ள புகழ்பெற்ற பெரிய கோவிலை கட்டிய ராஜராஜா சோழனுக்கு மகனாக பிறந்த ராஜேந்திர சோழன் மலேசியாவில் உள்ள கெடா பகுதி வரை போர் தொடுத்து, அதில் வென்று அந்த பகுதியை தன் கைவசப்படுத்தினார்.

அதனால் அவருக்கு ‘கடாரம்கொண்டான்’ என்று பட்டம் வழங்கப்பட்டது.

கடாரம் கொண்டான் படத்தில் வீரமிக்க கேரக்டரில் விக்ரம் நடித்திருப்பதால் இந்த படத்திற்கு கடாரம் கொண்டான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆனால் படத்தின் கதைக்கும் கடாரம் கொண்டான் என்ற தலைப்புக்கும் யாதொரு தொடர்புமில்லை.

அதுமட்டுமல்ல, மலேஷிய காவல்துறையை இழிவுபடுத்தும்படியான காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக மலேஷியாவின் தணிக்கைக்குழு கடாரம் கொண்டான் படத்துக்கு தடைவிதித்துள்ளது.

மலேஷியாவில் படம் வெளியாகாமல்போனதால் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனத்திடம் ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் படத்தை தயாரித்து வாங்கி, விநியோகம் செய்த ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்நிறுவனத்துக்கும் தமிழ்நாட்டின் பல ஏரியாக்களில் உள்ள முக்கியமான விநியோகஸ்தர்களுக்கும் இடையில் பிரச்சனைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே, கடாரம் கொண்டான் படம் லாபத்தைக் கொடுக்க வாய்ப்பில்லை என்கின்றனர் திரையுலகினர்.