எல்லாம் முடிந்ததும் ‘ச்சீய்… தள்ளிப்படு’ என்று புழுவைப்போல் பார்ப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்

1986

எல்லாம் முடிந்ததும் ‘ச்சீய்… தள்ளிப்படு’ என்று புழுவைப்போல் பார்ப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்

என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 24

ஹோட்டலுக்குப் போனதும் குட்டி போட்ட பூனை போல் நான் தங்கியிருந்த ரூமையே சுற்றிச் சுற்றி வந்தார்.

வேறு வேலையாக இந்தப் பக்கம் வந்தது போல் காட்டிக் கொண்டவர், அவ்வப்போது என் ரூமுக்குள்ளும் வந்தார்.

“சாப்டாச்சா நிலா?”

“இன்னும் இல்லை சார். இனிமேதான்.”

“மணி எட்டாகுது. இன்னுமா சாப்பாடு வரலை?”

பதிலை என்னிடம் எதிர்பார்க்காமல், புரடக்ஷன் ஆட்களை அழைத்துக் கண்டபடி டோஸ் விட்டார்.

எனக்குத் தேவையானதை எல்லாம் உடனே செய்து கொடுக்கும்படியும் கட்டளையிட்டார்.

அவருக்கு என் மேல் ஏன் இத்தனை கரிசனம்?

காரணம் தெரிந்தபோது அவர் மீது காரித்துப்ப வேண்டும்போல் இருந்தது.

சாப்பிட்டு முடித்துவிட்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன்.

பஸ்ஸர் ஒலித்தது. கதவைத் திறந்தால் அவர்தான்.

“வாங்க சார்.”

“தூங்கலையா?”

ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகக் கேட்கிறார் என்று புரிந்தும் பதில் சொன்னேன்.

“நம்ம கம்பெனியில வொர்க் பண்றது எப்படி இருக்கு?”

“நல்லாருக்கு சார். ஒரு டென்ஷனும் இல்லை. வெரி கம்ஃபர்ட்டபிள்.”

“மத்த கம்பெனிகள் மாதிரி இங்கே எந்தப் பிரச்சினையும் இருக்காது. அதனாலதான் எல்லா ஆர்ட்டிஸ்டும் நம்ம பேனரில் நடிக்கத் துடிக்கிறாங்க. இந்தப் படத்தை ஸ்டார்ட் பண்ணினதும் ஹீரோயின் சான்ஸ் கேட்டு என்னை அப்ரோச் பண்ணாத நடிகைங்களே இல்லை.”

குறிப்பிட்ட ஒரு நடிகையின் பெயரைச் சொல்லி, அந்த நடிகை ரொம்ப தொல்லை கொடுத்ததாகவும் சொன்னார்.

“எல்லாத்தையும் மீறித்தான் உனக்கு சான்ஸ் கொடுத்தேன்.”

“ரொம்ப தேங்க்ஸ் சார்.”

“தேங்க்ஸை வாயால் மட்டும் சொன்னப் போதுமா?”

அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தேன். அடடா… இவனும் பஜனை பார்ட்டிதானா?

“நான் உனக்கு படம் கொடுத்ததுக்காக நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்.”

“என்ன உதவி சார்?”

சொன்னார்.

அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்கு உடம்பெல்லாம் கூசியது.

…ச்சீ… இவன் எல்லாம் ஒரு மனுஷனா?

அந்த புரட்யூஸர் சுற்றி வளைத்து கேட்டது எதையுமில்லை. என் உடம்பைத்தான்.

எல்லாரும் கேட்பதும் இதுதான். ஆனால் அந்த ஆள் கேட்டது தனக்காக அல்ல. அவன் படத்துக்கு ஃபைனான்ஸ் செய்யும் யாரோ ஒரு மார்வாடிக்காக.

நான் சொன்னேனே? இவனைப் போன்ற பல தயாரிப்பாளர்கள் இப்படித்தான் மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

“அவர் பெரிய ஃபைனான்ஸியர். நீ அட்ஜஸ்ட் பண்ணினா எனக்கு மட்டுமில்லே, உனக்கும் லாபம்தான். உனக்கு லட்ச லட்சமா பணத்தை அள்ளிக் கொடுப்பாரு. தங்கமான பார்ட்டி.

அது மட்டுமில்லே நிலா, நிறைய ஹிந்திப் படங்களுக்கும் அவர் ஃபைனான்ஸ் பண்றார். அவர் நினைச்சா உன்னை ஹிந்தியில் பெரிய ஸ்டாராக்க முடியும்” என்று ஆசை காட்டினான்.

அதை எல்லாம் நான் நம்ப தயாராக இல்லை. புடவையை அவிழ்ப்பதற்கு முன் இந்த மாதிரிதான் வாக்குறுதிகள் தருவார்கள். காரியம் முடிந்த பிறகு நம் பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.

என் அனுபவத்தில் எத்தனை பேரை பார்த்திருக்கிறேன்?

இன்னும் பச்சையாகச் சொல்லவா?

படுக்கையில் அவர்களின் இச்சை தீர்ந்த அந்தக் கணமே, இத்தனை நேரம் சுகம் கொடுத்தவளாச்சே என்றுகூட பார்க்காமல் அருவருப்பாய் இடக்கையால் ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள்.

எல்லாம் முடிந்ததும் “ச்சீய்… தள்ளிப்படு” என்று புழுவைப்போல் பார்ப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

காரியம் நடக்கும்வரைதான் தேவதையாக ஆராதிப்பார்கள்.

உன்னைப் போல் அழகி உண்டா இந்த உலகத்தில் என்று பினாத்துவார்கள். வேலை முடிந்ததும் ஆண்களைப் பொருத்தவரை விபச்சாரிதான்.

மார்வாடி ஃபைனான்ஸியரால் ஹிந்தியில் எனக்கு சான்ஸ் கிடைக்கும் என்பதை நான் நம்பவில்லை. ஆனாலும் அந்தப் புரட்யூஸரின் கோரிக்கையை என்னால் மறுக்க முடியவில்லை. மறுத்தால் நிச்சயமாக இந்தப் படத்திலிருந்து நீக்கப்படுவேன் என்று தெரியும்.

நீக்கப்பட்டால் இழப்பு எனக்குத்தான். சமீபத்தில் நான் நடித்து ரிலீசான இரண்டு படங்கள் அட்டர் ப்ளாப்.

அதனால் புதுப்படங்கள் ஏதும் வரவில்லை எனக்கு.

கைவசம் இருக்கும் படங்களும் முடியும் நிலையில் இருக்கின்றன.

இன்னும் பத்துப் பதினைந்து நாட்கள்தான் ஷூட்டிங் இருக்கும்.

அதன் பிறகு வீட்டில்தான் உட்கார வேண்டும்.

 

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்