ரஜினிகாந்தை கலாய்க்கும் கஜினிகாந்த்… வேடிக்கைப்பார்க்கும் சினிமா சங்கங்கள்…

1277

நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோரின் நெருங்கிய உறவினரும், பங்குதாரரும், சிவகுமார் குடும்பத்தினரால் திரைப்படத்துறைக்கு அழைத்துவரப்பட்டவருமான ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா, ஹர ஹர மகாதேவகி என்ற ஆபாசப்படத்தை அண்மையில் தயாரித்து வெளியிட்டார். வணிகரீதியில் அப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, பல்லு படாம பாத்துக்கணும், பஜனைக்கு வாங்க போன்ற ஆபாசத்தலைப்புகளுடன் படங்களைத் தயாரித்து வருகிறார்.

அதோடு, ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் என்ற படத்தையும் தொடங்கியுள்ளார்.

ரஜினியை கிண்டல் பண்ணும்விதமாக கஜினிகாந்த் படம் தயாராகவிருப்பதாக படத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், திரைப்பட அமைப்புகள் அது பற்றி கண்டுகொள்ளவே இல்லை.

kajinikanth-jpeg

ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடும் இந்த நாளில் அவரை அவமதிக்கும் வகையில், கஜினிகாந்த் என்ற தலைப்பில் போஸ்டர் வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
அவரது செயலை கண்டித்து, தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது…

“ரஜினி என்கிற மாபெரும் கலைஞரை அவமதிக்கும் விதமாக கஜினிகாந்த் என்ற தலைப்பில் விளம்பரம் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகி ஞானவேல் ராஜாவுக்கு ஒட்டுமொத்த திரைத் துறையின் சார்பில் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ரஜினிகாந்த் என்பது வெறும் பெயரல்ல. நான்கு தலைமுறையைத் தாண்டிய தமிழ் சினிமாவின் உழைப்பு, அடையாளம். இந்திய சினிமாவை, குறிப்பாக தமிழ் சினிமாவையும் அதன் வர்த்தகத்தையும் உலகளாவிய நிலைக்குக் கொண்டு சென்ற உச்ச நட்சத்திரம் அவர்.

இன்று பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, இந்திய சினிமா தாண்டி, உலக அளவில் கலைஞர்களும் தலைவர்களும் வாழ்த்தியும் கொண்டாடியும் மகிழும் இந்தத் தருணத்தை அசிங்கப்படுத்தும் நோக்கில், அவர் பெயரின் முதல் எழுத்தைத் திரித்து ‘கஜினிகாந்த்’ என தான் தயாரிக்கும் ஆபாசப் படத்துக்கு தலைப்பிட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர் திரு ரஜினிகாந்த். அவரை அவமதிக்கும் இந்தத் தலைப்பை நடிகர் சங்கம் எப்படி மௌனமாக அனுமதிக்கிறது? ரஜினி ரசிகன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஆர்யா இந்தப் படத்தில் நடிப்பது எத்தனை கபடமான செயல்!

சமூக அக்கறையும் இளைய தலைமுறையினரை நெறிப்படுத்துவதில் ஆர்வமும் காட்டும் மூத்த கலைஞர் சிவகுமார் போன்றவர்கள் இதனை எப்படி அனுமதிக்கிறார்கள்? இந்த நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினரான உலகநாயகன் கமல் ஹாசன் இந்த விஷயத்தில் மௌனம் சாதிப்பது ஏன்?

மேலும் ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, பல்லு படாம பாத்துக்கணும், பஜனைக்கு வாங்க போன்ற கேவலமான தலைப்புகளை வைத்து மூன்றாம்தர செக்ஸ் படங்களைத் தயாரித்து வரும் ஞானவேல் ராஜாவை தயாரிப்பாளர் சங்கம் கண்டிக்காமல் அனுமதிப்பது வேதனை அளிக்கிறது. இனி இதுபோன்ற தலைப்புகளை தமிழ் சினிமாவில் யாருக்கும் அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்.”

– என்று அந்த அறிக்கையில் ஆர் ராதாகிருஷ்ணன் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு மட்டுமல்ல, ரஜினியின் ரசிகர்களுக்கும் ரத்தம் சுண்டிப்போய்விட்டதால் ஆர்யா எல்லாம் ரஜினியை நக்கலடிக்கும்நிலை ஏற்பட்டுவிட்டதை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.

இந்த லட்சணத்தில் ரஜினி கட்சி ஆரம்பித்து…. ஹூம்….