இத்தனை பேர் கூடியிருக்கும் பொது விழாவில் இப்படி நடந்து கொள்கிறார் என்றால், இவர் எப்பேர்பட்ட ஆளாக இருப்பார்? இவரெல்லாம் ஒரு தலைவன்.

1934

இத்தனை பேர் கூடியிருக்கும் பொது விழாவில் இப்படி நடந்து கொள்கிறார் என்றால், இவர் எப்பேர்பட்ட ஆளாக இருப்பார்? இவரெல்லாம் ஒரு தலைவன்.

‘என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 7

என் முதல் படம் ஹிட்டானதும் மளமளவென குவிந்து விட்டன படங்கள். இன்னொரு பக்கம் ஏகப்பட்ட விருதுகள். அந்த வருஷத்தின் சிறந்த புதுமுகம் நான்தான். பத்திரிகை, சபாக்கள்  என்று எல்லாரும் சொல்லி வைத்தாற்போல் என்னைத்தான் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

சந்தோஷம் தாங்கவில்லை எனக்கு. இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு இதுதான் ஆறுதல் ஒத்தடம்.

பிரபல பத்திரிகையின் விருதளிப்பு விழா! விருது வாங்கப் போன எனக்கு இன்ப அதிர்ச்சி. எனக்கு விருது வழங்கவிருப்பவர் மூத்த அமைச்சர்!

மகிழ்ச்சியோடு மேடையேறிய எனக்கு அவர் நடந்து கொண்ட விதம் பேரதிர்ச்சியைத் தந்தது.

அந்த அமைச்சருக்கு அறுபது வயசுக்கு மேல் இருக்கும். என் அப்பாவைவிட வயசு அதிகம். நெடு நெடுவென நல்ல உயரம். மடிப்பு கலையாத வெள்ளை வேட்டி, சட்டை, தோளில் அவரது கட்சியின் கரைபோட்ட துண்டு. சாத்வீகமான தோற்றம்.

நல்ல படிப்பாளி. தமிழ் இலக்கியங்களை கரைத்துக் குடித்தவர். அவர் மேடையில் பேச ஆரம்பித்தால் மணிக்கணக்கில் மக்கள் கூட்டம் அசையாமல் உட்கார்ந்திருக்கும்- என்றெல்லாம் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இப்போதுதான் அவரை நேரில் பார்க்கிறேன்.

என்னை மேடைக்கு அழைத்தார்கள். மேடையேறியதும் அமைச்சரை வணங்கிவிட்டு சற்று தள்ளியிருந்த சேரில் போய் உட்கார்ந்தேன். அவர் பக்கத்திலேயே ஒரு சேர் காலியாகத்தான் இருந்தது. அதில் உட்காருவது மரியாதையாக இருக்காது. அவர் எவ்வளவு பெரிய வி.ஐ.பி.? மூத்த அமைச்சர்!? என்னதான் இருந்தாலும் நான் நேற்று வந்த நடிகை!

எதேச்சையாக அமைச்சர் பக்கம் திரும்பினேன். வாஞ்சையுடன் என்னைப் பார்த்துச் சிரித்தவர், தன் அருகில் உள்ள சேரில் வந்து அமரும்படி சைகை காட்டினார். தயக்கத்தோடு எழுந்து போய் உட்கார்ந்தேன்.

”நீ நடிச்ச படத்தை நேத்துதான் பார்த்தேன். உன் நடிப்பு பிரம்மாதம்!” பாராட்டினார். எனக்கு உச்சி குளிர்ந்தது. அப்புறம் என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் அக்கறையுடன் விசாரித்தார்.

விழா தொடங்கியது.

அமைச்சரின் பாராட்டு உரையில் என்னை ஸ்பெஷலாக பாராட்டித் தள்ளினார். எனக்குப் பெருமை தாங்கவில்லை.

அடுத்து விருது வழங்கும் நிகழ்ச்சி. பலரும் பரிசுக் கேடயம் வாங்கிச் செல்ல, ஒவ்வொரு முறை பெயர் அறிவிக்கும்போதும் என் பெயராக இருக்குமோ என்று டென்ஷன்.

”சிறந்த புதுமுக நடிகை நிலா!”

மைக்கில் என் பெயரை அறிவித்ததும் ரசிகர்களிடம் இருந்து உற்சாகம் பீறிட்டது. கை தட்டல் சத்தம் அரங்கத்தை அதிரச் செய்தன. உள்ளுக்குள் பொங்கிய சந்தோஷயத்தைக் காட்டிக் கொள்ளாமல் எழுந்தேன். முதன்முறையாக விருது வாங்கும் அந்த அனுபவம் பரவசமானது. ரசிகர்களை நோக்கி கை அசைத்து விட்டு, கேடயத்தை வாங்க அமைச்சரை நோக்கிப் போனேன்.

ஃபோட்டோகிராபர்களின் ப்ளாஷ் வெளிச்சம் கண்ணைக் கூசவைக்க, அமைச்சர் எனக்கு கேடயத்தை வழங்கினார்.

அதை வாங்கிய எனக்கு திக்கென்றது. கேடயத்தைக் கொடுக்கும் சாக்கில் அதைத் தாங்கிப் பிடிப்பதுபோல் என் கையை அழுத்தமாகப் பற்றியிருந்தார். முதலில் தற்செயல் என்றுதான் நினைத்தேன். ஃபோட்டோவுக்காக சற்று நேரம் போஸ் கொடுத்த பிறகும் அவரது கைகள் என் கையை விடவில்லை. அழுத்தம் மேலும் அதிகமானது. இத்தனையும் சில கணங்களில் நடந்து முடிந்தது.

