பச்சையாக சொன்னால் அவன் செய்வது மாமா வேலை! என்னைப் போன்ற நடிகைகளை அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் கூட்டிக் கொடுப்பவன்.

2177

பச்சையாக சொன்னால் அவன் செய்வது மாமா வேலை! என்னைப் போன்ற நடிகைகளை அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் கூட்டிக் கொடுப்பவன்.

என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 9

 

என் முதல் படம் வெளிவந்த பிறகு படங்கள் தேடி வந்த அளவுக்குப் பணம் வரவில்லை.

வந்த அட்வான்ஸ் பணமும் அம்மாவின் கழுத்தில் நகைகளாக மின்னின.

அம்மாவின் அடுத்த கவலை வீடு!

இப்படி ஒண்டுக் குடித்தனத்தில் இருந்தால் தேடி வரும் புரட்யூசர்கள் எப்படி மதிப்பார்கள்? அவமானமாக இருக்கிறது என்று ஆதங்கப்பட்டாள்.

அம்மாவின் ஆதங்கத்தை தீர்த்து வைப்பதற்காகவே அவதாரம் எடுத்ததுபோல் வந்து சேர்ந்தான் அழகர்சாமி.

வெளி உலகுக்குத்தான் இவன் பெரிய புரட்யூசர்.

வொயிட் அண்ட் வொயிட், கருப்புக் கண்ணாடி, கையில் லெதர் பேக், செல்போன் என்று ஆளைப் பார்த்தால் கௌரவமான ஆளாகத்தான் தெரியும்.

உண்மையில் இவன் செய்யும் தொழில் என்ன தெரியுமா?

பச்சையாக சொன்னால் மாமா தொழில்!

யெஸ்…   என்னைப் போன்ற நடிகைகளை அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் கூட்டிக் கொடுப்பவன்.

முதலில் அவன் என் வீட்டுக்கு வந்தது  என்னைத் தன்னுடைய படத்தில் புக் பண்ணத்தான். அப்படி சொல்லித்தான் வீட்டுக்கு வந்தான்.

பெரிய ஹீரோவின் பெயரைச் சொல்லி, அவரை வைத்துப் படம் எடுக்கப் போவதாகவும், அதில் நான் நடிக்க வேண்டும் என்றும் கால்ஷீட் கேட்டு வந்தவன், முதல் சந்திப்பிலேயே அம்மாவின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு விட்டான்.

”உங்க பொண்ணு நிலா எவ்வளவு பெரிய நடிகை?  இன்னுமா  இந்த சின்ன வீட்டுல இருக்கீங்க?”

என்று அவன் போட்ட தூண்டிலில் சுலபமாய் சிக்கினாள் அம்மா.

”என்ன பண்றது? கமிட்டான படங்கள்லேருந்து பணம் வரலை வந்தப்புறம்தான் வேற வீடு பார்க்கலாம்னு இருக்கோம்….” என்றாள்  பேராசைக்காரியான  அம்மா.

”படத்தில நடிச்சு வர்ற பணம் கைச்செலவுக்குக் கூட பத்தாதே… அதை நம்பிக்கிட்டிருந்தா என்னைக்கு வீடு வாங்குறது? என்னைக்கு கார் வாங்குறது?”

அவன் என்ன சொல்ல வருகிறான் என்று எனக்குப் புரியவில்லை.

அம்மாவுக்குப் புரிந்து விட்டது.

”நீங்க சரின்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. நாளைக்கே சாலிகிராமத்தில டபுள் பெட்ரூம் ஃப்ளாட் வாங்கிடலாம். ஹோண்டா சிட்டி கார்கூட புக் பண்ணிடலாம்.

”பணத்துக்கு எங்கே போறது?” இது அம்மா.

”அதை நான் பாத்துக்குறேன், நீங்க கவலையை விடுங்க.”

படத்துக்கு புக் பண்ண வந்ததாகச் சொன்னவன், கடைசி வரை அதைப் பற்றிப் பேசவே இல்லை.

மறுநாள் வந்து சாலிகிராமத்தில் ஒரு ஃப்ளாட்டுக்குக் கூட்டிப் போனான்.

அம்மாவுக்கு சந்தோஷம் தாங்க வில்லை. அதற்கடுத்த நாள் வீட்டில் வந்து நின்றது புத்தம் புது ஹோண்டா சிட்டி கார்.

