நேர்கொண்ட பார்வை பஞ்சாயத்து… வாய் திறப்பாரா அஜித்?

123

அஜித்குமார் நடிக்கும் நேர்கொண்ட பார்வை ஒரு ஏரியாகூட இன்னும் பிசினஸ் ஆகவில்லை.

படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10 என்று அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் என்றைக்கு அறிவித்தாரோ…. அப்போதே ஆரம்பித்துவிட்டது பிரச்சனை.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி சனிக்கிழமை. பொதுவாக வெள்ளிக்கிழமைகளில்தான் புதுப்படங்களை வெளியிடுவார்கள். அடுத்த இரண்டு நாட்கள் வாரவிடுமுறை என்பதால் மூன்று நாட்களில் ஓரளவு வசூலை அள்ளலாம் என்பது சினிமாக் காரர்களின் கணக்கு. கடந்த சில ஆண்டுகளாக அஜித் நடிக்கும் படங்கள் வியாழக்கிழமையே வெளியிடப்படுகின்றன. (சாய்பாபா பக்தரான அஜித்துக்கு வியாழக்கிழமை உகந்தநாள் என்பது உப தகவல்.)

இந்த கணக்குக்கு மாறாக நேர்கொண்ட பார்வை படத்தை சனிக்கிழமை வெளியிடுவதாக போனிகபூர் அறிவித்ததை விநியோகஸ்தர்களும், தியேட்டர் காரர்களும் ரசிக்கவில்லை. வியாழன், வெள்ளி இரண்டு நாட்களின் வசூல் வீணாகிறதே என்பது அவர்களுடைய கவலை. எனவே ஆகஸ்ட் 1 அல்லது ஆகஸ்ட் 8 ஆம் தேதியில் நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிட வேண்டும் என்று யோசனை சொன்னார்கள்.

அதை போனிகபூர் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. ஆகஸ்ட் 10 அன்றுதான் படம் ரிலீஸ் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த தேதியில் போனிகபூருக்கு ஏதாவது சென்ட்டிமெண்ட் இருக்கக்கூடும்.

போனிகபூர் அறிவித்த ரிலீஸ் தேதியால் நேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டது. சனிக்கிழமை படத்தை ரிலீஸ் செய்தால், விலையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். போனிகபூரோ தான் சொன்னதே விலை என்பதில் உறுதியாகவும், கறாராகவும் இருந்திருக்கிறார். இந்த இழுபறி பல நாட்கள் நீடித்தநிலையில் வேறுவழியில்லாமல் படத்தின் ரீலீஸ் தேதிதியை விநியோகஸ்தர்கள் விரும்பியபடி ஆகஸ்ட் 8 ஆம் தேதி என்று அறிவித்தார். அப்படியும் நேர்கொண்ட பார்வை படம் இன்னமும் பிசினஸ் ஆகவில்லை.

அமிதாப் நடித்த பிங்க் ஹிந்திப்படத்தின் ரீமேக்தான் நேர்கொண்ட  பார்வை. பிங்க் படத்தில் அமிதாப்புக்கு பவர்ஃபுல்லான கேரக்டர், என்றாலும் ஏறக்குறைய கௌரவ வேடம்போல் சில காட்சிகளில்தான் முகம் காட்டுவார். அமிதாப்பின் வேடத்தில் நடித்திருக்கும் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிப்பதற்கு  20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து நடித்திருக்கிறார்.

இதையெல்லாம் வைத்து, சிலகாட்சிகளில் மட்டுமே அஜித் நடித்துள்ள படத்துக்கு இவ்வளவு விலையா என்று தயங்குகின்றனர் விநியோகஸ்தர்கள். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்திருப்பது சில காட்சிகளில்தான். அதற்கு மாறாக முழுப்படத்திலும் அஜித் தோன்றுவதுபோல் பில்ட்அப் கொடுக்கப்படுகிறது. பிங்க் படத்தின் திரைக்கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டு அஜித்துக்கு ப்ளாஷ்பேக் காட்சிகள் உருவாக்கப்பட்டு அவருக்கான காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டிருப்பதாக சொல்லி வருகிறார் இயக்குநர் ஹெச். வினோத். ஆனாலும், நேர்கொண்ட பார்வை படத்தின் கதை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான மூன்று இளம்பெண்களைப் பற்றிய. அவர்களை மையப்படுத்திய கதைதான். அவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர்தான் அஜித்.

நேர்கொண்ட பார்வை – பிரம்மாதமான கதை. இதுபோன்ற கதையில் அஜித் மாதிரியான மாஸ் ஹீரோக்கள் நடிக்க முன்வருவதே மிகப்பெரிய விஷயம். மாஸ் ஹீரோவான நமக்கு இந்தக்கதையில் சாகசம் செய்ய என்ன வாய்ப்பிருக்கிறது என்று சுயநலத்தோடு பார்க்காமல், சமூகத்துக்கு மிக அவசியமான கருத்தை உள்ளடக்கிய கதையில் நடிக்க முன் வந்ததற்காகவே அஜித் குமாருக்கு ஆளுயர மாலைபோட்டு பாராட்டலாம். அதுமட்டுமல்ல, அஜித்தின் கரியரில் மிக முக்கியமான படமாக, இன்னும் 25 ஆண்டுகளுக்கு பேசப்படப் போகும் படமாக நேர்கொண்ட பார்வை படம் இருக்கப்போகிறது.

இதைப்பற்றி எல்லாம் சினிமா வியாபாரிகளுக்கு கவலையில்லை. போட்ட பணத்தை பெரும்லாபத்தோடு திரும்ப அள்ள முடியுமா என்பதே அவர்களுடைய பிரதான கவலை.

அடிதடி மசாலா அம்சங்கள் இல்லாத நேர்கொண்ட பார்வை படத்தின் கதையும், தயாரிப்பாளர் சொல்லும் விலையும் விநியோகஸ்தர்களுக்கு தயக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன. அதுமட்டுமல்ல, நேர்கொண்ட பார்வை படம் வெளியாகும் அடுத்தவாரம் பிரபாஸ் நடித்த சஹோ, ஜெயம்ரவி நடித்த கோமாளி ஆகிய படங்கள் வெளியாகின்றன. இதனால் அடுத்தவாரமே பாதி தியேட்டர்களில் இருந்து படத்தை எடுத்துவிடுவார்கள். இதன்காரணமாகவே நேர்கொண்ட பார்வை படத்தின் வியபாரத்தில் சுணக்கம் நிலவுகிறது.

படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சுமார் மூன்று வாரங்களே உள்ளநிலையில் ஒரு ஏரியா கூட வியாபாரமாகவில்லை என்பதுதான் அதிர்ச்சித் தகவல். #போணியாகாதபோனிகபூர் என்று ட்விட்டரில் ஹேஷ்டேக்கை உருவாக்கி விஜய் ரசிகர்கள் நக்கலடிக்குமளவுக்கு போய்விட்டது நேர்கொண்ட பார்வை படத்தின்  நிலைமை.

அஜித் கடைசியாக நடித்த விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸ் 45 கோடிக்கு விலைபோனது. நேர் கொண்ட பார்வை படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸும் அதே 45 கோடி சொல்லப்படுகிறதாம். 20 நாட்கள் மட்டுமே அஜித் நடித்த படத்துக்கு இவ்வளவு விலையா என்று கேட்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரம் இந்தளவுக்கு இழுபறியானதற்கும், படத்தின் மீது விநியோகஸ்தர்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டதற்கும் இன்னொரு காரணம்… யுவன் சங்கர்ராஜா. நேர்கொண்ட பார்வை படத்தின் இரண்டு பாடல்களின் லிரிக் வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டன. 3 வாரங்களுக்குமுன் வெளியிடப்பட்ட  வானில் இருள் என்ற லிரிக் வீடியோ, 2.1 மில்லியன் பேர்தான் பார்த்துள்ளனர். சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட  காலம் என்ற லிரிக் வீடியோவை வெறும் 8.91 லட்சம் பேர்தான் பார்த்துள்ளனர்.

விஸ்வாசம் அளவுக்கு நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல்கள் மக்களை மட்டுமல்ல அஜித் வெறித்தனமான ரசிகர்களையும் ஈர்க்கவில்லை என்பதுதான் பரிதாபம்.

விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடலை யூடியூபில் 67 மில்லியன் பேரும், அடிச்சுத்தூக்கு பாடலை 27 மில்லியன் பேரும் பார்த்து ரசித்துள்ளனர். மற்ற இரண்டு பாடல்களும் குறைந்தபட்சம் 15 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். விஸ்வாசம் படத்தின் பாடல்களோடு ஒப்பிடும்போது இந்தப்படத்தின் பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம் என  கடந்தகாலங்களில் அஜித் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி அமைத்த படங்களில் பில்லா, மங்காத்தா ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெற்றியடைந்தன. இந்த செண்ட்டிமெண்ட்  பற்றி எல்லாம் கவலைப்படாமல் நேர்கொண்ட பார்வை படத்துக்கு யுவன்சங்கர் ராஜாவை சிபாரிசு செய்ததே அஜித்குமார்தான். ஆனாலும் யுவன்சங்கர்ராஜா ஏமாற்றிவிட்டார்.

