ரஜினி ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி….! – கன்ஃபார்ம் ஆனது… கபாலி ரிலீஸ் தேதி…!

925

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தின் போஸ்ட்புரடக்ஷன்ஸ் வேலைகளை ஏறக்குறைய இறுதிக்கட்டத்துக்குக் கொண்டு வந்துவிட்டார் இயக்குநர் பா.ரஞ்சித்.

இன்னும் சில நாட்களில் கபாலியின் ஒட்டுமொத்த வேலைகளும் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

ஆக… கபாலி படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட கபாலி படத்தின் டீஸர் படைத்த சாதனைகளும், முறியடித்த சாதனைகளும் எக்கச்சக்கம்.

கபாலி டீஸர் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாக, ரஜினி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் கபாலி படத்தை பார்க்க வேண்டும் என்ற பேராவல் எகிறிகிடக்கிறது.

ரஜினியின் ரசிகர்களின் தவிப்பை மேலும் அதிகமாக்குவதுபோல், கபாலி படத்தின் ரிலீஸ் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

கபாலி ரிலீஸ் பற்றி அதிகாரபூர்வமாக நாங்கள் அறிவிக்கும் வரை அமைதியாக இருங்கள் என தயாரிப்பாளர் தாணு கேட்டுக் கொண்ட பிறகும் கூட வதந்திகள் ஓயவில்லை.

சமூகவலைத்தளங்களில் ஆளாளுக்கு கபாலி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகிறார்கள்.

முதலில் ஜூலை 7ஆம் தேதி ‘கபாலி’ திரைப்படம் வெளியாகும் என்று வதந்தியை பரப்பினார்கள்.

பிறகு, மே இறுதியில் பாடல்கள், ஜூன் முதல் வாரத்தில் படம் ரிலீஸ் என்ற தகவலும் உலா வந்தது.

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக… ‘கபாலி’ படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதை வழக்கமான வதந்தி என்று ஒதுக்கிவிட முடியாத அளவுக்கு கூடுதல் தகவல்களும் கிடைத்துள்ளன.

அதாவது ரஜினியின் ஒப்புதலுடன் ஜூலை 1 ஆம் தேதி கபாலி படத்தின் ரிலீஸ் என்பதை இறுதி செய்துவிட்டாராம் கலைப்புலி தாணு.

தமிழகத்தில் மட்டும் குறைந்தபட்சம் 800 தியேட்டர்களில் கபாலி படத்தை வெளியிட வேண்டும் என்பது தாணுவின் டார்கெட்.

எனவே இப்போதே தன் பரிவாரங்களை களத்தில் இறக்கிவிட்டு தியேட்டர்களை ‘புக்’ பண்ண சொல்லிவிட்டாராம்.

தியேட்டர்களை இறுதி செய்த பிறகு கபாலி ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர்.