அதன்பிறகு அவரது பார்வையில் தெரிந்த மாற்றம் அவரது எண்ணத்தை எனக்குப் புரிய வைத்தது. அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

விழா முடியும்வரை சம்பந்தம் இல்லாமல் ஏதோதோ என்னிடம் பேசினார். இடையிடையில் என் அழகையும் வர்ணிக்கத் தவறவில்லை அவர்.

”அந்தக் கால சரோஜாதேவி மாதிரியே இருக்க!” சொல்லிவிட்டு மிகப் பெரிய ஜோக் சொன்னதுபோல் அவரே சிரித்துக் கொண்டார். நான் சிரிக்கவில்லை.

அவர் பேசுவதைக் கேட்கும் மனநிலையில் நான் இல்லை. அவர் நடந்து கொண்ட விதம் என்னை என்னென்னவோ யோசிக்க வைத்தது.

இவர் வயசு என்ன? என் வயது என்ன? என்னிடம் சில்மிஷம் செய்கிறாரே… இத்தனை பேர் கூடியிருக்கும் பொது விழாவில் இப்படி நடந்து கொள்கிறார் என்றால், இவர் எப்பேர்பட்ட ஆளாக இருப்பார்? இவரெல்லாம் ஒரு தலைவன். இவர் பின்னாலும் தொண்டர்கள்? நாடு எப்படி உருப்படும்?

வயசான் கிழம். ஏதோ சபலத்தில் நம்மைத் தொட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டது என்று நினைத்து அதை அப்புறம் மறந்தே விட்டேன். ஆனால் அந்த கிழட்டு நரி என்னை மறக்கவில்லை என்பதும், நாக்கில் எச்சில் வடிய எனக்காக – என் சதைக்காக காத்திருக்கிறது என்பதும் பிறகுதான் தெரிந்தது.

ஷூட்டிங்கில் இருந்த எனக்கு அம்மாவிடமிருந்து போன். ”முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லிட்டு ஆறு மணிக்கெல்லாம் கிளம்பி வந்திடு” என்றாள்.

என்ன வேலை என்று நான் கேட்கவில்லை. கேட்டாலும் சொல்ல மாட்டாள். மாலை வீட்டுக்குப் போனதும் அம்மா பரபரப்பாக இருந்தாள்.

”சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகி வா. முக்கியமான ஒருத்தரைப் பார்க்க போறோம்!”

அம்மா இத்தனை பரபரப்பாக இருந்து நான் பார்த்ததில்லை. பாத்ரூமில் நுழைந்த கொஞ்ச நேரத்திலேயே ரெடியா? ரெடியா? என்று இரண்டு மூன்று முறை கதவைத் தட்டிவிட்டாள் நிம்மதியாகக் குளிக்க முடியவில்லை. அப்படி என்ன அவசரமோ? நான் ரெடியாகி வரவும் வாசலில் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. யாரோ ஒரு தொப்பிக்காரன் காரிலிருந்து இறங்கி உள்ளே வந்தான். அம்மாவிடம் என்னவோ சொன்னான். இவனை எங்கேயே பார்த்திருக்கோமே? ஞாபகம் வரவில்லை.

கோல்டன் பீச்சை தாண்டி கார் போய்க் கொண்டிருந்தது. அதுவரை அமைதியாக இருந்த நான், அம்மாவிடம் கேட்டேன்.

”யாரைம்மா பாக்கப் போறோம்?”

சொன்னாள்.

‘அந்த’ அமைச்சரை பார்க்கப் போகிறோம் என்று அப்போதுதான் தெரிந்தது. அவரை எதற்கு நாம் பார்க்கப் போகணும்? சட்டென்று விளங்கியது. அந்த அமைச்சருக்கு என்னை ஒருநாள் மனைவியாக்கப் போகிறாள்.

”உன்னை பார்த்ததிலிருந்து உன்மேலே பைத்தியமா இருக்காராம். அவர் தயவு எல்லாம் நமக்கு வேணும்டீ!”

என்னை அதற்குத் தயார்படுத்தும் முயற்சியில் இறங்கினாள்.

எனக்கு அழுகை உடைத்துக் கொண்டு வந்தது. கார் கதவை திறந்து கொண்டு கீழே குதித்து விடலாமா என்றுகூட ஒரு நிமிடம் யோசித்தேன். அதற்கு வாய்ப்பில்லை.

கடற்கரையை ஒட்டிய ஒரு கெஸ்ட் ஹவுஸில் கார் நின்றது. சுற்று வட்டாரத்தில் ஆள் அரவமில்லை. கடலின் இரைச்சல் மட்டுமே ஒரே சத்தம். அதனால்தான் அந்தப்புரமாக இந்த இடத்தை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். அம்மா காரிலேயே இருக்க என்னை மட்டும் கெஸ்ட்ஹவுஸ் உள்ளே அழைத்துப் போனான்- அந்த தொப்பிக்காரன். கெஸ்ட் ஹவுஸ் இல்லை அது. குட்டி அரண்மனை, மார்பிள், கிரானைட்களால் இழைக்கப்பட்டு…

மாடி ஏறி ஒரு அறையைத் திறந்தான் தொப்பி.

திறந்த அறைக்குள் அந்த அமைச்சர் இருந்தார்…

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்