மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – No Retakes Allowed’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், துருவ் விக்ரம் இதுவரை ஏற்றிராத வகையில் ஸ்டைலிஷான மாஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், காமிக் புக் பாணியிலான காட்சியமைப்புடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
போஸ்டரில் வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றுள்ள துருவ் விக்ரமின் தீவிரமான பார்வையும் ஆக்ரோஷமான உடல்மொழியும் கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றன. ‘No Retakes Allowed’ என்ற டேக்லைன் படத்தின் அதிரடி பின்னணியை உணர்த்துகிறது.
இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜெயசூர்யா எஸ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஜி.எம். சேகர் தயாரிப்பு வடிவமைப்பையும், விக்ரம் மோர் சண்டைக் காட்சிகளையும் கவனிக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் மைத்ரி மூவி மேக்கர்ஸின் நான்காவது தயாரிப்பாக உருவாகும் ‘ஜாக்கி’, துருவ் விக்ரமின் புதிய திரைமுகத்தை அறிமுகப்படுத்தும் ஸ்டைலிஷான ஆக்ஷன் கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது.