பேட்ட படத்தில் பணியாற்றிய அனுபவம் – ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு

732

இந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர்களாக ஒளிர்ந்து கொண்டிருப்பவர்களில் பலர் பி.சி.ஸ்ரீராமின் சிஷ்யர்கள்தான். அவர்களில் குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக சிகரம் தொட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திரு என்கிற திருநாவுக்கரசு.
மகளிர் மட்டும் கமல்ஹாசனால் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தப்பட்ட திரு, தொடர்ந்து ஹேராம், ஆளவந்தான், காதலா காதலா ஆகிய படங்களில் கமலுடன் பணியாற்றினார்.
தெலுங்கில் மகேஷ்பாபு, ஹிந்தியில் ஹ்ருத்திக் ரோஷன், மலையாளத்தில் மோகன்லால் என முன்னணி ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ள திருநாவுக்கரசுதான் பேட்ட படத்தின் ஒளிப்பதிவாளர்.
ரஜினி உடன் பணியாற்றிய அனுபவம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நம்முடன் மனம் திறந்தார் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு.

Thiru 006

· பேட்ட படத்தில் பணியாற்றிய அனுபவம்…

சூப்பர் ஸ்டாருடைய ஸ்பீடு மாதிரியே படத்தையும் வேகமாக முடிச்சுட்டோம். நாலு மாசத்தில் மொத்த ஷூட்டிங்கையும் முடிச்சோம். அவ்வளவு ஃபாஸ்ட்டாக வொர்க் பண்ணினோம். நாங்க எப்படி பிளான் பண்ணினோமோ… அதிலேருந்து கொஞ்சம் கூட மாறாமல்… சொதப்பாமல் ஸ்மூத்தா வொர்க் பண்ணினோம்.

· காலா, கபாலியில் பார்த்த ரஜினிக்கும் பேட்ட ரஜினிக்கும் நிறைய வித்தியாசம். அவருடைய காஸ்ட்யூம், விக்… கெட்டப்…. செம யூத்தாக தோற்றமளிக்கிறார். இதில் ஒளிப்பதிவாளராக உங்களுடைய பங்கு என்ன?

ரஜினி சார்கிட்ட சுறுசுறுப்பு அவருடைய இயல்பிலேயே இருக்கு. நாங்க ஒண்ணும் ஸ்பெஷலாக எதுவும் பண்ணலை. அவருடைய ஸ்டைலுக்கும், சுறுசுறுப்புக்கும் பக்கபலமாக இருந்திருக்கோம் அவ்வளவுதான். நான் மட்டுமில்லே காஸ்ட்யூம் டிசைனர் நிஹரிகா, மேக்கப்வுமன் பானு எல்லோருமே அவங்களோட பங்களிப்பை பிரம்மாதமாகப் பண்ணியிருக்காங்க. எல்லாத்துக்கும்மேல, கார்த்திக் சுப்பாராஜ் உடைய கனவே ரஜினி சாரை குளோரிஃபைடா காட்டணும்ங்கிறதுதான். பேட்டயில் அப்படித்தான் காட்டியிருக்கோம்னு நம்புறேன்.

Thiru 007

· மற்ற படங்களிலிருந்து பேட்ட படத்தில் ரஜினியை நீங்கள் எப்படி வித்தியாசமாகக் காட்டியிருக்கிறீர்கள்?

ரஜினி சார் இப்படித்தான் இருக்கணும்னு எங்களுடைய கதை என்ன டிமாண்ட் பண்ணியதோ அப்படித்தான் அவரை காட்டியிருக்கிறோம். அவருடைய லுக் இப்படித்தான் இருக்கணும் என்று நினைத்தோம். அதை வெற்றிகரமாக திரையில் கொண்டு வந்திருக்கிறோம்.

· நடிகராக ரஜினியிடம் நீங்கள் வியந்த விஷயங்கள்?

எல்லோருமே சொன்ன விஷயம்தான்… அவருடைய சின்சியாரிட்டி. நமக்கு முன்னாடியே செட்டுக்கு வந்திடுவார். ஒவ்வொரு ஷாட் எடுத்த பிறகும், அங்கேருந்து உடனே போகமாட்டார். எடுத்த ஷாட் ஓகேவா… அதில் ஏதாவது மாற்றம் இருக்கா… நாம் ஏதாவது மாற்று கருத்து சொல்றோமா… ரீடேக் போகணுமான்னு கொஞ்ச நேரம் அங்கேயே இருந்து கேட்டுத்தெரிஞ்சுக் கிட்டுத்தான் போவார். அவருடைய அந்த சின்சியாரிட்டி எல்லாம் சான்ஸே இல்லை.

Thiru 002

· மனிதராக அவரிடம் வியந்த விஷங்கள் என்ன?

