காட்டு அரசியல் பேசும் கடம்பன்

578

புது வசந்தம் தொடங்கி பல வெற்றிப்படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ்’ பட நிறுவனத்தின் கடந்த சில வருடங்களாக  தொடர்ச்சியாக படங்களை தயாரிப்பதில்லை.

தற்போதைய வியாபார அணுகுமுறையில் அதிருப்தியுற்று அவ்வப்போது மட்டுமே படங்களை தயாரிக்கிறார் ஆர்.பி.சௌத்ரி.

அவரது பேனரில் 89 -ஆவது தயாரிப்பாக உருவாகியுள்ள படம் ‘கடம்பன்’.

ஆர்யா, கேத்ரின் தெரெசா இணைந்து நடித்துள்ள இந்த படத்தை ‘மஞ்சப்பை’ பட புகழ் ராகவா இயக்கியுள்ளார்.

‘கடம்பன்’ படத்தில் ஆர்யா, கேத்ரின் தெரெசாவுடன் ‘குண்டே’ ஹிந்தி படப் புகழ் தீப்ராஜ் ராணா வில்லனாக நடித்துள்ளார்.

மீகாமன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகவிருக்கிற ‘கடம்பன்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மனம்விட்டுப் பேசினார்…

‘‘என்னுடைய கேரியரில் நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு நடித்த படம் ‘கடம்பன்’தான். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க காட்டுக்குள்ளேயே நடைபெற்றது. தாய்லாந்த் நாட்டில் கிட்டத்தட்ட 70 யானைகளை வைத்து இப்படத்தின் இறுதி காட்சிகள் படமாக்கபட்டது. அந்த காட்சியை எடுக்கும்போது நாங்கள் எல்லோரும் மிகவும் கஷ்டப்பட்டோம். இன்றைய சூழ்நிலையில் நாட்டுக்கு மிகவும் தேவையான நல்ல ஒரு கருத்தை சொல்லு படமாக ’கடம்பன்’ படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ராகவா. அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் காடுகளை அழிக்கத் தொடங்கியுள்ளதைப் பற்றி பேசும் படம் இது’’

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி பேசும்போது, ‘‘எங்கள் நிறுவனத்தின் 89-ஆவது தயாரிப்பாக ‘கடம்பன்’ உருவாகியுள்ளது. ‘ஜில்லா’ படத்திற்கு பிறகு மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் இது. இந்த படம் வெளியாகிற அதே நாளில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘சிவலிங்கா’வும் ரிலீசாகிறது. எங்கள் ’மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை ரிலீஸ் செயவதற்காக ’சிவலிங்கா’ படக் குழுவினர் எங்களுக்கு நிறைய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஆனால் இப்போது அவர்களது ‘சிவலிங்கா’ படத்துடன் ‘கடம்பன்’ படத்தை வெளியிடுவதை தவிர்க்க முடியவில்லை. காரணம், இந்த தேதியை விட்டால் வேறு தேதி கிடையாது. அதுவும் இல்லாமல் கிட்டத்தட்ட இதே ஜானரில் ’ஜெயம்’ ரவி நடித்துள்ள ‘வனமகன்’ படமும் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. ஒரே ஜானர் படங்கள் அடுத்தடுத்து வந்தால் நன்றாக இருக்காது! அதனால் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி இந்த படத்தை வெளியிடுவதை தவிர வேறு வழியில்லை!” என்ற ஆர்.பி.சௌத்ரி அடுத்து சொன்னதுதான் ஹைலைட்.

“சிவலிங்கா’, ‘கடம்பன்’ இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற வேண்டும்’’ என்றார்.

‘கடம்பன்’ படத்தை ஆர்யாவின் ‘The Show People’ நிறுவனம் வெளியிடுகிறது.