சிவகார்த்திகேயன் செய்வது சரியா? சரிவின் வழியா?

907

கடந்த காலங்களில் தமிழ்சினிமா எத்தனையோ கதாநாயக நடிகர்களைக் கண்டிருக்கிறது.

அதில், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களும் அடக்கம்.

இன்றைய காலகட்டத்தில்  புதிய தலைமுறை நடிகர்களில் விஜய், அஜித் இருவரும் முதல்வரிசை நடிகர்களாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களை சூர்யா, தனுஷ், விக்ரம், விஷால், கார்த்தி, ஆர்யா, ஜெயம்ரவி, ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் அண்டனி, சிம்பு போன்ற நடிகர்கள் பங்கு போட்டுக் கொண்டுள்ளனர்.

இவர்கள் எவரும் செய்யாத ஒரு மோசமான காரியத்தை செய்து வருவதன் மூலம் திரைப்படத்துறையினரின் கண்டனத்துக்கும், சாபத்துக்கும் ஆளாகி வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதெல்லாம் அவருக்கு தெரியுமா? அல்லது அவரைச் சுற்றி உள்ளவர்கள் நடத்தும் சித்துவிளையாட்டா என்பது ஒரு பக்கம் இருக்க, மொத்தத்தில் சிவகார்த்திகேயனின் பெயர் கெட்டு குட்டிச்சுவராகிக் கொண்டிருக்கிறது.

இவர் சினிமாவுக்குள் வந்த கதையும்… வளர்ந்த கதையும் நாம் எல்லாம் அறிந்ததுதான்.

அதை எல்லாம் மறந்துவிட்டு, தான் என்னவோ வானத்திலிருந்து குதித்து வந்த தேவதூதனைப்போல் நடந்து கொள்கிறார் என்று சிவகார்த்திகேயன் பற்றி பக்கம் பக்கமாக குற்றப்பத்திரிகையை வாசிக்கிறார்கள் படத்துறையினர்.

மோகன்ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத்லேப் வளாகத்தில் போடப்பட்ட குடிசைவீடுகள் நிறைந்த சேரி செட்டில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.

வேலைக்காரன் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு யாரும் சென்றுவிடாதபடி, சுமார் 20க்கும் மேற்பட்ட ஜிம்பாய்ஸ் என்கிற அடியாட்களை பாதுகாப்புக்காக நிறுத்தி இருக்கிறார்கள்.

யார் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள்…. யார் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என்று தெரியாமல்… அந்த அடியாட்கள் பண்ணுகிற அழிச்சாட்டியங்கள் பற்றி கதைகதையாகச் சொல்கிறார்கள்.

அந்த செட்டில் நடித்துக் கொண்டிருந்த பிரகாஷ்ராஜை பார்க்க அவருடைய மானேஜர் சென்றிருக்கிறார் – சமீபத்தில்.

அவரை உள்ளே போகக்கூடாது என்று அடியாட்கள் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தான் யார் என்பதையும், பிரகாஷ்ராஜை சந்திக்க வந்ததாகவும் அவர் பொறுமையாக எடுத்துச் சொல்ல… அவர் சொன்னதை அடியாட்கள் ஏற்க மறுத்துவிட்டார்களாம்.

“நீங்க யாரா இருந்தா எங்களுக்கென்ன? வேலைக்காரன் படத்தின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா போன் செய்து, உங்களை உள்ளே அனுப்பச் சொன்னால்தான் உங்களை உள்ளே அனுமதிப்போம்” என்று தகராறு செய்துள்ளனர்.

அதேபோல் இன்னொரு சம்பவம்… வேலைக்காரன் செட் போடப்பட்டுள்ள பிரசாத் லேபின் மானேஜர், அங்குள்ள தன் பணியாளர்களை கவனிப்பதற்காக  ரவுண்ட்ஸ் வந்திருக்கிறார்.

அவரையும் உள்ளேவிடாமல் குறுக்கே கையைப்போட்டு தடுத்திருக்கிறார்கள் சிவகார்த்திகேயனின் அடியாட்கள்.

இத்தனைக்கும் அங்கே போடப்பட்டுள்ள செட் ஒன்றும் இதுவரை தமிழ்சினிமா பார்த்திராத உலகமகா செட்டோ… வேறு எந்தப்படத்திலும் இடம்பெற்றிராத புதுமையான செட்டோ இல்லை.

சினிமாவையே டிராமாவாக எடுத்து வந்த வீ.சேகரின் அத்தனை படங்களிலும் இடம்பெறும் சாதாரண குடிசை வீடுகள் செட்தான்.

அதைப்போய் யாரும் பார்க்கக் கூடாது என்று அடியாட்களை நிறுத்தி வைத்து எதற்காக இத்தனை அலப்பறை செய்ய வேண்டும்?

வேலைக்காரன் படத்தின் தயாரிப்பாளர் அடியாட்களை நிறுத்தி இருப்பது, வேலைக்காரன் செட்டை பாதுகாக்க அல்ல, அங்கே நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை பாதுகாப்பதற்காக.

அதாவது, ரசிகர்கள் உள்ளே வந்து சிவகார்த்திகேயன் உடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தொந்தரவு கொடுப்பார்கள். அதற்காகத்தான் இந்த ஏற்பாடு என்று காரணம் சொல்லப்படுகிறது.  உண்மையில் வேறு காரணம்.

கதை சொல்ல வேண்டும் என்று இயக்குநர்களோ… கால்ஷீட் வேண்டும் என்று தயாரிப்பாளர்களோ….. பேட்டி வேண்டும் என்று மீடியாவை சேர்ந்தவர்களோ… அல்லது சினிமாத்துறையை சேர்ந்த வேறு யாரும்  சிவகார்த்திகேயனை நேரடியாக சந்தித்துவிடக் கூடாது என்பதற்காகவே சிவகார்த்திகேயனை சுற்றி இப்படி ஒரு தடுப்பு வேலி போடப்பட்டிருக்கிறது.

சிவகார்த்திகேயனை யார் சந்திக்க வேண்டும் என்றாலும், ஆர்.டி.ராஜா அனுமதி இல்லாமல் அவரை  சந்திக்க முடியாது. சந்திக்கவும் கூடாது.

சிவகார்த்திகேயன் தன் கையை மீறி போய்விடக்கூடாது என்ற எச்சரிகை உணர்வோடு அவருடைய நண்பர் இப்படி எல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வந்தாலும், இந்த அடியாட்கள் கூட்டம் மற்றும் சிவகார்த்திகேயனை மையப்படுத்தி பண்ணப்படும் பில்ட்அப் எல்லாமே எதிர்மறையான விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.

இப்படியான விமர்சனம் தொடர்வது வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனுக்கு நல்லதல்ல என்பதை இங்கே சுட்டிக்காட்டுகிறோம் – அறிவுரையாக அல்ல எச்சரிகையாக.

– ஜெ.பிஸ்மி