கௌதம் மேனனுக்கு ஆதரவாக கட்டைப்பஞ்சாயத்து…! – ‘சாமி-2’ ஆடிய இயக்குநர் ஹரி….

1531

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக கலைப்புலி தாணு இருந்தபோது, கவுன்சிலில் கட்டைப்பஞ்சாயத்து நடக்கிறது என்று அந்த நிர்வாகத்தின் மீது விஷால் குற்றச்சாட்டு வைத்தார்.

தற்போது விஷாலும் அதே குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார் என்பதுதான் கொடுமை.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் துணைத்தலைவராக இருக்கும் கௌதம் மேனனுக்காக மற்றொரு துணைத்தலைவரான நடிகர் பிரகாஷ் ராஜ் தூண்டுதலில் விஷால் கட்டைப்பஞ்சாயத்து செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

சொன்ன தேதியில் படத்தை முடிக்காமல் இழுத்துக் கொண்டே போவது, ஒரு படத்தை முடிக்காமல் இன்னொரு படத்தை ஆரம்பிப்பது… என திருப்பதி சலூனைப்போல் திரைப்படங்களை இயக்கி வருபவர் கௌதம் மேனன்.

இவருக்கு நேர் மாறானவர் இயக்குநர் ஹரி. இவரது வெற்றிக்கு இவர் இயக்கும் படங்களின் வணிக வெற்றி மட்டும் காரணமில்லை. அவரது திட்டமிடலும் அசுர உழைப்பும்தான் முக்கிய காரணம்.

அன்றைய வீ.சேகரைப்போல் பக்காவாக திட்டமிட்டு படத்தை இயக்கத் தொடங்கும் ஹரி, ஒரு நொடியைக் கூட விரயமாக்காமல் படப்பிடிப்பு நடத்துவதில் பேர்போனவர்.

அவர் இயக்கிய படங்கள் ஓடுகிறதோ இல்லையோ, ஹரியை வைத்து படம் எடுத்தவர் நஷ்டப்பட மாட்டார்.

அப்படிப்பட்ட ஹரி, தன்னுடைய அடுத்தப் படமாக விக்ரமை வைத்து சாமி-2 படத்தை இயக்க திட்டமிட்டார்.

புலி படத்தை தயாரித்து நஷ்டப்பட்ட ஷிபு தமீன்தான் தயாரிப்பாளர்.

சாமி-2 படத்துக்கு கடந்த ஜூலை மாதம் முதல் கால்ஷீட் கொடுத்திருந்தார் விக்ரம்.

அதன்அடிப்படையில் பல கோடியை வட்டிக்கு வாங்கிவிட்டார் ஷிபு.

படப்பிடிப்புக்கான அத்தனை ஏற்பாடுகளையும் பக்காவாக செய்துவிட்டு ஹரி தயாரானபோது, துருவ நட்சத்திரம் படத்தை முடிக்க வேண்டும் என்று கௌதம் மேனன் கால்ஷீட் கேட்டதால் சாமி-2 படத்துக்கு ஒதுக்கிய கால்ஷீட்டை மேனனுக்கு கொடுக்க வேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் விக்ரம்.

அந்த தேதிகளிலும் படத்தை முடிக்காமல் ஆகஸ்ட் மாதமும் கால்ஷீட் வேண்டும் என்று கௌதம் மேனன் கேட்க, தன்னுடைய கால்ஷீட்டை இனியும் விட்டுத்தர மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஹரி.

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் துணைத்தலைவராக இருக்கும் நமக்கே கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்து தர மாட்டேன் என்று சொல்வதா என்று கடுப்பான கௌதம் மேனன், விஷயத்தை பிரகாஷ்ராஜ் காதில் போட, அவர் விஷாலுக்கு சொல்ல… அதன் பிறகு அரங்கேறியிருக்கிறது கட்டைப்பஞ்சாயத்து.

சாமி-2 படத்தின் இயக்குநர் ஹரி, தயாரிப்பாளர் ஷிபு இருவரையும் அழைத்து, ஆகஸ்ட் மாத கால்ஷீட்டை கௌதம் மேனனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.

முடியாது என்று ஹரி மறுக்க, தான் வெட்டியாய் வட்டி கட்டிக்கொண்டிருப்பதை ஷிபு எடுத்துச்சொல்ல நியாயம் கிடைக்கவில்லை.

அதனால், இங்கே நாம் என்னதான் கரடியாக கத்தினாலும் நமக்கு நியாயம் கிடைக்காது என்பதால் கிளம்பி வந்துவிட்டார்கள் ஹரியும், ஷிபுவும்.

அதையே அவர்களின் ஒப்புதலாக எடுத்துக் கொண்டு ஆகஸ்ட் மாத கால்ஷீட்டையும் பிடுங்கிவிட்டார் கௌதம் மேனன்.

இதன் பிறகும் துருவ நட்சத்திரம் படத்தை அவர் முடிக்கவில்லை என்பதுதான் கொடுமை. ஜூலை, ஆகஸ்ட் போய் இப்போது செப்டம்பர் மாத கால்ஷீட்டையும் கௌதம் மேனனுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு நடித்துக் கொண்டிருக்கிறார் விக்ரம்.

செப்டம்பர் மாதத்திலும்கூட துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் மேனன் முடிக்க வாய்ப்பில்லை. அனேகமாக அக்டோபர் மாத கால்ஷீட்டிலும் கையை வைக்க வாய்ப்பிருக்கிறது என்பதே லேட்டஸ்ட் தகவல்…

சென்னையில் ஓடுகிற பல ஆட்டோக்களில் இப்படி ஒரு வாசகம் இடம்பெற்றிருக்கும். அதை கௌதம் மேனன் படித்ததில்லை போலிருக்கிறது.

என்ன வாசகம்?

நீ வாழ பிறரைக் கெடுக்காதே…

– ஜெ.பிஸ்மி