‘ஃபெப்ஸி’ பெயர் ‘ஃபெப்டா’ என மாற்றம்…. – பெயர் மாறினால் போதுமா? தொழிலாளர்களின் குணம் மாறுமா?

912

தமிழ்த் திரையுலகில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் 27 சங்கங்களை உள்ளடக்கியது – தென்னிந்தியை திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (Film Employees Federation of South India).

‘பெப்ஸி (FEFSI) என்று அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தற்போதைய தலைவராக இயக்குநர் அமீர் இருக்கிறார்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ் தெலுங்கு மலையாள கன்னட திரையுலகங்கள் இயங்கியபோது அன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமாக 1961-ம் ஆண்டு இந்த சம்மேளனம் உருவாக்கப்பட்டது.

அதன் பிறகு மொழிவாரியாய் திரையுலகம் அவரவர் மாநிலத்துக்கு சென்று தனி அமைப்பை உருவாக்கிய பிறகும், தமிழ்நாட்டில் உள்ள பெப்ஸி (FEFSI) தென்னிந்திய என்ற பெயரை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இதை தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை திரைப்படத்துறையினரால் பல காலமாகவே எழுப்பப்பட்டு வந்தது. ஆனாலும் இதற்கு முன் பெப்ஸி தலைவராக இருந்தவர்கள் அதற்கு முயற்சி செய்யவில்லை.

தான் தலைவராக இருந்த காலத்தில் அதை சாதித்துக்காட்டி உள்ளார் அமீர்.

காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற இயக்குநர் சேரனின் C2H நிறுவனத்தின் அறிமுக விழாவில் பேசும்போது, “பெப்ஸியின் பெயர் விரைவில் ‘ஃபெப்டா’ (FEFTA) என மாற்றம் செய்யப்படுகிறது” என்று இயக்குநர் அமீர் தெரிவித்தார்.

அதாவது Film Employees Federation of South India என்பதை ‘Film Employees Federation of Tamilnadu ’-வாக மாற்ற உள்ளனர்.

பெயர் மாற்றம் குறித்து மகிழ்ச்சியை தெரிவிக்கும் தயாரிப்பாளர்கள், முக்கியமான பிரச்சனை ஒன்றையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

“திரைப்பட தொழிலாளர்களில் சிலரும் திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பல சந்தர்ப்பங்களில் அடாவடித்தனமாகவும் அராஜாகம் செய்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். பணம் போட்ட தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து கொள்ளாமல் மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். பெயர் மாறினால் மட்டும் போதாது தொழிலாளர்களின் குணமும் மாற வேண்டும்”

இதுதான் தயாரிப்பாளர்களின் மனக்குறை.

வேலை கொடுக்கும் முதலாளிகளின் மனக்குறையை கவனத்தில் கொள்ளுங்கள் தோழர்களே…