கார்ப்பரேட்களிடம் அடகு வைக்கப்பட்ட கபாலி…. ரசிகர்கள் கொதிப்பு…

878

இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 25 வருடங்கள் இருக்கும்.

மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கமல் சொன்னாராம்….

“ரஜினியைவிட எனக்கு திறமை இருக்கு… பர்ஸனாலிட்டி இருக்கு. அவரை விட நல்லா நான் டான்ஸ் ஆடுவேன். ஆனாலும் என்னைவிட ரஜினிக்குத்தான் மாஸ் அதிகமா இருக்கு. இதுக்கு என்ன காரணம் தெரியுமா? அவருடைய தோலின் நிறம்தான். ரஜினி கருப்பா இருக்கிறதாலேயே தமிழ்நாட்டு மக்கள் அவரை நம்ம ஆளுன்னு நினைக்கிறாங்க. எனக்கு என்னோட வெள்ளைத்தோல்தான் எதிரி. தோல் வெள்ளையா இருக்கிறதால என்னை வெள்ளைக்காரனைப்போல் மக்கள் பாக்கிறாங்க”

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டபோது, ரஜினியின் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாத கமலின் வயிற்றெரிச்சல் என்றே நினைத்தேன்.

25 வருடங்களுக்கு முன் ரஜினியைப் பற்றி கமல் சொன்னது ஏனோ இன்றைக்கு திடீரென மனதில் மின்னல் அடித்தது.

ரஜினியின் வெற்றிக்கு அவருடைய உழைப்பு, திறமையைவிட அவரது தோலின் நிறம்தான் காரணம் என்று அர்த்தம்தொனிக்கிற கமலின் கருத்துக்குள் இன்னொரு உண்மையும் ஒளிந்திருக்கிறது.

ரஜினியின் வெற்றிக்கு  கருப்பான அவரது நிறமும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்பதே அது.

அந்த நிறம்தான் அடித்தட்டு ஏழை எளிய மக்களை இவர் நம்ம ஆள் என்று எண்ண வைத்தது.

அந்த எண்ணம்தான் நாளடைவில் ரஜினி மீது வெறியாக, வெறித்தனமான அபிமானமாக அவர்களுக்குள் உருவெடுத்தது.

ஏழை எளிய அடித்தட்டு மக்களை ரஜினியை நோக்கி அணிதிரள வைத்தது.

ரஜினி படம் வெளியாகும் தினத்தை தீபாவளியாக.. பொங்கலாக  எண்ணி கொண்டாடவும்… குதூகலிக்கவும் வைத்தது.

ரிக்ஷா ஓட்டிய பணத்தில், ஹோட்டலில்  சர்வர் வேலை பார்த்த சம்பளத்தில், வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் அடித்தட்டு ரசிகன் வைத்த கட்அவுட்டும், கட்டிய கொடி தோரணங்களும்தான் ரஜினி படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளை திருவிழா நடக்கும் இடங்களாக மாற்றின.

அப்பேற்பட்ட ரசிகனுக்கு கபாலி படத்தை பார்க்கும் வாய்ப்பு இப்போது மறுக்கப்பட்டிருக்கிறது.

கபாலி படத்தை வாங்கிய ஜாஸ் சினிமாஸ், ஏ.ஜி.எஸ். என்கிற கார்ப்பரேட் கம்பெனிகள் கபாலி படத்தை ரஜினி ரசிகன் பார்க்க முடியாதபடி சதி செய்திருக்கின்றன.

இன்போசிஸ், காக்னிசென்ட், ஏர்டெல் போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒவ்வொரு காட்சியையும் மொத்தமாக விற்றுவிட்டனர். அதாவது கபாலி படத்தை மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் பார்க்க முடியாதபடி அனைத்துக்காட்சிகளையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்த்துவிட்டனர்.

சென்னையில் உள்ள ஏறக்குறைய எல்லா தியேட்டர்களிலும் இதுதான் நிலைமை.

காசி தியேட்டரில்  இன்று அதிகாலை படம் பார்க்கக் காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு  டிக்கெட் வழங்கப்படவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்கப்பட்டுவிட்டதாக சொல்லப்பட கடுப்பாகிவிட்டனர் ரஜினி ரசிகர்கள்.

நாங்கள் கஷ்டப்பட்டு கொடி தோரணம் கட்டுவோம். டிக்கெட்டை கார்ப்பரேட் காம்பெனிக்கு விக்கிறீங்களா? என்று ஆவேசமடைந்த ரஜினி ரசிகர்கள் காசி தியேட்டரில் வைத்திருந்த பேனர்களை எல்லாம் அவிழ்த்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

மகிழ்ச்சி.