விஜய்யின் உண்மையான சம்பளம் எவ்வளவு?

2063

சினிமா நட்சத்திரங்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவது புதிதல்ல. கடந்தகாலங்களில் எத்தனையோ முன்னணி நடிகர். நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பைனான்சியர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளனது.

ஆனால் கடந்த வாரம் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு காரணமாக வருமானவரித்துறை வசமாய் வாங்கிக்கட்டிக்கொண்டது. வசவுகள், விஜய் விட்டில் ரெய்டு நடத்தியதற்காக அல்ல, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவது அறிந்து, லொகேஷனுக்கே சென்று விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாய் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தங்களுடன் வருமாறு விஜய்யை நிர்ப்பந்தித்த வருமானவரித்துறை அதிகாரிகள், தன்னுடைய காரில் வருவதாக சொன்ன விஜய்யை வலுக்கட்டாயமாக தங்களுடைய காரில் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு வந்ததுதான் சர்ச்சைக்குள்ளானது.

கடந்த சில வருடங்களாக தன்னுடைய படங்களில் மத்திய அரசுக்கு எதிரான வசனங்களை பேசி வருகிறார் விஜய். அதன் காரணமாகவே… அதாவது விஜய்யை கொஞ்சம் தட்டி வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சோதனை நடைபெற்றதாக சர்ச்சைகள் எழுந்தன.

சினிமாத்துறையில் சொல்லப்படும் காரணமோ வேறு. பிகில் படத்தில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 50 கோடி. ஆனால் கணக்கில் காட்டப்பட்டது வெறும் 30 கோடிதான். இதை மோப்பம் பிடித்ததினாலேயே பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் படநிறுவனம், அப்படத்துக்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன், மற்றும் விஜய் ஆகியோர் வருமானவரித்துறையினரால் வளைக்கப்பட்டனர் என்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, செந்த காசிலேயே சூன்யம் வைத்துக் கொண்டகதையாக இப்படியொரு ஐடி ரெய்டு நடப்பதற்கு காரணமே ஏஜிஎஸ் நிறுவனர் கல்பாத்தி அகோரத்தின் மகள் அர்ச்சனாதான் என்கின்றனர் திரையுலகினர்.

தமிழ்சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக ட்விட்டர் பிரமோஷன் என்ற பெயரில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று வருகிறது. தங்களுக்கு பொய்யாக பில்ட்அப் தேடிக்கொள்ள நினைக்கும் படநிறுவனங்கள், நடிகர், நடிகைகள் ட்விட்டரில் டிரெண்டிங்கில் வந்தால் கெத்து என நினைக்கின்றனர்.

இப்படிப்பட்டவர்களை குறிவைத்து ஒரு கும்பலே வேலை செய்கிறது. பொய்யான ஃபாலோயர்களை உருவாக்கி வைத்திருக்கும் சிலர் பட புரமோஷன் செய்வதற்காக லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்கின்றனர்.

படங்களுக்கும் கலைஞர்களுக்கும் பிரமோஷன் கொடுக்க இப்படிப்பட்ட நபர்களைத் தேடிப்போகும் பி.ஆர்.ஓக்களும், சில தனிப்பட்ட நபர்களும் டிஜிட்டல் பிரமோஷன் என்ற பெயரில் தயாரிப்பாளர்களை ஏமாற்றி வருகின்றனர். படம் வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே படம் சூப்பர் ஹிட், 5/5 ஸ்டார் ரேட்டிங், முதல்நாள் வசூல் 100 கோடி என்றெல்லாம் ட்விட்டரில் பொய்யான தகவல்களை தட்டிவிடுவார்கள்.

படம் வெளியான முதல் நாளிலேயே 50 கோடி வசூல் 100 கோடி வசூல் என பொய்யான வசூல் கணக்குகளை அள்ளி விடுவதற்காகவே இப்படிப்பட்ட ட்விட்டர் குருவிகளுக்கு பணத்தை வாரி இறைக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

படம் வெற்றி என ரசிகர்களிம் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், படம் நன்றாக இருக்கும் என நினைத்து ரசிகர்களும் தியேட்டர்களுக்குப்போய் படத்தைப் பார்த்துவிட்டு ஏமாந்து போகிறார்கள்.

இப்படியாக பொய்யான வசூல் கணக்குகளை அள்ளிவிடும் ட்விட்டர் குருவியாக, பிகில் படத்தின் தயாரிப்பாளரான கல்பாத்தி அர்ச்சனாவும் மாறிப்போனார். அதாவது பிகில் படத்தின் பட்ஜெட் தொடங்கி, பிசினஸ், வசூல் பற்றி பொய்யான, மிகையான நம்பர்களை ட்விட்டரில் பதிவிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இதன் காரணமாகவே ‘பிகில்’ படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமும், அந்தப் படத்தில் நடித்த விஜய்யும் வருமான வரித்துறையினரிடம் சிக்கியதாக சொல்கிறார்கள் படத்துறையினர்.

இனி, பணம் வாங்கிக் கொண்டு டிஜிட்டல் புரமோஷன் என்ற பெயரில் ட்விட்டரில் பொய்யான தகவல்களைப் பதிவிடுபவர்களை என்கரேஜ் செய்யக்கூடாது, அவர்களை தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்து பெரும் தொகையை வாங்கிக் கொடுத்துவிட்டு அவர்களிடம் கமிஷன் வாங்கிக்கொண்டிருக்கும் பிஆர்ஓக்கள், மற்றும் சில டிஜிட்டல் புரமோஷன் ஏஜென்சிகளை பயன்படுத்தக் கூடாது என தயாரிப்பாளர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களை சினிமாத்துறையைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்ற குரலும் கோலிவுட்டில் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

– ஜெ.பிஸ்மி