ஹீரோக்களுக்கு முழு நேர வேலையே என்னை மாதிரியான பாவப்பட்ட பெண்களை அனுபவிப்பதுதான்…

1506

ஹீரோக்களுக்கு முழு நேர வேலையே என்னை மாதிரியான பாவப்பட்ட பெண்களை அனுபவிப்பதுதான்…

என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 25

சில பத்திரிகைகளில் இப்போதே நிலாவுக்குப் படமில்லை என்று நியூஸ் வர ஆரம்பித்துவிட்டன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த படமும் கை நழுவிப் போய், அதற்கு ஏதாவது ஒரு காரணத்தையும் பரப்பிவிட்டால் கண்ணை மூடிக் கொண்டு பத்திரிகைகள் எழுதித் தள்ளும்.

இவர்கள் எழுதும் செய்தியை ஜெராக்ஸ் எடுப்பதுபோல் எல்லாப் பத்திரிகைகளும் எழுத ஆரம்பித்தால் தொலைந்தேன்.

நிரந்தரமாக வீட்டில் உட்கார வேண்டியதாகி விடும்.

இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நான் என்ன செய்ய முடியும்?

எனவே எனக்கு வேறு வழி தெரியவில்லை.

அந்த புரட்யூஸர் சொன்ன மார்வாடி ஃபைனான்ஸியரை சந்தோஷப்படுத்த சம்மதித்தேன்.

அதுவும் எனக்கு மோசமான அனுபவமாகவே இருந்தது.

அந்த ஃபைனான்ஸியர் ஒரு மாமிச மலை.

அவன் என்மேல் கிடந்த அந்த நிமிடங்கள்… எனக்கு மூச்சுத் திணறலே வந்துவிட்டது.

அதைவிட அவன் வாயிலிருந்து வந்த பான்பராக் நாற்றம் குடலைப் பிடுங்கியது.

சகித்துக் கொண்டேன்.

எப்படித்தான் இவன் பொண்டாட்டி இவனை சமாளிக்கிறாளோ…

என்னைவிட பாவம் பண்ணியவளாக இருப்பாளோ என்னவோ…”

தன் கதையைச் சொல்லிக் கொண்டிருந்த நிலா, திடீரென அழத்தொடங்கினாள்.

விசும்பலாய் தொடங்கிய அவளது அழுகை மெல்ல வேகமெடுத்தது.

நல்லவேளை அருகில் யாருமில்லை.

அவளது உதவியாளர்கள் வெளியே இருந்தனர்.

கேரவானில் நானும் நிலாவும் மட்டுமே இருந்தோம்.

அவளை சமாதானப்படுத்த முயன்றேன்.

முடியவில்லை.

என் ஆறுதல் வார்த்தைகள் அவள் அழுகையை மேலும் அதிகமாக்கியதே தவிர குறைக்க உதவவில்லை.

அவளது அழுகை அடங்கும் வரை காத்திருந்தேன்.

சற்று நேரத்தில் கண்களைத் துடைத்துக் கொண்டு சகஜமான நிலாவிடம் கேட்டேன்.

“என்னாச்சு, ஏன் திடீர்னு எமோஷனலாயிட்டே?”

“எனக்கு நடந்த மோசமான சம்பவங்களை நினைக்க நினைக்க என்னால தாங்க முடியலை.

எத்தனை மிருகங்கள் என்னைக் கடிச்சுக் குதறி ருசி பார்த்தது தெரியுமா?

இதுவரைக்கும் உங்கக்கிட்ட சொன்னது என் லைஃபில் நடந்ததுல பாதிதான்.

சொல்லாம விட்டது இன்னும் எவ்வளவோ இருக்கு.”

“மறைக்க நினைக்கல.

எல்லோமே ஒரே விஷயம்தான்.

என்னை ஒவ்வொருத்தனும் அனுபவிச்ச கதை.

