இரண்டாவதுமுறையாக இளையராஜா தேசியவிருதை வாங்க மறுத்தது சரியா?

788

2015 ஆம் ஆண்டுக்கான 63 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டன.

சிறந்த மாநில மொழி படம் விருது தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, சிறந்த பின்னணி இசைக்கான விருது இளையராஜா (தாரைதப்பட்டை), சிறந்த துணை நடிகருக்கான விருது சமுத்திரகனி (விசாரணை), சிறந்த எடிட்டருக்கான விருது மறைந்த கிஷோர் (விசாரணை), இறுதி சுற்று படத்தில் நடித்த ரத்திகா சிங்குக்கு சிறப்பு விருது என  இந்த முறை தமிழ் சினிமாவுக்கு பல விருதுகள் கிடைத்தன.

டில்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் துணை நடிகர் விருதை சமுத்திரகனியும், சிறப்பு விருதை ரித்திகாவும்  பெற்றனர். மறைந்த கிஷோர் சார்பில் அவருடைய தந்தை பெற்றுக் கொண்டார்.

தேசிய திரைப்பட விருது விழாவுக்கு இளையராஜா, வெற்றிமாறன், தனுஷ்  செல்லவில்லை.

இவர்கள் தேசியவிருதை புறக்கணித்தது திரைப்படத்துறையில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தேசிய விருது என்பது சினிமாக்காரர்களுக்கு மிகப்பெரிய கௌரவம். அதை வாங்குவதற்காக ‘எப்படி எல்லாம் முயற்சி’ செய்கிறார்கள்?  எதை எல்லாம் இழக்கிறார்கள்? எதை எல்லாம் கொடுக்கிறார்கள் என்பது திரையுலகம் அறிந்ததுதான்.

இப்படி ‘கஷ்டப்பட்டு’ வாங்கிய தேசிய திரைப்பட விருதை வாங்குவதற்கு ஏன் செல்லவில்லை?

முதலில் தனுஷ்…

மாநில அளவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட விசாரணை படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். அந்த அடிப்படையில் படத்தை தயாரித்த தனுஷும், இயக்குநர் வெற்றிமாறனும் விருதை வாங்க செல்ல வேண்டும். இருவருமே விருது வாங்க செல்லவில்லை.

கோடைவிடுமுறையைக் கொண்டாட குடும்பத்துடன் லண்டன் சென்றுள்ளார் தனுஷ். அதனால் அவருக்கு பதில் நிர்வாகத்தயாரிப்பாளரான வினோத் என்பவர் விருதை பெற்றுள்ளார். வெற்றிமாறனோ சென்னையில்தான் இருந்தார். ஆனாலும்  தேசிய விருது பெற செல்லவில்லை.

பாலுமகேந்திரா உயிரோடு இருந்தவரை வெற்றிமாறன் விரும்பியபடி அவருக்கு தேசிய விருதுகள் கிடைத்தன.

பாலுமகேந்திரா இறந்த பிறகு தேசிய விருது விஷயத்தில் அவரால் நினைத்ததை பெற முடியாமல்போனது.

2015 ஆம் ஆண்டுக்கான விருதுப்பட்டியலில், தேசிய அளவில் சிறந்த இயக்குநர் என்ற பிரிவில், தனக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று விரும்பினார் வெற்றிமாறன்.

அது அவருக்கு கிடைக்கவில்லை. அந்தக் கோபத்தில்தான் வெற்றிமாறன் டில்லிக்கு செல்லவில்லை. உடம்பு சரியில்லை என்று நொண்டிச்சாக்கு சொல்லிவிட்டு வீட்டில் படுத்துக் கொண்டார்.

இளையராஜாவுக்கு என்னாச்சு? அவர் ஏன் தேசிய விருதை வாங்கவில்லை?

இளையராஜாவைப் பொருத்தவரை, ரோஜா படத்தில் என்றைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானாரோ அன்றிலிருந்தே அவருக்கு மனப்பிரச்சனைதான்.

தன்னால் சாதிக்க முடியாத சாதனைகளை எல்லாம் – ஆஸ்கார் விருதுகள் பெற்றது உட்பட – ஏ.ஆர்.ரஹ்மான் செய்ததை இன்னமும் ஜீரணிக்க முடியாமல் அஜீரணக்கோளாறில் அவதிப்பட்டு வரும் இளையராஜாவுக்கு, 2015 ஆம் ஆண்டுக்கான  தேசிய விருது அறிவிப்பு  மேலும்  கோபத்தை ஏற்படுத்தியது.

அதாவது, சிறந்த இசையமைப்பாளர் என்ற பிரிவில் இளையராஜாவுக்கு தேசிய விருத வழங்கப்படவில்லை.

தாரைதப்பட்டை படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கும், சிறந்த பாடலுக்காக  கேரளாவைச் சேர்ந்த ஜெயசந்திரன் என்ற இசையமைப்பாளருக்கும் விருது பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

இதுதான் இளையராஜாவின் கோபத்துக்கு காரணம். பின்னணி இசை, பாடல்கள் என பிரித்து விருது தரக்கூடாது என்று நினைக்கிறார் இளையராஜா. அதனாலேயே தேசிய விருதைப்பெற அவர் செல்லவில்லை. இப்படி தேசிய விருதை புறக்கணிப்பது இளையராஜாவுக்கு புதிதல்ல. இது இரண்டாவது முறை. 2009 ஆம் ஆண்டு பழசிராஜா என்ற படத்துக்காக இளையராஜாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட போதும் தேசிய விருதை பெற அவர் செல்லவில்லை.

தனக்கான விருதை இன்னொருவருடன் பகிர்ந்து கொடுக்கிறார்களே என்று ஒரு படைப்பாளிக்கு கோபம் வருவது நியாயம்தான். அதிலும் இளையராஜா போன்ற ‘இசைமேதைக்கு’ கோபம் வந்தே தீர வேண்டும்.

அதே நேரம், கடந்த 20 வருடங்களாக தன்னுடைய இசை எவரையும் ஈர்க்கவில்லை என்பதையும், நாம் இசையமைத்து ஒரு பாடல் கூட ஹிட்டாகவில்லை என்பதையும், நாம் இசையமைத்த படங்கள் எல்லாம் – தாரை தப்பட்டை உட்பட – தியேட்டரில் ஓடாமல், தியேட்டர்களைவிட்டு தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதையும், தாரை தப்பட்டை படத்துக்காக தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகூட தன்னுடைய தம்பி கங்கை அமரன் கெஞ்சிக்கூத்தாடி அண்ணனுக்காக ‘வாங்கிட்டு வந்தது’ என்பதையும் இளையராஜா எண்ணிப்பார்த்துவிட்டு தன்னுடைய ரோஷத்தைக் காட்ட வேண்டும்.