மலேஷியாவில் படமாக்கப்பட்ட கில்லி பம்பரம் கோலி

2014

நம் மண்ணுக்கே உரிய விளையாட்டுகளில் ஒன்று…கில்லி பம்பரம் கோலி.

அதையே தலைப்பாகக் கொண்டு ஒரு படம் உருவாகிறது.

இப்படத்தை ஸ்ரீ சாய் ஃபிலிம் சர்க்யூட் என்ற பட நிறுவனம் சார்பாக டி. மனோஹரன் தயாரிப்பதோடு, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

கில்லி பம்பரம் கோலி படம் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

‘கில்லி பம்பரம் கோலி’ படம் பற்றி இயக்குநர் என்ன சொல்கிறார்?

“வெளிநாட்டில் வேலை செய்யும் மூணு பசங்க ஒரு பொண்ணு வெவ்வேறு சூழ்நிலைகளில் சந்தித்து நண்பர்கள் ஆகிறார்கள். அவர்கள் நல்ல நட்புடன் பழகி வரும்போது அந்த ஊரில் உள்ள ஒரு வில்லனிடம் ஏற்படும் பிரச்னையினால் அவர்கள் அந்த ஊரை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.ஊரை விட்டு வெளியேறாமல் இருந்து அந்த வில்லனை அழிக்க கத்தியின்றி, ரத்தமின்றி அவர்கள் எடுக்கும் ஆயுதம் தான் கில்லி, பம்பரம், கோலி.” என்ற சொல்லும் இயக்குநர் மனோஹரன், “இந்த படத்தில் காதல், டூயட் பாடல் எதுவும் இல்லாத நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.” என்றும் சொல்கிறார்.

முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்ட படம் இது.

புதுமுகங்களான தமிழ், பிரசாத், நரேஷ் என்று மூன்று பேர் கதையின் நாயகர்களாகவும், தீப்தி ஷெட்டி என்ற புதுமுகம் கதையின் நாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தில் வில்லனாக சந்தோஷ்குமார் என்ற புதுமுகம் அறிமுகம் ஆகிறார்.

படம் பார்க்க வருபவர்கள் ஒரு சில நிமிடங்களிலேயே புதுமுகங்களின் படம் என்பதை மறந்து படத்துடன் ஒன்றிவிடுவார்கள் என்றும் அந்த அளவுக்கு தமிழ், பிரசாத், நரேஷ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர் என்றும் சந்தோஷப்படும் இயக்குநர் இந்த ஆண்டின் சிறந்த புதுமுகத்துக்கான விருது தன் அறிமுகத்துக்கு கிடைக்கும் என்று இப்போதே பெருமைப்படுகிறார்.

கதாநாயகியான தீப்தி ஷெட்டி இந்தப்படத்தில் ஒப்பந்தம் ஆன பிறகு தெலுங்கு கன்னடம் என்று மற்ற மொழி படங்களிலும் நடித்து முடித்து இப்போது மூன்று படங்களுமே ஒரே நேரத்தில் ரிலீஸாகின்றன.

படம் முழுக்க புதுமுகங்களால் உருவாகியிருந்தாலும் இதுவரையில் நடித்திராத வித்தியாசமான வேடங்களில் கஞ்சாகருப்பும் தலைவாசல் விஜய்யும் நடித்துள்ளனர்.

பிரசாத்தின் இசையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆறு பாடல்களில் மூன்று பாடல்கள் விருதுக்கான தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால் ஏதோ ஒரு வகையில் தன் படத்துக்கு விருது நிச்சயம் என்று அடித்துக் கூறுகிறார்.

நாககிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், பி.சாய்சுரேஷின் படத்தொகுப்பும், தினாவின் நடன அமைப்பும் இந்த படத்தின் வெற்றிக்கு துணை சேர்க்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் மனோஹரன்.