ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஹாட்ரிக் சாதனை

0

மலையாளத் திரைப்படங்களை கேரளாவுக்கு அப்பால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வரும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், ( Future Runup ) ‘லோகா’, ‘களம்காவல்’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களின் தொடர் வெற்றியின் மூலம் விநியோகத் துறையில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க விநியோக நிறுவனமாக உருவெடுத்துள்ள ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், கேரளத்திற்கு வெளியே மலையாள சினிமாவுக்கான புதிய சந்தைகளை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

தயாரிப்பாளரும் நடிகருமான அருண் நாராயணன், நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன் மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அனூப் குமார் ஆகியோரால் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் மலையாளத் திரைப்படங்களை விநியோகிப்பதில் கவனம் செலுத்திய இந்நிறுவனத்தின் முதல் வெளியீடாக டொவினோ தாமஸ் நடித்த ‘நரிவெட்டா’ திரைப்படம் அமைந்தது. தொடர்ந்து ஷேன் நிகம் நடித்த ‘பல்டி’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டு தனது விநியோகப் பணியை வலுப்படுத்தியது.

கடந்த ஓணம் பண்டிகையையொட்டி துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான ‘லோகா: சேப்டர் 1 – சந்திரா’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் விநியோகம் செய்தது. இதனைத் தொடர்ந்து ஜிதின் K. ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘களம்காவல்’ திரைப்படத்தையும் தமிழ்நாட்டில் வெளியிட்டது. இந்த இரு படங்களுக்கும் கிடைத்த வரவேற்பு, நிறுவனத்தின் விநியோகப் பயணத்திற்கு மேலும் வலுசேர்த்தது.

இந்நிலையில், இந்த ஓணம் பண்டிகையில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் விநியோகம் செய்கிறது. கிரிஷ் A.D. இயக்கியுள்ள இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றன. இப்படத்தை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் விநியோகம் செய்கிறது.

இதன் மூலம், கேரளத்திற்கு வெளியே மலையாளத் திரைப்படங்களை விநியோகம் செய்வதில் ‘லோகா’, ‘களம்காவல்’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ எனத் தொடர் வெற்றிகளைப் பெற்று ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. கேரளத்திற்கு வெளியே மலையாள சினிமாவுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி, தரமான திரைப்படங்களை நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மலையாள சினிமா கேரள எல்லைகளைத் தாண்டி இந்திய அளவில் தனது வரவேற்பை விரிவுபடுத்தி வரும் நிலையில், ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் மலையாளத் திரைப்படங்களுக்கான தேசிய அளவிலான விநியோகத் துறையில் வளர்ந்து வரும் முக்கிய நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது.