ஜோக்கர் – உண்மையான பிரம்மாண்டப் படம்…

1109

தமிழ்சினிமாவுக்கு என்று சில இலக்கணங்கள் உண்டு.

தமிழ்சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ்சினிமா ஹீரோக்களுக்கும்தான்.

இந்த இரண்டு இலக்கணங்களையும் இடது கையால் புறந்தள்ளிவிட்டு, இயக்குநர் ராஜுமுருகன் உருவாக்கியுள்ள படம் – ஜோக்கர்.

ஜோக்கர் என்ற தலைப்பு இது ஒரு மலிவான நகைச்சுவைப்படம் என்ற தோற்றத்தை தரக் கூடும்.

உண்மையில், ஜோக்கர் காமெடி படம் அல்ல, சமூகத்தை ஓரளவேனும் சிந்திக்க வைக்கிற சினிமா.

தற்கால அரசியல் அழிச்சாட்டியங்களை சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கிற, சாட்டையச் சுழற்றி நியாயம் கேட்கிற படம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்திலேயே வெளி வந்திருக்க வேண்டிய படம்.

ஒருவேளை அப்படி நடந்திருந்தால் தேர்தல் முடிவுகளில் கூட தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

அப்போது மட்டுமல்ல, இப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘ஜோக்கர்’ படம் ஆகஸ்ட் 12 அன்று வெளியாக உள்ளது.

ஜோக்கர் படம் திரைக்கு வரும் தேதி நெருங்கிவரும்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

பொதுவாக இதுபோன்ற செய்தியாளர்கள் சந்திப்பு என்றாலே… படம் சூப்பரா வந்திருக்கு…. நீங்க எல்லாம் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கணும்… என ஓட்டை ரெக்கார்டைப்போல் ஒரே விஷயத்தை ஒட்டுமொத்த பேரும் திரும்ப திரும்ப சொல்வார்கள்.

ஜோக்கர் பட ம்தொடர்பான நிகழ்வில் இந்த ரோதனை இல்லை.

படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் (கதாநாயகின்னு சொல்லலாமா? )காயத்திரி கிருஷ்ணன்,“ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. என் கேரக்டர் ரொம்ப போல்டான கிராமத்து பெண் கேரக்டர். பொதுவாக சினிமாவில் கிராமத்து பெண்கள் என்றால் போராட தைரியம் இல்லாத பெண்ணாகத்தான் காண்பிப்பார்கள். ஆனால் என்னுடைய கதாப்பாத்திரம் அதை பிரேக் பண்ணி உள்ளது.” என்று குறிப்பிட்டார்

ஆர்ட் டைரக்டர் சதீஷ் பேசும்போது ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார்…

“எங்க ஊரு தர்மபுரி பக்கம் நடக்குற கதை. நம்ம ஊரு பக்கம் நடக்குறதால வொர்க் பண்ணுவதற்கு சிரமம் இல்லாமல் இருந்தது. ஒரு ஒயின்ஷாப் செட் போட்டோம். ஒயின்ஷாப் செட் போட்டதும், உடனே ஒருத்தர் வந்து குவாட்டர் கேட்டார். இது படப்பிடிப்பிற்காக போடாப்பட்ட செட் விற்பனைக்கு இல்லைன்னு சொன்னோம். உடனே, இருந்துட்டு போகட்டும்; அவங்களுக்கு மட்டும்தான் குடுப்பியா? நான் மட்டும் என்ன ஒசியிலா கேக்குறேன் என்று சண்டைபோட்டுவிட்டு சென்றார். இது போல் நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.”

ஜோக்கர் படத்தில் நடித்துன்ன எழுத்தாளர் பாவா செல்லத்துரையின் பேச்சில் அனல் பறந்தது.

“இந்தப்படம் மட்டுமே தருமபுரி மண் சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்சினிமாவில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் பகுதிகளைத்தான் காட்டியுள்ளனர். ஆனால் தர்மபுரியை யாரும் காட்ட முயலவில்லை. ஆனால் இந்த படத்தில் காட்டியுள்ளனர். இந்தப் படத்தில் நடிக்கும் ஒரு பெண்ணின் தலையில் வரும் வேப்பெண்ணை வாடையைக் கூட மிகவும் இயற்கையாக காட்டி உள்ளனர். தர்மபுரி மக்களின் பற்கள் மஞ்சளாக இருக்கும். அந்த மஞ்சள் கரையை கூட இயக்குநர் நுணுக்கமாக கவனித்து இந்தப் படத்தில் வைத்திருக்கிறறார். இது உண்மையிலேயே ஒரு உலகத்தரம் வாய்ந்த படம்.”

