திரித்துப் பேசும் திரையுலகினர்…. சிரித்துப்பேசும் அமைச்சர்கள்….

1087

திரையரங்கு கட்டணங்களுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டநிலையில், தமிழக அரசு தன் பங்குக்கு 30 சதவிகிதம் கேளிக்கை வரிவிதித்தது.

இதை கண்டித்து ஜூலை 3 ஆம் தேதி முதல் தமிழகம் முழுக்க திரையரங்குகளை மூடுவதாக அறிவித்து, அதை செயல்படுத்தியும் விட்டனர்.

தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்ற பெயரில் இந்த ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டாலும் உண்மையில் இதை செய்தது திரையரங்கு உரிமையாளர்கள்தான்.

“சினிமா துறையில் ஜிஎஸ்டி வரி 28%, கேளிக்கை வரி 30% வசூலிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் 58% வரி விதித்தால் திரையரங்குகள் எப்படி செயல்பட முடியும்? 100 ரூபாய் டிக்கெட் வருமானம் என்றால் அதில் 58 ரூபாய் அரசுக்கே செலுத்த வேண்டி உள்ளது.” என்று தொடர்ந்து பேசி வருகிறார் தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன்.

உண்மையில் அபிராமி ராமநாதன் சொல்வது தவறான தகவல்…

100 ரூபாய்க்குள் டிக்கெட் கட்டணம் வசூலித்தால் ஜி.எஸ்.டி. 18 சதவிகிதம் என்றும், 100 ரூபாய்க்கு மேல் டிக்கெட் கட்டணம் வசூலித்தால் ஜி.எஸ்.டி. 28 சதவிகிதம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல, ஜி.எஸ்.டி. என்பது டிக்கெட் கட்டணத்தை உள்ளடக்கியது அல்ல. டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக வசூலிக்கப்படுவது.

உதாரணமாக…. டிக்கெட் கட்டணம் 100 ரூபாய் என்றால் அதற்குமேல் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. (18 ரூபாய்) சேர்த்து 118 ரூபாய் வசூலிப்பார்கள்.

150 ரூபாய் கட்டணம் என்றால், அதற்குமேல் 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி. சேர்த்து (42 ரூபாய்) 192 ரூபாய் வசூலிப்பார்கள்.

அதாவது, ஜி.எஸ்.டி.18 சதவிகிதமோ, 28 சதவிகிதமோ அது மக்களிடமிருந்துதான் பிடுங்கப்படும்.

உண்மை இப்படி இருக்க, தியேட்டர் கட்டணத்திலிருந்து ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என்பதுபோல் அபிராமி ராமநாதன் தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

இவர் இப்படி சொல்வதை ஆமோதிப்பதுபோல் மற்ற சினிமாக்காரர்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

உண்மையிலேயே அவர்களுக்கு இந்த விவரம் தெரியவில்லையா… அல்லது பொதுமக்களிடம் அனுதாபத்தை பெறுவதற்காக அமைதியாக இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க, என்னதால் உருண்டு புரண்டாலும் ஜி.எஸ்.டி.யை மாற்ற முடியாது என்பதை புரிந்து கொண்ட திரையுலகினர், “நாங்கள் ஜிஎஸ்டி வரியை எதிர்க்கவில்லை. கேளிக்கை வரியைத்தான் எதிர்க்கிறோம்.” என்று சொல்லித்தான் தற்போது திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்துகின்றனர்.

திரையரங்கு கட்டணங்களுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டநிலையிலும், அவசர அவசரமாக தமிழக அரசு தன் பங்குக்கு 30 சதவிகிதம் கேளிக்கை வரிவிதித்தது ஏன்?

இந்த கேளிக்கை வரிதான் ஆளும்கட்சிக்கு குறிப்பாக, வணிகவரித்துறை அமைச்சருக்கு கோடிகளை அள்ளித்தரும் அட்சயப்பாத்திரம்.

யு சான்றிதழ் பெற்ற படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்க வேண்டுமானால் 5 லட்சம் முதல் 75 லட்சம் வரை வணிகவரித்துறை அமைச்சகத்துக்கு லஞ்சம் கொடுத்தே தீர வேண்டும். ஒரு வருடத்துக்கு சுமார் 200 படங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்படுகிறது. எத்தனை கோடியை லஞ்சமாக வாங்குகிறார்கள் என்று கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள்…

இத்தனை கோடிகள் லஞ்சமாகக் கிடைப்பதற்கு காரணமாக இருக்கும் கேளிக்கைவரியை அரசாங்கம் நீக்குமா?

இந்த லாஜிக் புரியாமல் திரையரங்குகளை மூடிவிட்டு ஆளும்கட்சியுடன் முட்டிமோதிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் முக்கிய அமைச்சர்களை சந்தித்த திரையுலக முக்கியஸ்தர்கள், கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, 75 சதவிகித படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்கிறோமே… அப்புறம் ஏன் இதை நீக்க சொல்கிறீர்கள் என்று கேட்டாராம் நம்பர் 2 அமைச்சர்.

அப்போது, வரிவிலக்கு வாங்க பெரும் தொகையை லஞ்சமாக வழங்க வேண்டியிருக்கிறது என்று தயங்கி தயங்கி சொன்னபோது, அதை பெருசு பண்ணாதீங்க… அதெல்லாம் கைசெலவுக்கு என்று சிரித்து மழுப்பினாராம் மற்றொரு அமைச்சர்.

கேளிக்கை வரி குறித்த தமிழக அரசின் எண்ணம் இப்படி இருக்க, திரையுலகினரின் போராட்டத்துக்கு என்ன பலன் கிடைத்துவிட போகிறது…?

– ஜெ.பிஸ்மி