இளையராஜா 1000 நிகழ்ச்சியின் லட்சணம் இதுதான்…

2749

விஜய் டிவியும் இளையராஜாவின் கம்பெனியும் இணைந்து நடத்திய இளையராஜா 1000 நிகழ்ச்சி படு சொதப்பலாக நடந்து முடிந்திருக்கிறது.

அந்த நிகழ்ச்சிக்கு சென்ற இளையராஜாவின் அபிமானிகள் சமூகவலைதளங்களில் இளையராஜாவையும், விஜய் டிவியையும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ரசிகர்களின் வயிற்றெரிச்சல் வாட்ஸ்அப்பிலும் வலம் வருகின்றன.

அவற்றில் சில…

•••
விஜய் டிவி நடத்திய இளையராஜா 1000 எல்லோராலும் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்த நிகழ்ச்சி என்று தான் சொல்லணும். பலர் பல கனவில் சென்றனர் கண்ணுக்கும் காதுக்கும் குளிர்ச்சி என்று இதற்காக டிக்கெட் வாங்குவதிலும் முண்டியடித்து வாங்கினார்கள்.

சென்னை நந்தனம் மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு 500 முதல் 2000 ருபாய் வரை டிக்கெட் விற்றார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

பணத்தை பற்றி கவலைப்படாமல் இந்த நிகழ்ச்சியை பார்த்தே ஆகவேண்டும் என்று சென்ற அனைவருக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

விஜய் டிவி நிகழ்ச்சிக்கு செல்லும் போது இரவு உணவு மற்றும் காலை உணவு எடுத்து சென்றால் நல்லது. ஏன் என்றால் எப்ப ஆரம்பிப்பாங்க எப்ப முடியும் என்று அந்த ஆண்டவனுக்கே தெரியாது என்று ஒரு முறை சிவகார்த்திகேயனே சொல்லிருக்கிறார்.

அதே போலத்தான் ஆறு மணி என்று சொல்லி 7 மணிக்குத்தான் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பமான சில நிமிடத்திலே ஒலி மற்றும் ஒளி (ஆடியோ மற்றும் வீடியோ ) இரண்டும் சொதப்பல் ஆகிவிட்டது.

வந்த ரசிகர்கள் கோவத்தில் கத்த ஆரம்பித்துள்ளனர்.

ஆனாலும் அதை பற்றி கவலைபடாமல் நிகழ்ச்சியை நடத்தியது விஜய் டிவி.

ஒரு கட்டத்துக்கு மேல் ரசிகர்கள் நாற்காலி எடுத்து உயரபிடித்து சத்தம் போட ஆரம்பித்துள்ளனர்.

அதுக்கும் செவி சாய்க்காத விஜய் டிவி பின்னர் விஜய் டிவி டவுன் டவுன் என்று கத்த ஆரம்பித்த உடன் அதை சரி செய்தனர்.

இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த இளையராஜா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து இருந்தாராம்.

நிகழ்ச்சிக்கு நட்சத்திர பட்டாளம் குறைவுதானாம்.

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இளையராஜாவுக்கு மரியாதையை செய்தனர்.

கமல் வந்த கொஞ்ச நேரத்திலே சென்றுவிட்டார்.

எப்போதும் போல நிகழ்ச்சியை குட்டிசெவராக்கி ரசிகர்களை ஏமாற்றி உள்ளனர்.

எப்போதும் போல விஜய் டிவிக்கு செமையாக கல்லா கட்டியுள்ளது.

வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியதாம்.

•••

25 ஆயிரம், 10 ஆயிரம், 5 ஆயிரம், 3 ஆயிரம், ஆயிரம், 5 நூறு ரூபாய்களில் டிக்கெட்.

யாருக்கோ நிதி உதவிக்காக இவ்வளவு கட்டணம் போல.

அந்த ‘யாருக்கோ’தான் யாருன்னு தெரியல.

பாவம் ரசிகர்கள். தீவிர ரசிகர்களாக இருந்தால் இப்படிதான் அபராதம் கட்டவேண்டும் போலும்.

கட்டணங்களைப் பொருட்படுத்தாமல் திரண்டிருந்தார்கள் திடல் முழுக்க.

இவ்வளவு விலை வைத்த பிறகும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகிறார்கள் என்றால் அது இளையராஜா ஒருவருக்காக மட்டும்தான் நடக்கும்.