ரஜினி சார் உடன் வொர்க் பண்ணுவதற்கு முன்புவரை எனக்கு அவர் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக மட்டுமே தெரிந்தார். அவருடன் வொர் பண்ணிய பிறகுதான், அவருடைய மனதில் தான் ஒரு சூப்பர்ஸ்டார் என்ற எண்ணம் துளியும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். மற்றவர்களின் ஃபீலிங்கை மதிப்பவர். மற்றவர்களின் மனதில் உள்ளதை புரிந்து கொள்கிற அற்புதமான மனிதர்.

· மகளிர் மட்டும் படத்தில் கமல்ஹாசன் உங்களை ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு கமல் உடன் ஹேராம், ஆளவந்தான், காதலா காதலா போன்ற படங்களில் பணியாற்றினீர்கள். ஆனால் ரஜினி படத்தில் இப்போதுதான் பணியாற்றி இருக்கிறீர்கள்? ரஜினி படத்தில் பணியாற்ற இத்தனை வருஷங்களாகிவிட்டதே?

பல வருடங்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய விஷயம். ரஜினி சார் நடித்த எந்திரன் படத்தில் நான்தான் வொர்க் பண்ணுவதாக இருந்தது. அந்த ப்ராஜக்ட் ஆரம்பிச்சு ஆரம்பகட்ட வேலைகள் எல்லாம் பண்ணினேன். அதுக்கப்புறம் அந்த ப்ராஜக்ட் ஐங்கரன்லேருந்து சன் பிக்சர்ஸுக்கு மாறியதால் படம் தொடங்குவதற்கு கொஞ்சம் தாமதமானது. அதனால் ஏற்கனவே நான் கமிட் பண்ணியிருந்த வேற ஒரு ப்ராஜக்ட்டுக்குப்போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுக்கப்புறம் எந்திரன் படம் ஸ்டார்ட் பண்ணும்போது அந்தப் படத்தில் என்னால வொர்க் பண்ண முடியாமப்போச்சு. அதுக்காக ரொம்ப வருத்தப்பட்டேன். பேட்ட என்னோட வருத்தத்தை போக்கிவிட்டதுன்னு சொல்லலாம்.

· தமிழைவிட ஹிந்திப்படங்களில் பணியாற்றத்தான் நீங்கள் அதிக முன்னுரிமை கொடுக்கிறீர்களா?

அப்படி எல்லாம் இல்லை. ஹிந்திப்படம் பண்ணும்போது அடுத்தடுத்து ஹிந்திப்படங்களே வரும். தமிழ்ப்படங்கள் பண்ணும்போது அடுத்தடுத்து தமிழ்ப்படங்கள் வரும். மத்தபடி குறிப்பிட்ட மொழிப்படத்துக்கு முன்னுரிமை கொடுக்கிறதெல்லாம் கிடையாது.

· தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளப்படங்களில் பணியாற்றி வருகிறீர்கள். உங்களுக்கு கம்ஃபர்ட் லெவல் எங்கே?

மொழியை வைத்து இதை அளவிட முடியாது. கேமராமேனுக்கு மொழி ஒரு பிரச்சனையே இல்லை. நல்ல கதைதான் என்னுடைய சாய்ஸ். ஒரு கேமராமேனாக எனக்கு சவாலாக இருக்கும் படங்களும், கதை மற்ற விஷயங்கள் புதுமையாக இருக்கும் படங்களிலும் வேலை செய்ய பிடிக்கும்.

Thiru 008

· உங்களோடு பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்த மறைந்த ஜீவா, கே.வி.ஆனந்த் இயக்குநரானார்கள். உங்களுக்கு படம் இயக்கும் ஆசை இல்லையா?

ஆசை கிடையாது. ஆனால் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக பண்ணுவேன். ஆனால் அதற்கான நேரம் தேவையாக இருக்கிறது. சில பேர் கேமராமேனாக இருந்தாலும் இன்னொரு பக்கம், அவர்களுடைய மைன்ட்செட்டில் ரைட்டராக டிராவல் பண்ணுவார்கள். நான் டெக்னிக்கலான மைன்ட்செட்டிலேயே இருப்பவன். எப்போதும் டெக்னிக்கலாகவே யோசித்துக்கொண்டிருப்பேன். அதனால் டைரக்ட் பண்ணுவது பற்றி முயற்சி செய்யவில்லை.

· ‘மரக்கார் – அரபிக்கடலிண்ட சிம்ஹம்’ மலையாளப்படம் பற்றி… ஒளிப்பதிவாளராக உங்களுக்கு அந்தப்படம் இன்னொரு ஹேராம் படமாக இருக்குமா?

ஆமாம். இதுவும் பீரியட் பிலிம்தான். டைரக்டர் ப்ரியதர்ஷன் சார், மோகன்லால் சார் இரண்டுபேரோட ட்ரீம் ப்ராஜக்ட் இது. மலையாளப்படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படுகிற படம். கிட்டத்தட்ட 80 கோடி பட்ஜெட். கடலில் போர் நடப்பதுபோன்ற காட்சிகள் எல்லாம் படத்தில் உள்ளன. 30 நாட்கள் ஷூட்டிங் முடித்திருக்கிறோம்.

-ஜெ.பிஸ்மி