அடுத்தடுத்து மூன்று படங்கள்… ஆச்சர்ய கவனிப்பு

54

சுட்டகதை என்ற படத்தை தயாரித்த ‘லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியானது ‘நட்புனா என்னானு தெரியுமா’ படம் மட்டுமே.

இந்தப்படத்துக்கு பல தடவை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, அந்த தேதிகளில் படத்தை வெளியிட முடியாமல் திணறிப்போனார். பிறகு ஒருவழியாக கடந்த மாதம் அந்தப்படத்தை வெளியிட்டார்.

‘நட்புனா என்னானு தெரியுமா’ படம் எதிர்பார்த்த வெற்றியைப்பெறாததினால் அவருக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களை வாங்கிக்குவித்துக் கொண்டிருக்கிறார்.

‘யோகி’ பாபு நடிக்கும் ‘கூர்கா’, அமலா பால் நடிக்கும் ‘அதோ அந்த பறவைப் போல’ ஆகிய படங்களின் தமிழக விநியோக உரிமையை வாங்கினார் இவர். அந்த வரிசையில் இப்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஐங்கரன்’ படமும் இடம் பிடித்துள்ளது. ‘ஈட்டி’ படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், மகிமா நம்பியார் நடித்துள்ள ‘ஐங்கரன்’ படத்தை விஜய்சேதுபதியின் நண்பர் கணேஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடந்து வந்தநிலையில் இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை லிப்ரா புரடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் வாங்கியுள்ளார்.

இதனால் இவரது வெளியீட்டில் அடுத்தடுத்து இந்த மூன்று படங்களும் வெளியாக இருக்கின்றன.

சொந்தமாக தயாரித்த படம் தோல்வியடைந்த நிலையில் அடுத்தடுத்து மூன்று படங்களை வெளியிடும் இவரது செயல்பாடுகளை படத்துறையினர் ஆச்சர்யத்தோடு கவனித்து வருகின்றனர்.