குவாட்டரும், கோழிபிரியாணியும் வாங்கிக் கொடுத்து ஜாதிப் பாசத்தோடு மாநாட்டிற்கு ‘அழைத்து’ வருகிற அரசியல் கட்சிகள் உள்ள தமிழகத்தில்; இளையராஜாவிற்காக தன் பணத்தைச் செலவு செய்து வருகிற ரசிகர்கள் கூட்டம்.

பணத்திற்கு விலைபோகாத மற்றும் ஜாதி உணர்வுகளுக்கு எதிராக மக்கள் எப்போதும் அணி திரள காத்திருக்கிறார்கள் என்பதற்கான குறியீடு.

தேர்தல் நேரத்தில், ராஜாவிற்காகக் கூடுகிற இந்தக் கூட்டத்தைப் பார்த்துக் கட்சிகள் தங்களின் கூட்டணிக்கு, ‘நீங்கதான் முதலமைச்சர்’ என்று அவரைக் கூப்பிடாமல் இருக்கணும்.

விரும்பமில்லை என்பதால் எப்போதும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குப் போனதில்லை.

ஆனால், நேற்று போனேன்.

‘உன்னை எவன்டா வரச் சொன்னது?’ என்பது போலவே நடந்தது நிகழ்ச்சி.

மக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு இவ்வளவு ஈடுபாட்டோடு வருகிறார்களே என்ற எந்தப் பொறுப்பும், திட்டமும் இல்லாத நிகழ்ச்சி.

நான் போனதற்குக் காரணம் கோவையிலிருந்து வந்திருந்த நண்பன் வெங்கட். (Venkat Raman) இவன் இளையராஜாவின் ரசிகர்களில் தீவிரவாதி பிரிவைச் சேர்ந்தவன்.

ராஜாவிடம் இல்லாத அவருடைய பாடல்கள் கூட இ்வனிடம் இருக்கும்.

சர்வதேச இசை குறித்த ரசனை உள்ளவன்.

உலகம் முழுக்கப் பயணம் செய்திருக்கிறான்.

லுட்விக் வான் பீத்தோவன், மொசார்ட் போன்ற இசை மேதைகள் பிறந்த ஊர்களுக்கெல்லாம்கூடப் போய் வந்திருக்கிறான்.

ஆனாலும் ராஜா என்றால் அவனுக்கு அவ்வளவு அன்பு, காதல், நேசம், பாசம் இன்னும் இன்னும்..

எனக்கும் டிக்கெட் போட்டிருப்பதே நேற்றுதான் தெரியும்.

வெங்கட்டும், நண்பர் பாலசந்தரும் (Bala Chander) செய்த வேலை இது.

ஆனால், என்னைக் கோத்துவிட்ட பாலச்சந்தர் வரல.

வெங்கட் கோவையிலிருந்து இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்திருக்கிறானே, என்று அவனைப் பார்க்க போய்தான் சிக்கிக் கொண்டேன்.

இரவு 8 மணிக்குத்தான் போனேன்.

இன்னும் கூட லேட்டா போயிருக்கலாம்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் தொகுக்க வரும்போதெல்லாம் எனக்கு ரொம்ப முடியாமப்போச்சு. அப்படி ஒரு தொகுப்பு.

விஜய் டி.வியில் பிரமுகர்களுடனான பேட்டியிலேயே நடனத்திற்குரிய அபிநயங்களும், நடிகைக்குரிய பாவனைகளோடும் பேட்டி எடுக்கிற அவர் தான் தொகுப்பு.

என்ன பண்றது? நட்புக்காக நண்பனுக்காக அதையும் தாங்கிக்கிட்டுதான் இருந்தேன்.

ஆனாலும் முடியில.

இடையில் எஸ்.பி.பி ஆறுதலாக இருந்தாலும், 12 மணியைத் தாண்டியும் தொடர்ந்து கொண்டிருந்ததால், நான் அங்கிருந்து தாண்டிவிட்டேன்.

பாவம் இதையெல்லாம் எப்படிதான் பொறுத்துக்கொள்கிறாரோ ராஜா?

நடிகர்களின் அல்லது சினிமா பாடகர்களின், பிரபல இசையமைப்பாளர்களின் ரசிகர்களைப் போன்றவர்கள் அல்ல, இளையராஜாவின் ரசிகர்கள்.

அவர்கள் தமிழர்களின் ரசனை சர்வதேசத்தரத்திற்கு நிகரானது என்பதின் அடையாளம்.

அவர்களுக்குரிய தரத்தோடும், சிறப்போடும் நடத்த வேண்டும் நிகழ்ச்சியை.

அதுதான் இளையராஜவிற்குச் செய்கிற உண்மையான கவுரவம். சிறப்பு. மரியாதை.

இல்லையென்றால் அவர் பெயரை பயன்படுத்தி, திரைபிரபலங்களை வைத்துக் கும்மியடித்து, ராஜாவின் ரசிகர்களைச் சூறையாடுகிற திட்டமாகத்தான் அது அம்பலமாகும்.

இதுபோன்ற கமர்சியல் நோக்கம் கொண்ட நிகழ்ச்சிகளை இசைஞானியும் புறக்கணிக்க வேண்டும்.

அது அவருக்கும் அவரை வெறிகொண்டு நேசிக்கிற ரசிகர்களுக்கும் நன்மை.

•••

“பொதுவாகவே விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியை வழங்குகிறதென்றால் அது மொக்கை கான்சப்ட்டாக இருந்தாலும், சுவாரஸ்யமாக்கிவிடுவார்கள். ஆனால் உலகமே எதிர்பார்த்த ஒரு நிகழ்ச்சியை இப்படியாக்கிட்டாங்களே…”

என்ற முணுமுணுப்போடு கலைந்தது கூட்டம்!

முணுமுணுப்புக்கு காரணம் மேடையில் பேசிப் பேசியே அறுத்துத் தள்ளியவர்களின் தொணதொணப்புதான்…!

ஆயிரம் படங்களை அசால்ட்டாக கடந்த இளையராஜாவுக்கு விஜய் தொலைக்காட்சி சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவும் இளையராஜாவின் கச்சேரியுடன்!

போனால் நெஞ்சம் நிறைந்த பாடல்களை கேட்கலாம். மனசை இசையால் நனைய விடலாம் என்று நினைத்த அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சி.

டைரக்டர் பார்த்திபன், மற்றும் தொகுப்பாளினி டி.டி. இருவரது தொண தொண பேச்சே பாதி நேரத்தை விழுங்கிவிட்டது.

இடம் பொருள் ஏவல் எதுவும் தெரியாமல் கூவிக் கூவிக் கொன்று கொண்டிருந்தார் பார்த்திபன்.

சும்மா பேசியது போதாது என்று பை நிறைய குறிப்புகளையும் எடுத்து எடுத்து பேசிக் கொண்டே போக, வந்திருந்த கூட்டம் ஆ வென்று வாயை பிளந்து ஆ…வ் என்ற சவுண்டுடன் கொட்டாவி விட ஆரம்பித்திருந்தது.

அவர் நிறுத்தினால் டி.டியும், டி.டி. நிறுத்தினால் பார்த்திபனுமாக பிடித்து ‘ராவி’த் தள்ளியதில் பெரும் அதிருப்தியோடு கலைந்தது கூட்டம்.

இதில் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களும் அடக்கம்!

இளையராஜாவோடு கலையுலகத்தில் நீண்ட தூரம் பயணித்த கமல் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தும், “நாங்கள்லாம் அவருடைய பாடல்களை கேட்கறதுக்காக ஆவலா காத்திருக்கோம். பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை”

என்று நாசுக்காக சுட்டிக்காட்டினார்.

அதற்கப்புறமும், இந்த துக்கடாக்களின் தொணதொணப்பு நின்றபாடில்லை.

மாபெரும் சபைதனில் இவர்களைப் போன்ற மவுத் ஆர்கான் பார்ட்டிகள் ஏறினால் உஷார் மக்களே உஷார்!

•••

இந்த குமுறல்களை எல்லாம் படிக்கும்போது, மொத்தத்தில் விஜய் டிவியுடன் இணைந்து தன்னுடைய  ரசிகர்களின் பணத்தையும் அவர்களது நேரத்தையும் சூறையாடிவிட்டார்  இளையராஜா என்றே எண்ணத் தோன்றுகிறது.

என்ன ராசா இப்படி பண்ணிட்டீங்களே…