இதுபோன்ற காரணங்கள் மட்டுமல்ல, தமிழ்சினிமாவில் தற்போது நிலவும் தொடர்தோல்விகளும் விநியோகஸ்தர்களை கலக்கமடையச் செய்திருக் கின்றன.  கடந்த 6 மாதங்களில் வெளியான சுமார் 110 படங்களில் பேட்ட, விஸ்வாசம், காஞ்சனா 3, எல்.கே.ஜி. ஆகிய நான்கு படங்கள் மட்டுமே லாபத்தைக் கொடுத்தவை. மற்ற படங்கள் தயாரிப்பாளர்களுக்கும் விநியோ கஸ்தர்களுக்கும் மிகப்பெரிய நஷ்டத்தையே ஏற்படுத்தியுள்ளன.

படுதோல்வியடைந்த படங்களில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர். லோக்கல், சிம்பு நடித்த வந்தா ராஜாவதான் வருவேன், சூர்யா நடித்த என்.ஜி.கே., கார்த்தி நடித்த தேவ், விஷால் நடித்த அயோக்யா, தனுஷ் நடித்த பக்கிரி, விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத், சூப்பர் டீலக்ஸ், நயன்தாரா நடித்த ஐரா ஆகிய படங்களும் அடக்கம்.

முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் தோல்வியடைவது ஒருபக்கம் இருந்தாலும் அந்தப்படங்களுக்கு ஓப்பனிங்கே இல்லை என்பதுதான் விநியோகஸ்தர்களையும் தியேட்டர்காரர்களையும் பீதியடைய வைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் நேர்கொண்ட பார்வை திரைக்கு வரவிருக்கிறது. அஜித் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும், ஓப்பனிங்கும் இருக்கும் என்பதில் மாற்றமில்லை. ஆனால், மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தியேட்டருக்கு வரும் அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கும் அடிதடி, ஆக்ஷன், ஹீரோயிஸம் போன்ற அம்சங்கள் குறைவாக அல்லது இல்லை என்றால் என்னாகும் என்பதே விநியோகஸ்தர்களின் கேள்வி. அதாவது, குசேலன் படத்துக்கு ஏற்பட்ட நிலைமை நேர்கொண்ட பார்வை படத்துக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் இருக்கின்றனர்.

குசேலன் படத்தில் ரஜினி ஹீரோ அல்ல, பசுபதிதான் ஹீரோ. ஆனால் ரஜினிதான் ஹீரோ என்பதுபோல் விளம்பரம் செய்யப்பட்டது. குசேலன் படத்தில் நான் ஹீரோ இல்லை என்று ரஜினி வெளிப்படையாக சொன்னதையும்மீறி, தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் ஏமாந்துபோனார்கள். அதனால் குசேலன் படம் வணிகரீதியில் தோல்வியடைந்தது. அந்தப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு தன்னுடைய சொந்தப்பணத்தை நஷ்டஈடாகக் கொடுக்க வேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டார் ரஜினி. ஏறக்குறைய குசேலன் படத்தில் ரஜினிக்கு ஏற்பட்ட அதே நிலைதான் தற்போது அஜித்குமாருக்கும் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் திரையுலகினர். இந்த விஷயத்தில் அஜித் வாய் திறந்து உண்மைநிலையை அறிவிக்காமல் அமைதிகாப்பது நேர்கொண்ட பார்வை படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அவருக்கே எதிராக அமையக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.

நேர்கொண்ட பார்வை படம் இதுவரை வியாபாரம் செய்யப்படவில்லை என்றாலும், இனிவரும் நாட்களில் நிச்சயமாக வியாபாரம் இறுதிசெய்யப்பட்டு, விநியோகஸ்தர்கள் மூலம்தான் தியேட்டருக்கு வரப்போகிறது என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

நேர்கொண்ட பார்வை படத்தின் கதைக்கும், அது சொல்லும் செய்திக்கும் நிச்சயம் வெற்றியடையும் என்பதே நம் எதிர்பார்ப்பு. ஒருவேளை எதிர்பார்த்த வெற்றியைப் பெறத்தவறினால் நஷ்டஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் அஜித் வீட்டுக்கதவை தட்டும் சூழல் ஏற்படலாம்.

“நேர்கொண்ட பார்வை படத்தில் நான் ஹீரோ இல்லை, நான் ஏற்றிருப்பது கௌரவ வேடம்தான்”

– என்பதை அஜித் வெளிப்படையாக அறிவிப்பது ஒன்றே இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்கும் வழியாக இருக்கும்.

அதுமட்டுமல்ல, அவரை வாழவைக்கும் ரசிகர்களுக்கும் அஜித்குமார் செய்யும் நேர்மையும் அதுவாகத்தான் இருக்கும்.

-ஜெ.பிஸ்மி