இளையராஜா நாட்டை விட்டு செல்ல வேண்டும்…! – பொளந்து கட்டும் கங்கை அமரன்

949

2015 ஆம் ஆண்டுக்கான 63 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் வைபவம் நேற்று முன்தினம் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்துக்கு சிறந்த மாநில மொழி படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டிருந்தது. தயாரிப்பாளர் தனுஷ் சார்பில் நிர்வாகத்தயாரிப்பாளரான வினோத் பெற்றுக் கொண்டார்.

விசாரணை படத்தில் நடித்த சமுத்திரகனிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சமுத்திரகனி பெற்றுக் கொண்டிருக்கிறார்.

விசாரணை படத்தின் எடிட்டரான மறைந்த கிஷோருக்குசிறந்த எடிட்டருக்கான விருது. கிஷோர் சார்பில் அவருடைய தந்தை பெற்றுக் கொண்டார்.

இறுதி சுற்று படத்தில் நடித்த ரத்திகா சிங்குக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

தாரைதப்பட்டை படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது அறிவிக்கப்பட்டது.

சிறந்த பாடலிசைக்கான விருது மலையாளப்பட இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் என்பவருக்கும் அறிவிக்கப்பட்டது.

எனக்கு மட்டும் வழங்க வேண்டிய விருதை இன்னொருவருக்கு பகிர்ந்து கொடுப்பதா என்ற கோபத்தில் தேசியவிருதை நிராகரித்துவிட்டார் இளையராஜா.

ஜனநாயக நாட்டில் விருது பெறுவது அவரவர் உரிமை என்றாலும், குடியரசுத்தலைவரால் வழங்கப்படும் தேசிய விருதை புறக்கணிப்பது அரசாங்கத்தை மறைமுகமாக எதிர்ப்பதாகவே கருதப்படுகிறது.

தேசிய விருது கமிட்டியில் இருந்தபடி தன் அண்ணனுக்கு தேசிய விருது கிடைக்க காரணமாக இருந்தவர் கங்கை அமரன்.

அண்மையில் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ள கங்கை அமரன் தேசிய விருது தேர்வு கமிட்டியில் இருந்தபடி மற்ற ஜூரிக்களிடம் மன்றாடி, தன் அண்ணனுக்கு விருது கிடைக்கச் செய்தார் என்று சொல்லப்பட்டது.

பலரின் காலைப்பிடிக்காத குறையாய் கங்கை அமரன்   வாங்கிக் கொடுத்த தேசிய திரைப்பட விருதைத்தான் இளையராஜா புறக்கணித்துள்ளார்.
இது பற்றி, கங்கை அமரனிடம் கேட்டால் கொந்தளிக்கிறார்.

“நாட்டின் மிகப்பெரிய மரியாதை இது. அதை புறக்கணிக்க கூடாது. இந்திய அளவில் போட்டியிட்டு இந்த விருதை பெறுகிறார்கள். இவர்கள் படத்தை அனுப்பியதால், அதை பார்த்து விருது கொடுத்தோம். இந்த கௌரவத்தை மறுக்கலாமா?

நாட்டின் முதல் மனிதரான ஜனாதிபதியை, இந்த நாட்டை அவமானப்படுத்தும் விஷயம் இது. இளையராஜா இரண்டாவது முறையாக இப்படி செய்கிறார். பழசிராஜா படத்துக்கும் இப்படித்தான் புறக்கணித்தார்.

இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நம் தேசத்தை புறக்கணிக்கும் செயல் இது. தனது கருத்தை அவர் வெளிப்படையாக அவர் சொல்லியிருக்க வேண்டும்.

நான் விருது வாங்க போக மாட்டேன் என்றாவது அறிவித்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால், தனது சார்பில் மகன் யுவன் அல்லது கார்த்தியை அனுப்பி வைத்து இருக்க வேண்டும்.

இளையராஜா ஒரு கர்வி என்ற பெயர் இருக்கிறது. ஜனாதிபதி தரும் விருதை புறக்கணித்து அந்த பெயரை தக்க வைத்திருக்கிறார்.

இவர்கள் அனைவரும் தனியார் விருதுகளுக்கு செல்கிறார்கள். வெளிநாடுகளுக்கு சென்று கூட பல்லை இளித்துக் கொண்டு, தனியார் விருதை வாங்குகிறார்கள்.

இந்திய அரசாங்கம் தரும் விருதை புறக்கணிக்கிறார்கள்.

அரசாங்கம் என்ன அவ்வளவு கேவலமானவர்களா?

இந்திய அரசு தரும் விருதை புறக்கணிக்கும் இவர்கள் நாட்டை விட்டு செல்ல வேண்டும்.

தாய் நாட்டை மதிக்காதவர்களை, தனியார் விருதுகளை கொண்டாடுபவர்களை வேறு என்ன சொல்ல முடியும்.

எனக்கு வேண்டாம் என்று மறுத்தால், விருது குழு அடுத்த திறமைசாலிக்கு கொடுத்து இருக்கும்.

இனி இவர்களுக்கு தேசிய விருது கிடைக்காது. ஒரு நல்ல படத்துக்கு தேசிய விருதை சிபாரிசு செய்தால் அவங்க விருது வாங்க வரமாட்டாங்க. நாம தர வேண்டாம் என்று விருது குழு முடிவு செய்துவிடும்.

கோவாவில் நடந்த திரைப்படவிழாவில் விருது வாங்கிய இளையராஜா, டில்லி ஜனாதிபதி நிகழ்ச்சியை புறக்கணித்தது ஏனோ?

எனக்கு ஏகப்பட்ட போன்கள்.

அவர் தரப்பில் விசாரித்தால் திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டார் என்கிறார்கள். தனியார் அழைப்பு தரும் விருதுக்கு அவ்வளவு மரியாதை தருபவர்கள். அதை காத்துகிடந்து வாங்குபவர்கள் தாய் நாடான இந்தியாவை புறக்கணிக்கிறார்கள். இவர்களை என்ன சென்று சொல்வது” என்று காட்டமாக பதில் சொல்லி இருக்கிறார்.