சென்சாரிலிருந்து சேதாரமில்லாமல் தப்பித்த – ஜோக்கர்

1098

நடப்பு அரசியலையும், அரசியல்வாதிகளையும் நையப்புடைக்கும் சரியான… துணிவான…. தைரியமான அரசியல் படம் சமீபத்தில் வந்தததாக நினைவில்லை.

அந்தக்குறையைப் போக்குகிற படமாக இருக்கப்போகிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய படம் – ஜோக்கர்.

அரசியலை விமர்சிக்கிற தைரியம் இன்றைய இயக்குநர்களிடம் இல்லாமல்போனது ஒரு பக்கம் என்றால்…

இன்னொரு பக்கம், ஆளும்கட்சிகளின் ஊதுகுழலாக மாறிப்போன தணிக்கைக்குழு, அரசியல் படங்களை அனுமதிப்பதில்லை.

தணிக்கை என்ற பெயரில்,  தான் சார்ந்த கட்சியை விமர்சிக்கிற படங்களை வெட்டித்தள்ளுவதையே வேலையாக வைத்திருக்கின்றனர் தணிக்கைக்குழுவில் அங்கம் வகிக்கிற ஆளும்கட்சியின் அடிவருடிகள்.

விதிவிலக்காக வருகிற ஒன்றிரண்டு அரசியல் படங்களையும் முடக்கிவிடுகின்றனர். அல்லது முனை மழுங்கச் செய்து வெளியிட அனுமதிக்கின்றனர்.

இப்படியான சூழலில்தான் ஜோக்கர் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் ராஜுமுருகன்.

பத்திரிகையாளரான ராஜுமுருகன் குக்கூ என்ற படத்தை இயக்கியவர்.

அவரது அடுத்தப் படம் ஜோக்கர்.

‘ஆரண்யகாண்டம்’ படத்தில் கவனம் ஈர்த்த குரு சோமசுந்தரம்தான் இப்படத்தின் கதாநாயகன்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்தநிலையில் பல மாதங்களாகவே ரிலீஸுக்குக் காத்திருந்தது.

கபாலி வருது கபாலி வருது என்று பூச்சாண்டி காட்டப்பட்டதால்  எப்போது ரிலீஸ் என்பதே இறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில்,  ஜோக்கர் படத்தின் தணிக்கை வெற்றிகரமாக முடிந்துவிட்டது.

ஜோக்கர் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

சென்சாரிலிருந்து சேதாரமில்லாமல் தப்பித்து வந்துள்ள ஜோக்கர் ஆகஸ்ட் மாதம்  திரைக்கு வருகிறது.