நடிகர் சங்கத்துக்கு கடந்த வருடமே அடிக்கல் நாட்டிவிட்டோம்… -விஷாலின் முகத்திரையைக் கிழித்து தொங்கவிட்ட ஜே.கே. ரித்தீஷ்.

532

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் களம் இப்போது சூடு பிடித்துள்ளது.

ஏப்ரல் 2- ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்தலில் முழு வீச்சில் களம் இறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஷால் அணியை தோற்கடித்தே தீர வேண்டும் என்ற முனைப்போடு வியூகம் அமைத்து இயங்கி வருகிறது ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான ‘தயாரிப்பாளர் முன்னேற்ற அணி’.

கருத்து வேறுபாடுகளால் தயாரிப்பாளர்கள் பிரிந்து கிடப்பது விஷாலுக்கு வெற்றியைக் கொடுத்துவிடும் என்ற அபாயத்தை கடைசி நேரத்தில் புரிந்து கொண்டு, போட்டியாளர்களை  ஒருங்கிணைத்து ஒரே அணியாக களத்தில் இயங்க வைத்திருக்கிறார் கலைப்புலி தாணு.

‘தயாரிப்பாளர் முன்னேற்ற அணி’ யின் சூத்திரதாரியாக இருக்கும் தாணுவின் முயற்சியில் டி.சிவா, கலைப்புலி சேகரன் ஆகியோர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது செயலாளர் பதவிக்குப் போட்டியிடும்சிவசக்தி பாண்டியன் பேசும்போது, “நாங்கள் எந்தக் கோமாளி பற்றியும் கவலைப் படவில்லை. ஒரு தொழில்முறை தயாரிப்பாளர்தான் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வர வேண்டும்.” என்று குறிப்பிட்டார்.

துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “விஷால் தினமும் ஒரு ஸ்டண்ட் அடிக்கிறார். விஷால் பதவிக்கு வந்து நடிகர் சங்கத்துக்கு எதுவும் செய்யவில்லை. பதவிக்கு வந்து ஓராண்டில் செய்யாவிட்டால் ராஜினாமா செய்வேன் என்றார். ஆனால்  ஒன்றே முக்கால் ஆண்டாகிறது. எதுவும் செய்யவில்லை. இப்போது நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டுவதாக நாடகம் போடுகிறார். அந்த இடத்துக்கு மாநகராட்சி அனுமதி கூட வாங்கவில்லை.

2000 ரூபாய் கொடுத்தேன். 1500 ரூபாய் கொடுத்தேன். 1000 ரூபாய் கொடுத்தேன் என்று தினமும் ஊடகங்களுக்கு செய்தி அனுப்புகிறார். யாரை ஏமாற்ற இப்படி அனுப்புகிறார்? ஏன் இப்படி ஸ்டண்ட் அடிக்கிறார். அவருக்கு ஏதோ மனோவியாதி வந்திருக்கிறது.

படப்பிடிப்புக்கே குறித்த நேரத்துக்குப் போகாத பிரகாஷ்ராஜ் எப்படி தயாரிப்பாளர் சங்கத்துக்கு உதவுவார் ?  இரவு 10மணிக்குமேல் அவர் எங்கே இருப்பார் என்று அவருக்கே தெரியாது. தயாரிப்பாளர்களுக்கு வருகிற பெரும்பாலான பிரச்சனைகளே நடிகர்களால்தான். நடிகர்களால் எப்படி தயாரிப்பாளர்களுக்கு உதவ முடியும்?” என்று சூட்டைக்கிளப்பினார்.

முன்னாள் எம்.பியும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் பேசும்போது, விஷாலின் முகத்திரையைக் கிழித்து தொங்கவிட்டார்…

“நடிகர் சங்கக் கட்டடத்துக்கு கடந்த வருடம் மார்ச் 5 ஆம் தேதியே அடிக்கல் நாட்டியாகி விட்டது. அன்றைக்கு நாசர் சாருக்கும், எனக்கும் பிறந்த நாள்… எனவே அன்றைக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று விரும்பினார் விஷால். அதன்படி போன வருடமே நடிகர் சங்க புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிவிட்டோம். இப்போது மீண்டும் அடிக்கல் நாட்டு விழா என்று விஷால் நாடகம் போடுகிறார். யாரை ஏமாற்றுவதற்காக இப்படி நாடகம் போடுகிறார்?”

ஜே.கே. ரித்தீஷ் சொல்வது உண்மையாக இருந்தால்…. விஷால், ராகவா லாரன்ஸைவிட ஆபத்தானவர் என்பதில் சந்தேகமில்லை.

-ஜெ.பிஸ்மி