தலைப்பு எங்களுக்கே சொந்தம்…! – பிரபல தயாரிப்பாளரிடம் மல்லுக்கட்டும் இயக்குநர்…

600

அறிமுக இயக்குநர் விஜய் இயக்கத்தில் புதுமுக நடிகர் கேசவன் நடிப்பில் உருவாகி வரும் படம் – ‘க க க போ’.

சாக்‌ஷி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் மதன்பாப், சிங்கம் புலி, கருணாஸ், உட்பட 32 கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பணிகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

‘க க க போ’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் மலேசியா சென்ற ‘க க க போ’ படத்தின் கதாநாயகனான கேசவன் மலேசியாவில் உள்ள IPOH, B DOOR என்னும் இடத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் குளித்தபோது, பெற்றோரின் கண்முன்னே தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு மரணமடைந்தார்.

கேசவனின் மறைவினால் அதிர்ச்சியடைந்த ‘க க க போ’ படக்குழுவுக்கு தற்போது மற்றொரு அதிர்ச்சி….

விஜய்சேதுபதி நடித்து விரைவில் வெளிவர உள்ள ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் விளம்பரங்களில் KA KA KA PO என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

தங்களுடைய படத்தின் பெயரை பயன்படுத்துவதா என்று டென்ஷனான ‘க க க போ’ படத்தின் இயக்குநரான விஜய், மீடியாக்களுக்கு ஒரு வேண்டுகோள் கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார்…

“நான் க க க போ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். இதில் பல்வேறு முன்னணி நகைச்சுவை நடிகர்கள் நடித்து, திரைப்படம் முடிந்து தற்பொழுது வெளியீட்டிற்கு தயார்நிலையில் உள்ளது.

இன்னிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் காதலும் கடந்து போகும் திரைப்படத்திற்கும் க க க போ என பெயரிட்டு விளம்பரம் செய்கிறார்கள்.

இது எங்கள் திரைப்பட தலைப்பிற்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் உள்ளது.

எனவே பத்திரிகை நண்பர்கள் க க க போ தலைப்பு எங்களுக்கே சொந்தம் என்பதையும், இந்த தலைப்பில் குழப்பம் வராமல் செய்திகளை வெளியிடுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.”

க க க போ படத்தின் இயக்குநரின் குற்றச்சாட்டு பற்றி காதலும் கடந்து போகும் படத்தின் தயாரிப்பாளரான சி.வி.குமாரிடம் பேசினோம்….

“இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு என்னிடம் கூட பேசினார்கள்.

காதலும் கடந்து போகும் என்பதுதான் என் படத்தின் பெயர். க க க போ அல்ல என்று அப்போதே அவர்களிடம் தெளிவாக சொன்னேன்.

காதலும் கடந்து போகும் படத்தில் க க க போ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அந்தப்பாடல் ஹிட்டாகியுள்ளது.

அதனால் அந்தப்பாடலை மேலும் புரமோட் செய்வதற்காக, காதலும் கடந்து போகும் விளம்பரங்களில் KA KA KA PO என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளோம்.

இது தவறான  விஷயமா என்ன? ஒரு படத்தின் ஹிட்டான பாடலை அந்தப் படத்தின் விளம்பரங்களில் பயன்படுத்துவது வழக்கமான விஷயம்தானே?

36 வயதினிலே படத்தில்  வாடி ராசாத்தி பாடல் ஹிட்டானது. அதனால் அந்தப் படத்தின் விளம்பரங்களில் வாடி ராசாத்தி என்று கேப்ஷன் போட்டார்கள். அதுபோல்தான் இதுவும்.

காதலும் கடந்து போகும் படம் வெளியாகி KA KA KA PO பாடல் மேலும் ரீச்சானால், அது எங்கள் படத்துக்கு மட்டுமல்ல, க க க போ படத்துக்கும் ப்ளஸ்ஸாகத்தான் இருக்கும்.

இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் விளக்கம் சொன்ன பிறகும் இதை பெரிய விஷயமாக ஊதிப்பெரிதாக்க நினைப்பதை பார்க்கும்போது தங்களின் படத்துக்கான பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறார்களோ என்றும் தோன்றுகிறது…” என்றார் அமைதியாக.