அந்தக் காரில் நான் சென்ற முதல் பயணம் எங்கே தெரியுமா?

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்டசத்திர ஹோட்டலுக்கு…

ஹோட்டலில் டின்னர் சாப்பிட மூடு வந்தால் இப்போதெல்லாம் அந்த நட்சத்திர ஹோட்டலுக்குத்தான் போகிறேன்.

மற்றவர்களைப் போல் நான் டேபிள் ரிசர்வ் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

நான் சாப்பிட வருகிறேனோ இல்லையோ எனக்காக அந்த ஹோட்டலில் ரெஸ்டாரண்டில் எப்போதும் டேபிள் ரிசர்வில் இருக்கும்.

நடிகை நிலா அங்கே சாப்பிடுவது அந்த ஹோட்டலுக்கு அவ்வளவு பெருமையான விஷயம்!

டின்னருக்குப் பிறகு டிஸ்கொதே! டான்ஸ் ஆட ஆரம்பித்தால் வீட்டுக்கு வர நள்ளிரவாகும்.

பணத்திமிர் பிடித்த தடிப்பசங்கள் டிஸ்கோ ஆடுகிற சாக்கில் என்னை நெருங்கப் பார்ப்பார்கள்.

ஹோட்டல் ஆட்கள் கொத்தாய் பிடித்து அவர்களை வெளியே அனுப்பிவிடுவார்கள்.

நிலா என்றால் அந்த ஹோட்டலில் அவ்வளவு மரியாதை!

ஹோட்டல் முதலாளிக்குக் கூட அந்தளவுக்கு மரியாதை இருக்குமா என்று தெரியவில்லை.

ஷூட்டிங் இல்லாத நாட்களில் நான் உடற்பயிற்சி செய்வது கூட அந்த ஹோட்டலில் உள்ள ஹெல்த் கிளப்பில்தான்.

என்னுடைய ஃபேவரைட் பியூட்டி பார்லர் இருப்பதும் அங்குதான்!

சில சமயம் நீச்சல் அடிக்க ஆசையாக இருக்கும்.

அந்த ஹோட்டலுக்குத்தான் போவேன்.

நான் போனால் போதும்.

ஸ்விம்மிங் பூலில் வேறு யாராவது குளித்துக் கொண்டிருந்தாலும் அவர்களை வெளியே அனுப்பி விடுவார்கள்.

எனக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான்.

ஸ்விம் சூட் அணிந்து நான் குளித்து முடிக்கும்வரை வேறு யாருக்கும் அங்கே அனுமதி இல்லை.

சுருக்கமாகச் சொன்னால், அந்த ஹோட்டலின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களில் நானும் ஒருத்தி.

என் கார் உள்ளே நுழைந்தால்  ஹோட்டல் மானேஜரில் இருந்து அத்தனை பேரும் ஓடிவந்து வணக்கம் சொல்வார்கள்.

அவ்வளவு மதிப்பு எனக்கு.

தனிப்பட்ட முறையில் செல்வது தவிர, தொழில் ரீதியாகவும் அடிக்கடி அந்த ஹோட்டலுக்குப் போக வேண்டியிருக்கிறது.

இப்போதெல்லாம் நான் நடித்த படத்தின் பூஜை, கேஸட் ரிலீஸ் ஃபங்ஷன் சில நேரங்களில் அங்கு நடப்பதுண்டு. அப்புறம்…

சக நட்சத்திரங்களின் பார்ட்டிகள் கூட அந்த ஹோட்டலில் அடிக்கடி நடக்கும்.

அந்த ஹோட்டலுக்கு இதுவரை எத்தனையோ தடவை போயிருக்கிறேன். எத்தனை தடவை என்று நினைவில் இல்லை.

ஆனால் முதல் முறை, அதான் அந்த அழகர்சாமியுடன் போனதாகச் சொன்னேனே…

அதை மறக்கவே முடியாது.

வருஷங்கள் பல ஓடிவிட்டன அந்தச் சம்பவம் நடந்து.

இன்னும் அந்த நாள் என் நினைவில் அழியாமல் அப்படியே இருக்கிறது.

எப்படி அழியும்?

என் மீது எனக்கே மரியாதை இல்லாமல் போன நாள் அது.

உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், சோத்துக்காக உடம்பை விற்கும் பெண்ணைவிட இழிவானவளாக கேவலமானவளாக உணர்ந்த நாள் அது.

அன்று அங்கே என்ன நடந்தது?

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்