கதாநாயகி இல்லாமல் வெளிநாட்டில் பாடல் காட்சி

23

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக நடிக்கும் படம் ‘காப்பான்’.

இந்த படத்தில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, பொம்மன் இரானி, சாயிஷா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்தின் வசனக்காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறிவிறுப்பாக நடந்து வரும்நிலையில் சூர்யா சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை படமாக்க இயக்குனர் கே.வி.ஆனந்த், ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு, நடன இயக்குனர் ஷோபி மாஸ்டர் உள்ளிட்ட படக்குழுவினர் ஜாவா தீவுக்கு சென்றுள்ளனர்.

அங்கு இப்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

இயக்குநர் கே.வி.ஆனந்த் அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பொதுவாக கதாநாயகன் கதாநாயகி பங்குபெறும் பாடல்காட்சியைத்தான் வெளிநாட்டில் படமாக்குவார்கள்.

காப்பான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி கிடையாது. படத்தின் நாயகியான சாயிஷாவும் ஆர்யாவுக்குத்தான் ஜோடியாக நடிக்கிறார்.

இந்தநிலையில் சூர்யாவை மட்டும் வைத்து ஜாவா தீவில் பாடல்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கும் இந்த படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன் வெளியானது.

காப்பான் படத்தை ஆகஸ்ட் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்கு முன் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘NGK’ படம் மே 31-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது உப தகவல்!