ஆட்கள்தான் வேற. சம்பவம் ஒண்ணுதானே?

தவிர உங்கக்கிட்ட அதை சொல்றப்ப நடந்த சம்பவங்கள் கண்முன்னால ஓடுது.

இதயமே வெடிச்சுடும் போலருக்கு. வேண்டாம் இந்த அவஸ்தை. போதும்.”

நான் கனத்த இதயத்தோடு மௌனமாய் அவளைப் பார்த்தேன்.

இயலாமை.

நாம் எந்த வகையில் உதவிட முடியும்?

“சினிமா இண்டஸ்ட்ரியில இருக்குற ஒவ்வொரு ஆம்பளையோட லட்சியமும் என்ன தெரியுமா?

என்னை மாதிரியான பாவப்பட்ட பெண்களை அனுபவிக்கணும்கிறதுதான்.

அதுக்காகவே சினிமா இண்டஸ்ட்ரிக்கு வர்றானுங்க.

இதில ஹீரோக்களுக்கு முழு நேர வேலையே ‘இது’தான்.

என்னை மாதிரி எத்தனை பெண்களோட வாழ்க்கையை நாசமாக்கியிருப்பாங்க?

இதெல்லாம் தெரியாம அவங்களை ரசிகர்கள் தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடுறாங்க.

நினைச்சா வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு.”

விரக்தியாய் சிரித்தாள் நிலா.

“இதைப் படிக்கிறவங்க யார் அந்த நிலான்னு கேட்பாங்க.

பல நடிகைகளை கெஸ் பண்ணி, அவங்களா இவங்களான்னு கூட கேட்பாங்க மத்த நடிகைங்க படிக்கும்போது தங்களோட கதை மாதிரியே இருக்குன்னு சொல்வாங்க.

உண்மைதான்.

எல்லா நடிகையோட கதையுமே என்னோட கதை மாதிரிதான். நிறைய சோகங்களும், வேதனைகளும், அவமானங்களும் நிறைந்தது. அதைப் பல பேர் வெளியே காட்டிக்கிறதில்லை.

எல்லாத்தையும் தங்களுக்குள்ளே போட்டு புதைச்சுக்கிட்டு வெளியே சந்தோஷமா இருக்கிறதா வேஷம் போட்டுக்கிட்டிருக்காங்க.

உண்மையை சொல்லணும்னா வாழ்க்கையிலேயும் நடிச்சுக்கிட்டிருக்காங்க. நானும்தான்.”

சொல்லும்போது நிலாவின் மீண்டும் கண்கள் கலங்குவதை கவனித்தேன்.

மறுபடி உடையப் போகிறாள் என்பதும் புரிந்தது.

அதற்குள் தகவு தட்டப்பட, அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“மேடம் ஷாட் ரேடி.”

உதவி இயக்குநர் பவ்யமாக தெரிவித்துவிட்டு வெளியேற, நிலா எழுந்தாள்.

“என் மனசுக்குள் இருந்த பாரத்தை இறக்கி வைக்க உதவினதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.”

சொல்லிவிட்டு கதவைத் திறந்து கொண்டு கேமராவை நோக்கி நடந்தாள் நிலா…

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்… நிலாவின் உருவம் இப்போது மங்கலாய் தெரிகிறது – எனக்கு.

முற்றும்…

 

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

 

முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

celluloidu-3-copy

 

‘என் கதை’ என்ற பெயரில்   தமிழ்ஸ்கிரீன்.காமில் இதுவரை வெளிவந்த   இந்த உண்மைக்கதை  ‘செலுலாய்டு தேவதைகள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகி இருக்கிறது.

‘செலுலாய்டு தேவதைகள்’ புத்தகம், முன்னணி புத்தக கடைகளிலும், அமேசான், ப்ளிப்கார்ட், பே டிஎம் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க விரும்புகிறவர்கள்   கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

tamilscreen.com/bhodhi-books