ஜோதிகாவை மாற்றிய மகளிர் மட்டும் இயக்குநர்

505

‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா அடுத்து இயக்கி வரும் படம் – ‘மகளிர் மட்டும்’.

குற்றம் கடிதல் வணிகரீதியில் தோல்விப்படம் என்றாலும், இயக்குநராக தன்னை கவனிக்க வைத்திருந்தார் பிரம்மா.

அந்த கவனஈர்ப்புதான் நடிகர் சூர்யாவின் பார்வையை இவர் மீது திருப்ப வைத்தது.

பிரம்மாவை அழைத்து கதை கேட்க வைத்தது. அதில் ஜோதிகவை நடிக்க வைக்க வேண்டும், அந்தப்படத்தை நாமே தயாரிக்கலாம் என்றும் சூர்யாவை எண்ண வைத்தது.

பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள  மகளிர் மட்டும் படத்தில் ஆவணப்பட இயக்குநராக, பிரபாவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜோதிகா.

இவருடன் பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா, நாசர் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

மகளிர் மட்டும் படத்தை இம்மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தார் சூர்யா.

படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததினால் வெளியீட்டை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்திருக்கிறார்.

மகளிர் மட்டும் படம் குறித்து இயக்குநர் பிரம்மா பேசுகிறார்…

‘‘மகளிர் மட்டும்’ எமோஷனலான படம். படத்தின் ஒவ்வொரு ஃபிரேம்மையும் நீங்க சிரிச்ச முகமாகவே பார்த்து என்ஜாய் பண்ணுவீங்க!

இந்த கதை ரெடியானதும் ஜோதிகாவுக்கு பொருத்தமான கதையா இருந்துச்சு.

அவங்ககிட்ட கதை சொல்லும்போது, சில இடங்கள்ல சீரியஸா கேட்டாங்க. நிறைய இடங்கள்ல சிரிச்சாங்க. அப்பவே எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு.

அடுத்து சூர்யா சார்கிட்ட கதையை சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. ‘2டி’லேயே பண்ணிடலாம்’னு உற்சாகப்படுத்தினார்.

ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன்னு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை.

‘மகளிர்மட்டும்’ டைட்டில் கிடைச்சா ரீச் அதிகமா இருக்கும்னு நினைச்சேன்.

சூர்யா சார் உடனே கமல் சார்கிட்ட பேசி, இந்த டைட்டிலை வாங்கிக் கொடுத்தார்.

இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை.

நாசர் சார், லிவிங்ஸ்டன், பாவல், கோகுல்நாத் மற்றும் நிறைய புதுமுகங்கள் நடிச்சிருக்காங்க.

என்னோட முதல் படத்துல ரிகர்சல் சாத்தியமாச்சு.

இந்தப் படத்துலேயும் ஒரு மாசம் ஒர்க் ஷாப் வச்சிருந்தேன்.

இந்த மாதிரி பயிற்சிப் பட்டறை வைக்கறது அவங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கறதுக்கு இல்ல.

இது ஆக்டிங் ப்ராக்டீஸ் கிடையாது. கேரக்டரோட ஆழத்தை உணர்ந்து உள்வாங்கிக்கிற ஒரு முயற்சி தான் இந்த ஒர்க்‌ஷாப்.

ஜோதிகா, ஊர்வசி, சரண்யா எல்லாருமே பிசியானவங்க. அதனால அவங்களத் தவிர மத்தவங்க பயிற்சி எடுத்தாங்க.

என்னோட குறும்படங்கள்ல இருந்து கூடவே இருக்கும் எஸ்.மணிகண்டன், ‘குற்றம் கடிதல்’ படத்துக்கு அடுத்து இந்தப்படத்துக்கும் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார்.

இசை ஜிப்ரான். நாலு பாடல்கள், ஒரு தீம் மியூசிக், ஒரு ஃபோக்னு வெரைட்டி கொடுத்திருக்கார்.

வழக்கமான நடிப்புல இருந்து கொஞ்சம் மாறியிருக்கற ஜோதிகாவா இருக்கணும். ரெகுலர் ஆடியன்ஸ் விரும்பற ஜோதிகாவாகவும் தெரியணும்னு இந்த கேரக்டரை உருவாக்கினேன்.

புல்லட் தவிர, வேற ஒரு வாகனமும் அவங்க ட்ரைவ் பண்ணுவாங்க.

நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டு வந்தாங்க. இப்படத்துக்கு சொந்த குரல்ல பேசியும் இருக்காங்க! ‘மாயாவி’க்கு பிறகு இப்படத்துல தான் சொந்த குரலில் பேசியிருக்காங்கன்னு நினைக்கிறேன்’’ என்கிறார் பிரம்மா.

மகளிருக்கு மட்டுமின்றி மற்ற எல்லாருக்கும் பிடித்த படமாக இருந்தால் சரி.