கவுண்டமணி பற்றிய வதந்தி… – சிக்கினார் சினிமா நிருபர்….

goundamani

வாட்ஸ்அப்பும், ஃபேஸ்புக்கும் வந்த பிறகு வதந்தி பரப்புகிறவர்களுக்கு வசதியாகிவிட்டது.

வாட்ஸ்அப்பில் வருகிற செய்திகளின் உண்மையை உறுதி செய்யாமலே பலரும் அதை ஃபார்வேர்ட் செய்வதால் வதந்தி சற்று நேரத்திலேயே வதந்‘தீ’யாகிவிடுகிறது.

அதிலும் சினிமாக்காரர்கள் பற்றிய வதந்தி என்றால்… சொல்லவே வேண்டாம்.

திகுதிகுவென பற்றிக்கொண்டுவிடுகிறது.

இதனால் பாதிக்கப்படும் சினிமா பிரபலங்கள் பற்றி வதந்திகளை வாந்தி எடுப்பவர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை.

இப்படித்தான் கடந்த சில வருடங்களாக மனோரமாவை பல தடவை மரணம் அடைய வைத்தனர். இவர்களின் தொல்லை பொறுக்காமல் கடைசியில் போய் சேர்ந்துவிட்டார் ஆச்சி.

இப்படிப்பட்ட இழிவான வதந்தியால் கடுமையாய் பாதிக்கப்பட்டவர் அனேகமாக கவுண்டமணியாகத்தான் இருக்கும்.

சில நாள் இடைவெளியில் அடிக்கடி கவுண்டமணியைப்பற்றி வதந்திகள் வந்து கொண்டே இருந்தன.

பகல், இரவு என்று பாராமல் பத்திரிகை அலுவலகங்களுக்கு பலரும் போன் செய்து உண்மையா… உண்மையா… என உயிரை எடுத்தனர்.

இப்படிப்பட்ட வதந்திகள் கிளம்பும்போதெல்லாம்… நான் சாகவில்லை… உயிரோடுதான் இருக்கிறேன் என்று தன்னிலைவிளக்கம் சொல்லும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார் கவுண்டமணி.

இதற்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று தெரியாமல் மன உளைச்சலுக்குள்ளான கவுண்டமணி, கடைசியில் தன் வழக்கறிஞர் மூலம் சில வாரங்களுக்கு முன் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

கவுண்டமணியின் புகாரை பெற்றுக் கொண்ட சைபர்க்ரைம் போலீஸ் காரியத்தில் இறங்கியது.

கவுண்டமணியைப் பற்றிய வதந்தியின் பிறப்பிடம் எது என்று விசாரித்தபோது, இதற்கெல்லாம் காரணம் குறிப்பிட்ட ஒரு செல்போன் என்பதை கண்டறிந்தது சைபர் க்ரைம் போலீஸ்.

அந்த எண்ணிலிருந்து கிளப்பிவிடப்பட்ட கவுண்டமணி பற்றிய வதந்திகளை பட்டியல் எடுத்தது.

குற்றவாளி அந்த நபர்தான் என்று உறுதி செய்த பிறகு ஆளை ஒரே அமுக்காக அமுக்கி தூக்கிக் கொண்டு வந்தது.

யார் அந்த நபர்? அவருக்கும் கவுண்டமணிக்கும் இடையில் என்ன கட்டைப்பஞ்சாயத்து என்று அவரிடம் விசாரணையில் இறங்கியபோது அதிர்ச்சி தகவல் வெளியானது.

அந்த நபர்… ஒரு சினிமா இணைய தளத்தின் நிருபராம்.

கவுண்டமணியை தொடர்பு கொண்டு அவரிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு கவுண்டமணி மறுத்துவிட்டாராம்.

அந்த கடுப்பில்தான் இப்படி கவுண்டமணி பற்றிய வதந்தியை தொடர்ந்து பரப்பி வந்திருக்கிறார்.

நடிகை மஞ்சுளா இறந்தபோது அவரை அஞ்சலி செலுத்த வந்தவர்களை போட்டோ எடுத்து வைத்திருந்த அந்த நிருபர், போட்டோஷாப் மூலம் கவுண்டமணியின் போட்டோவை ஒட்ட வைத்து கவுண்டமணி இறந்துவிட்டதாக தன்னுடைய வதந்திக்கு வலு சேர்த்திருக்கிறார்.

இத்தனை நாட்கள் கவுண்டமணியின் நிம்மதியை காலி பண்ணியவர் ஒரு நிருபர் என்று தெரிந்ததும் ஜர்க் ஆகி இருக்கிறது சைபர் க்ரைம்.

மீடியா ஆளை கைது பண்ணினால் பிரச்சனை வருமோ என்று பயந்து அந்த நபரை எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறது.

பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பது என்றாலே கவுண்டமணிக்கு ஏனோ அலர்ஜி. பேட்டி என்றால் தவிர்த்துவிடுவார்.

அதே நேரம் தனிப்பட்டமுறையில் மணிக்கணக்கில் பத்திரிகையாளர்களிடம் பேசுவார்.

அதனால் பத்திரிகையாளர்களில் பல பேர் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள்.

இந்த உண்மை தெரியாமல், பேட்டி தரவில்லை என்ற கடுப்பில் கவுண்டமணியைப் பற்றி ஒரு நிருபர் வதந்தி பரப்பியிருக்கிறார் என்றால்… அந்த நிச்சயமாக பத்திரிகையாளராக இருக்கவே முடியாது.

அது மட்டுமல்ல, பத்திரிகையாளராகவே இருந்தாலும் குற்றம் செய்தவர் குற்றவாளிதானே? அவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையே…

காவல்துறை யோசிக்க வேண்டும்.

சம்மந்தப்பட்டவர் மீது தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.