கபாலி, தெறி படங்களுக்குப் பிறகு நாங்கதான்… கெத்து காட்டிய இருமுகன்

745

தமின்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஷிபுதமீன் தயாரிப்பில்,  அரிமா நம்பி பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘இருமுகன்’.

இரண்டு வித்தியாசமான வேடங்களில் விக்ரம் நடித்த  இந்தப்படத்தை ஆரா சினிமாஸ் நிறுவனம்  தமிழகத்தில் வெளியிட்டது.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.

படம் வெளியாகி இருமுகன் படம் குறித்து மாறுபட்ட விமர்சனங்கள் வந்தாலும், படத்துக்கு செம ஓபனிங் கிடைத்தது.

வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில்தான் படத்தை வெளியிடுவார்கள்.

இருமுகன் படத்தை வழக்கத்துக்கு மாறாக ஒருநாள் முன்னதாக அதாவது வியாழக்கிழமையே வெளியிட்டனர்.

பெரிய ரிஸ்க்தான். இருந்தாலும் துணிந்து இப்படியொருமுடிவை எடுத்தார் தயாரிப்பாளர் ஷிபுதமீன்.

அவர் எதிர்பார்த்ததுபோலவே முதல் 4 நாட்களில் மட்டுமே பெரிய தொகையை வசூலித்துள்ளது இருமுகன்.

சுமார் 450 தியேட்டர்களில் ரிலீஸ் ஆன இருமுகன் படம் இன்னமும் அரங்குநிறைந்து ஓடிக்கொண்டிருப்பதாக ஆரா சினிமாஸ் மகேஷ் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும், வெளிநாடுகளிலும் ‘இருமுகன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்பு.

இதற்கிடையில், தமிழகத்தில் 50 கோடிக்கும் மேல் ‘இருமுகன்’ படம் வசூல் செய்திருப்பதாக ஆதாரமற்ற செய்திகள் பல இணையதளங்களில் வெளியாகின.

இந்நிலையில், இன்று ‘இருமுகன்’ படத்தின் சக்சஸ்மீட் என்கிற பெயரில் பத்திரிகையாளர்களை சந்தித்தது இருமுகன் படக்குழு.

தமிழகத்தில் மட்டுமே 29.5 கோடி ரூபாயை இருமுகன் படம் இதுவரை வசூல் செய்திருப்பதாகவும்,  உலகளவில் 66 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும்  ‘இருமுகன்’ படத்தின் அதிகாரபூர்வ வசூலை அறிவித்தது தயாரிப்புத் தரப்பு.

கூடுதல் தகவலாக, கபாலி, தெறி படங்களுக்குப் பிறகு சத்யம் திரையரங்கத்தில் இந்த வருடம் அதிக வசூல் குவித்த படம் ‘இருமுகன்’தான் என்றும் படக்குழுவினர் பெருமையடித்துக் கொண்டனர்.