ஜோக்கர் படத்தில் காயத்ரி மட்டுமின்றி ரம்யா பாண்டியன் என்ற நடிகையும் நடித்துள்ளார். நடிகர் அருண்பாண்டியனின் தம்பி துரைப்பாண்டியனின் மகள் இவர்.

“இயக்குநர் ராஜுமுருகன் எனக்கு ரொம்ப பிரீடம் குடுத்தார். அதனாலேயே எனக்கு நடிப்பதற்கு இயல்பாக இருந்தது. இப்படி நடி, அப்படி நடி என எதுவுமே கூறவில்லை. நீங்களே நடியுங்கள் என்று சொன்னார்” என இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.

நாடக நடிகரான மு.ராமசாமி மிகவும் கண்கலங்கி உணர்ச்சியுடன் பேசினார்.

“1990-களில் இருந்து நான் நடிக்கிறேன் இதுவரை நான் எந்த படத்தையும் பார்த்து பெருமிதம் கொண்டதில்லை. இந்த படத்தை என் படமாக பார்க்கிறேன். நான் என்ன எல்லாம் வெளியில் பேச நினைத்தேனோ, அந்த பிரச்சனை எல்லாம் இந்தப்படத்தின் மூலம் பேசியுள்ளேன். இது என்னுடைய படம் போல் உணரவைத்த ராஜு முருகனுக்கு நன்றி.”

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசும்போது, “படத்துல லைவ் மியூசிக் தான் போட்டுள்ளோம் சவுண்ட் மிக்சிங் செய்யவில்லை. இந்த மாதிரி ரியல் கேரக்டர்கள் நடிச்ச படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும்” என்று குறிப்பிட்டார்.

ஒளிப்பதிவாளர் செழியனின் பேச்சில் அடிக்கோடிட்டுக் குறிப்பிட வேண்டிய விஷயம் இருந்தது.
“ஜோக்கர் படம் உண்மையிலேயே பிரம்மாண்டமான படம். நிறைய செலவு செய்து எடுக்கும் படம்தான் பிரம்மாண்டமான படம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் எளிமையான படங்கள்தான் பிரம்மாண்டப்படங்கள். அந்த வகையில் ஜோக்கர் பிரம்மாண்டமான படம்.”

இயக்குனர் ராஜு முருகன் பேசும்போது ஜோக்கர் படத்தின் நோக்கம் பற்றி விளக்கினார்…

சமூக வலைதளங்களில் அரசியல் தைரியமாக பேசும் அளவிற்கு மக்கள் முன்னேறி உள்ளனர். ஆனால் சினிமாவில் அது இன்னும் வரவில்லை. ஏன் இங்கு மட்டும் நுழையவில்லை. படத்தை மிகத் தைரியமாக எடுக்க வேண்டும் என நினைத்தே இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டை தயார் செய்தேன்.
கலைஞர்களை ஜாதி, அரசியல் ரீதியாக அணுகக்கூடாது. அவர்களை கலைஞர்களாகத்தான் பார்க்க வேண்டும்.

ஜோக்கர் படத்துக்கு நாங்க பயந்த மாதிரி எந்த பிரச்சனையும் வரவில்லை. சென்சார் கிடைக்காதுன்னு தான் நினைச்சோம். ஆனால் யு சர்டிபிகேட் கிடைச்சது. சென்சார் அதிகாரிகள் கெட்ட வார்த்தைகள் மற்றும் வன்முறை காட்சிக்கு மட்டும் கட் கொடுத்தனர். எல்லோருமே அரசியல் பேசணும் என்கிற கருத்தை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது தேர்தல் சமயத்தில் வருவதை விட சுதந்திர தினத்தில் வருவது இன்னும் பொருத்தமானது.”

ஆகஸ்ட் 15 அன்று சட்டையில் தேசியக் கொடியை குத்திக் கொண்டு தேசப்பற்றை வெளிப்படுத்தும் குடிமகன்கள் இந்த முறை ஜோக்கர் படத்தையும் பார்ப்பது நல்லது.