இணையத்தில் வெளியான கபாலி…. – ரசிகர்களை தப்பு செய்ய தூண்டியது யார்?

1175

கபாலி படத்துக்குக் கிடைத்த அதீத விளம்பரமே அந்தப் படத்துக்கு திருஷ்டியாகிவிட்டது.

இன்னொரு பக்கம், கபாலி குறித்த எதிர்மறையான கருத்துக்களும், விமர்சனங்களும் பரவ ஆரம்பித்தன.

குறிப்பாக, இணையதளங்களில் கபாலி படத்தை வெளியிட முடியாதபடி நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தாணு தடை உத்தரவு வாங்கிய விஷயம் திரைத்துறையினராலேயே கடும் விமர்சனத்துக்குள்ளானது.

மற்ற தயாரிப்பாளர்களின் படத்தைப் பற்றி கவலைப்படாத தாணு தன்னுடைய படத்தைக் காப்பாற்ற எப்படி எல்லாம் மெனக்கெடுகிறார் என்று அவரை அர்ச்சிக்க ஆரம்பித்தனர்.

வேறு சிலரோ, எத்தனை நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெற்றாலும் இணையதளங்களில்  சட்டவிரோதமாக படங்களை டவுன்லோடு செய்வதை தடுக்கவே முடியாது என்று கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ‘கபாலி’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் இந்த படம் திரைக்கு வந்தது.

எதிர்பார்த்ததுபோலவே கோர்ட்டின் தடை உத்தரவை மீறி ‘கபாலி’ படம் இணையதளங்களில் வெளியானது.

இது ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவர்களால் அதை தடுக்க முடியவில்லை.

நீங்கள் கோர்ட்டுக்குப் போனாலும் எங்களை ஒன்றுமே செய்ய முடியாது என்று சவால்விடுவதுபோல், இரு தினங்களுக்கு முன்பு ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் தோன்றும் அறிமுக காட்சியை இணையதளத்தில் வெளியிட்டு வெள்ளோட்டம் பார்த்தனர்.

இதனை வெளியிட்டது யார் என்று தெரியாமல் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்தது.

அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் அடுத்ததாக பேரதிர்ச்சி.

கபாலி முழுப்படத்தையும் பல்வேறு இணையதளங்களில் வெளியிட்டு விட்டனர்.

தமிழகத்தில் பல தியேட்டர்களில் கபாலி படம் காலை காட்சியாக 11 மணிக்குத்தான் திரையிடப்பட்டது.

ஆனால் தியேட்டர்களில் திரையிடுதற்கு முன்னதாகவே நேற்று அதிகாலையில் கபாலி முழு படமும் இணையதளங்களில் வெளி வந்தது.

அதனை பலரும் பதிவிறக்கம் செய்து பார்த்தனர்.

“பட காட்சிகள் தெளிவாக இருந்தன. வசனங்களும் துல்லியமாக கேட்டது.” என்று தெரிவித்தனர்.

தியேட்டர்களில் ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்காதவாறு செய்துவிட்டு, கார்ப்பரேட் கம்பெனிகளிடம் மொத்தமாக டிக்கெட்டை விற்றுவிட்டனர்.

அதனால் கபாலி படத்தை தியேட்டரில் பார்க்க முடியாமல் அதிர்ச்சியடைந்திருந்த ரசிகர்கள், கபாலி படம்  இணையதளத்தில் இலவசமாக கிடைப்பதை கேள்விப்பட்டு கபாலி படத்தை சுடச்சுட பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளனர்.

ஒரு பக்கம், ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதில்லை என்று திரையுலகினர் புலம்புகின்றனர்.

இன்னொரு பக்கம், கபாலி படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த ரசிகர்களுக்கோ டிக்கெட் கிடைக்கவில்லை.

எனவே இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்து கபாலி படத்தை பார்த்துவிட்டனர்.

ரசிகர்களை தப்பு செய்ய தூண்டியது யார்?