இடம் பொருள் ஏவல் பாடல் இணையத்தில் வெளியானதை வேடிக்கை பார்ப்பது ஏன்? – சீறுகிறார் சீனுராமசாமி

772

தனுஷ் நடித்த 3 படத்தின் கொலவெறி பாடல் முறையாக வெளியாகும் முன்பே திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானது. எனவே வேறு வழியில்லாமல் சிங்கிள் ட்ராக்காக யூடியூபில் வெளியிட்டனர். அந்தப்பாடல் சரித்திரம் படைத்தது.

இந்த அதிசயம் திருட்டுத்தனமாக வெளியிடப்படும் எல்லா பாடல்களுக்கும் நடக்கும் என்று சொல்ல முடியாது.

ஆனால் முறையாக இசைவெளியீடு நடப்பதற்கு முன் பாடல்களை திருடி இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடுவது தொடர்ந்து நடைபெற்றே வருகிறது.

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் பாடல் ஒன்றும் இப்படி திருட்டுத்தனமாக வெளியாகி இருக்கிறது.

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து மற்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும் கவிஞர் வைரமுத்துவும் முதன்முதலாக இப்படத்தில் கைகோர்த்துள்ளனர்.

எனவே, திரையார்வலர்கள் மத்தியிலும் இசைப்பிரியர்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது – இடம் பொருள் ஏவல்.

இப்படத்தின் பாடல்களை வருகிற 18 ஆம் தேதி வெளியிட முடிவு செய்து, அதற்குரிய ஏற்பாடுகளில் பட நிறுவனம் இறங்கியிருந்தது.

இந்த நிலையில்தான் இணையத்தில் திருட்டுத்தனமாக இப்படத்தின் பாடல்கள் வெளியாகி இருக்கிறது.

18 ஆம் தேதி வெளியாக வேண்டிய பாடல்கள், ஒரு வாரத்திற்கு முன்பே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானதில், தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் உள்ளிட்ட படக்குழு வருத்தத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளது.

இதுகுறித்து இயக்குநர் சீனுராமசாமியிடம் பேசியபோது கடும் வருத்தத்தில் இருந்தார்…

‘‘முதன்முறையாக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும் கவிஞர் வைரமுத்துவும் இணையும் படம் இது என்பதால், இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் பொதுவான திரையார்வலர்கள் மத்தியிலும் படத்தின் பாடல்கள் குறித்த பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. பாடல்கள் அனைத்தும் மிகச்சிறப்பாக வந்துள்ளன. அதனை டிசம்பர் 18 ஆம் தேதி, அனைவர் முன்னிலையிலும் வெளியிடலாம் என்ற திட்டத்தில் அதற்கான வேலைகளில் நாங்கள் ஈடுபட்டு வந்தோம்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் பாடல்கள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். வேறு எந்த தொழிலிலும் திரைத்துறையில் இருக்குமளவிற்கு பாதுகாப்பற்ற தன்மை இருக்குமா என்று தெரியவில்லை.

மொத்தத் துறையும் ஒரு முறையான முழுமையான பாதுகாப்பற்ற சூழலிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது.
யார் மூலம், எப்படி இந்த பாடல்கள் இணையத்தில் வெளியாகின என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் மிகுந்த சிரத்தையெடுத்து உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு இப்படி திருட்டுத்தனமாக மக்களை சென்றடைந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் மனஉளைச்சலையும் தருகிறது.

‘உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்பார்கள். ஆனால் இங்கே எங்களுக்கு நிலம் கூட மிஞ்சாத நிலை உள்ளது.

இதனை தடுப்பதற்கான வலிமையான முறைகளை விரைந்து உருவாக்க வேண்டிய தேவையும் அவசரமும் உள்ளது. ஆனால் அனைவரும் இந்த நிலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது’’ என்று தனது வருத்தத்தை பதிவு செய்தார்.

இடம்பொருள் ஏவல் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. ஜனவரியில் படம் திரைக்கு வருகிறது.