‘ஆதிபகவன்’ – ‘இரு முகன்’ இரண்டு படங்களுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள்…

1096

10 எண்றதுக்குள்ள என்ற மிகப்பெரிய தோல்விப் படத்தைக் கொடுத்த விக்ரமுக்கு உடனடி தேவை ஒரு வெற்றிப்படம்.

இல்லை என்றால்…பிரஷாந்துக்குப் பேச்சுத்துணையாய் வீட்டில் உட்கார வைத்துவிடுவார்கள் என்ற நிதர்சணத்தைப் புரிந்து கொண்டார் விக்ரம்.

செம மசாலாவாக ஒரு படத்தில் நடித்து… அந்தப் படத்தை கமர்ஷியல் ஹிட்டாக்கி, தன் மேல் படிந்துள்ள தோல்விப்பட ஹீரோ என்ற ஒட்டடையை துடைத்துவிட முடிவெடுத்து, அடுத்தப்படமாக அவர் டிக் அடித்த கதைதான் – இருமுகன்.

அரிமா நம்பி இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஏற்கனவே நடிக்க ஒப்புக் கொண்டிருந்த விக்ரம், அதை ஓரமாக வைத்துவிட்டு மீண்டும் விஜய்மில்டன் இயக்கத்திலேயே நடிக்க தீர்மானித்திருந்தார்.

10 எண்றதுக்குள்ள படத்தின் ரிசல்ட் அவரது முடிவை மாற்றிவிட்டது.

விஜய் மில்டன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் படத்தை 10 வருடம் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திவைத்துவிட்டு, ஆனந்த் சங்கரின் படத்தை அடுத்தப் படமாக ஓகே பண்ணிவிட்டார்.

இந்தப் படத்துக்கு இரு முகன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் துவங்கி நடைபெறவிருக்கிறது.

விஜய் நடித்த ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன் இப்படத்தை தயாரிக்கிறார்.

விக்ரமின் 52-ஆவது படமாக உருவாகவிருக்கும்இரு முகன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப்படத்தில் விக்ரம் ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ள வில்லன் வேடத்தை திருநங்கையாக உருவாக்கி இருக்கிறாராம் இயக்குநர் ஆனந்த் சங்கர்.

இந்த வில்லன் வேடத்திலும் விக்ரம்தான் நடிக்கிறார்.

இரு முகன் படம் குறித்த முதல்கட்ட தகவல்களைப் பார்க்கும்போது,அமீர் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த ஆதிபகவன் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதுபோல் தோன்றுகிறது.

ஆதிபகவன் படத்தில் ஜெயம்ரவிக்கு இரட்டை வேடம்.

அதில் ஒன்று திருநங்கை.

அதுதான் வில்லன் வேடம்.

ஆதிபகவன் படம் தாய்லாந்தில் படமாக்கப்பட்டது.

இரு முகன் படத்திலும் விக்ரமுக்கு இரட்டை வேடம்.

அதில் ஒன்று திருநங்கை.

அதுதான் வில்லன் வேடம்.

இரு முகன் படம் மலேஷியாவில் படமாக்கப்படவிருக்கிறது.