இளையராஜாவுக்கு ‘இந்த மரியாதையே’ போதும்னு நினைச்சாங்களோ?

1002

இளையராஜாவை வெறும் சினிமா இசையமைப்பாளர் என்ற அடையாளத்துக்குள் அடக்கிவிட முடியாது.

இளையராஜாவின்  இசையை ரசிப்பவர்கள் மட்டுமல்ல அவரது இசைக்கு அடிமையானவர்களும் உலகம் முழுக்க பரந்து கிடக்கிறார்கள்.

ஒரு தலைமுறையே இளையராஜாவின் தாலாட்டில்தான் வளர்ந்திருக்கிறது.

மேட்டுக்குடிகளின் ஆதிக்கத்திலிருந்த இசையை மீட்டெடுத்தவர்.

கிராமிய இசையை தமிழ்த்திரையிசை வழியாக உலகம் முழுக்க கொண்டு சென்றவர்.

இப்படி இளையராஜாவைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

இளையராஜாவை இசையமைப்பாளராக மட்டுமல்ல இசைக்கடவுளாகவே கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

80 களிலும், 90 களிலும் இளையராஜா முன்னணி இசையமைப்பாளராக இருந்தபோது திரையுலகமே அவரது வீட்டில் தவம் கிடந்தது.

கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களும், மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குநர்களும், பிரபல தயாரிப்பாளர்களும் இளையராஜாவின் இசைக்காக காத்துக்கிடந்தார்கள்.

இளையராஜா நடந்து வந்தால் எப்பேற்பட்ட பிரபலமும் எழுந்து நின்று பணிந்து வணங்குவார்கள்.

அந்தளவுக்கு, தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக மட்டுமல்ல, ஆதிக்க சக்தியாகவும் கோடம்பாக்கத்தில் கோலோச்சினார் இளையராஜா.

இப்படியாக, திரையுலகமே தன்னை தலையில் வைத்துக் கொண்டாடியதாலோ என்னவோ இளையராஜாவுக்கு தலைக்கனம் ஏற்பட்டது.

தன்னிடம் இசைகேட்டு வந்தவர்களை யாசகம் கேட்டு வந்தவர்களைப்போல் மரியாதைக்குறைவாக நடத்தினார்.

வேறு வழியில்லாமல் அதை பலரும் சகித்துக் கொண்டனர்.

இளையராஜாவினால் அவமானப்படுத்தப்பட்ட மணிரத்னம் கடுப்பானார்.

ரோஜா படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தினார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் வீச்சில் இளையராஜா இருந்த இடம் தெரியாமல்போனார்.

ஆனாலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் இளையராஜாதான் இன்னமும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.

ரசிகர்கள் இளையராஜாவை கொண்டாடினாலும், கோடம்பாக்கம் அவரை கொண்டாடவில்லை என்பதே யதார்த்தம்.

இளையராஜாவுக்கு மரியாதை கொடுப்பதுபோல் பாசாங்கு செய்கிறார்களே தவிர உள்ளன்போடு யாரும் இளையராஜாவை நேசிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

இப்படி தோன்றுவதற்கு காரணம் இரண்டு சம்பவங்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான பிறகு தன்னுடைய அணியினருடன் இளையராஜாவை சந்தித்தார் விஷால்.

அவருடன் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரான ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜாவும் சென்றிருந்தார். அப்போது ஞானவேல்ராஜா அணிந்திருந்த உடை என்ன தெரியுமா? அரை டிராயர்.

உலகமே தலையில் வைத்துக் கொண்டாடுகிற இளையராஜா என்கிற கலைஞனை சந்திக்கப்போகிறபோது, தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் அரை டிரவுசர் அணிந்து வருகிறார். அதை தலைவர் விஷாலோ, உடன் வந்த பிரகாஷ்ராஜோ, பார்த்திபனோ, மற்றொரு செயலாளரான கதிரேசனோ கண்டித்திருக்க வேண்டும். ஆனால் பல்லைக்காட்டி போஸ் கொடுத்திருக்கிறார்கள்.

ilayaraja2a

இன்னொரு சம்பவம்…. ஒரு காலத்தில் பகுத்தறிவுவாதியாகவும், சமீபகாலமாக பா.ஜ.க.வின் பிரச்சார பீரங்கியாகவும் இருக்கும்  வேலுபிரபாகரன் ஒரு இயக்குநரின் காதல் டைரி என்ற பெயரில் ஒரு பலான படத்தை எடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் இசைவெளியீடு சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் வேறு யாருமல்ல… இளையராஜாதான்.

இந்த விழாவுக்கு இளையராஜா வருகிறார் என்று தெரிந்தும்… இயக்குநர் வேலு பிரபாகரன் அரை டிரவுசர் அணிந்து வந்திருந்தார்.

சும்மா இருக்கும் நமக்கு பட வாய்ப்பு கொடுத்தவர் என்பதாலோ என்னவோ, வேலுபிரபாகரனின் அரைடிரவுசர் கோலத்தை இளையராஜா கண்டுகொள்ளவில்லை.

இதில் என்ன கொடுமை என்றால்… மேற்கொண்ட இரண்டு சம்பவங்களும் நடைபெற்று பல நாட்களாகின்றன.

இதை இளையராஜாவின் ரசிகர்கள் யாருமே கண்டிக்கவில்லை.

இளையராஜாவுக்கு இந்த மரியாதையே போதும்னு நினைச்சுட்டாங்களோ?

– ஜெ.பிஸ்மி