அவருடன் வெளியே போயிட்டு வா என்பதன் அர்த்தம், அவனோடு போய் படுத்துவிட்டு வா என்பதுதான்.

1868

அவருடன் வெளியே போயிட்டு வா என்பதன் அர்த்தம், அவனோடு போய் படுத்துவிட்டு வா என்பதுதான்.

என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 22

 

லண்டனில் ஸ்டார் நைட்.

நான் இதற்கு முன் வெளிநாடு சென்றதில்லை. இதுதான் முதல் வெளிநாட்டு பயணம்.

என்னை விட அம்மாவுக்குத்தான் வெளிநாடு போக வேண்டும் என்று கொள்ளை ஆசை.

படங்களில் என்னை புக் பண்ண வரும் புரட்யூஸர்களிடம் எல்லாம், “ஸாங் எல்லாம் எங்கே எடுக்கப் போறீங்க?” என்று கேஷுவலாகக் கேட்பாள்.

‘வெளிநாட்டில் என்று சொல்ல மாட்டார்களா…?’ என்ற நப்பாசைதான்.

ஊட்டி, கொடைக்கானல் என்று பதில் வரும்போது கொஞ்சம் ஏமாந்து போவாள்.

ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு பேசுவாள்.

அந்தளவுக்கு அம்மாவுக்கு வெளிநாட்டுக்குப் போக வேண்டும் என்ற ஆசை.

“வர்ற புரட்யூஸர் எல்லாம் பிச்சைக்காரப்பயலா இருக்கானுங்க. ஒரு பயலும் ஃபாரின்ல ஷூட்டிங் வைக்க மாட்டேன்கிறாங்களே…” – அலுத்துக் கொள்வாள் அவ்வப்போது…

அப்படிப்பட்டவள் லண்டனில் ஸ்டார் நைட் என்றதும் துள்ளிக் குதிக்காத குறைதான்.

பட வாய்ப்பு வரும்போது பண விஷயத்தில் கறாராக இருக்கும் அம்மா, ஸ்டார் நைட் வாய்ப்பு வந்ததும் எந்த நிபந்தனையும் இல்லாமல் உற்சாகமாக ஒப்புக் கொண்டாள்.

லண்டனுக்குப் போகப் போகிறோம் என்ற அவள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

இப்படிப்பட்டவள் லண்டன் வந்ததும் எப்படி நடந்து கொண்டிருப்பாள் என்று கற்பனை செய்து பாருங்கள்?

ஷாப்பிங் என்ற பெயரில் கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி மலை போல் குவித்து விட்டாள்.

போதாக்குறைக்கு ஹோட்டல் ரூமில் இருந்த பொருட்களைக் கூட திருடி பெட்டிக்குள் பதுக்கிக் கொண்டாள்.

கூட வந்த சக நட்சத்திரங்களே முகம் சுழித்தது எனக்குத்தான் தெரியும்.

அவள் வாங்கிய பொருட்களைக் கொண்டு இங்கே பர்மா பஜாரில் ஒரு கடையே வைக்கலாம்.

ஸ்டார் நைட் ஏற்பாடு செய்த ஸ்பான்ஸர், அம்மா வாங்கிக் குவித்த பொருட்களைப் பார்த்து மிரண்டு போனார்கள்.

அதில் ஒருவன் பொறுக்க முடியாமல் வாய் திறந்து கேட்டே விட்டான்.

“இவ்வளவு லக்கேஜை எப்படி கொண்டு போகப் போறீங்க மேடம்? மெட்ராஸ் ஏர்ப்போர்ட்ல டூட்டியை போட்டுத் தீட்டிடப் போறாங்க?”

அம்மாவிடமிருந்து அலட்சிய சிரிப்புடன் பதில் வந்தது.

“அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. அங்கே என் ஃபேமிலி ப்ரண்ட் கஸ்டம்ஸ் ஆஃபீசரா இருக்கார். பத்து பைசா கூட டூட்டி கட்டாம அவர் பாத்துக்குவார்.

எனக்கு ஒரு பக்கம் ஆச்சர்யம். இன்னொரு பக்கம் குழப்பம். நமக்குத் தெரிந்து அம்மா சொல்வது போல் ஃபேமிலி ப்ரண்ட் யாரும் கஸ்டம்ஸ் ஆஃபீசராக இல்லையே?

“கஸ்டம்ஸ்ல நம்ம ஃபேமிலி ப்ரண்டு இருக்கறதா சொன்னீயே? யாரும்மா அது?”

ஹோட்டல் ரூமில் நானும் அம்மாவும் மட்டும் இருந்த சந்தர்ப்பத்தில் கேட்டேன்.

அவள் முகம் சற்றே மாறியது.

உடனே பதில் வரவில்லை அவளிடமிருந்து.

என்னவோ திட்டம் வைத்திருக்கிறாள் என்பது மட்டும் எனக்கு விளங்கியது.

என்ன திட்டம் என்று அப்போது புரியவில்லை.

என்னைப் பணயம் வைக்கும் திட்டத்தில்தான் லண்டனையே வாரிப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாள் என்பது சென்னை ஏர்ப்போர்ட்டில் வந்திறங்கியதும்தான் எனக்குப் புரிந்தது.

என் அம்மாவைப் பற்றி எனக்குத் தெரியாதா? சண்டாளச் சிறுக்கியாச்சே அவள்.

எங்களுடன் வந்த மற்றவர்கள் பொறாமைப்படுமளவுக்கு ஏர்ப்போர்ட்டில் எங்களுக்கு அப்படி ஒரு மரியாதை.

கருப்பாய் குள்ளமாக இருந்த ஒரு கஸ்டம்ஸ் ஆஃபீசர் எங்களை நோக்கி வந்தான்.

அம்மா முகத்தில் மலர்ச்சி.

“வாங்க… வாங்க… எங்கே நீங்க வராமப் போயிடுவீங்களோன்னு பயந்துக்கிட்டிருந்தேன்.”

“சொல்லிட்டு வராம இருப்பேனா?”

“ஸார் இங்கே பெரிய ஆஃபீசர்… பேரு பிரபாகரன்…”

அம்மா எனக்கு அவனை சும்மா ஒப்புக்கு அறிமுகப்படுத்த, அந்த ஆள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து சிரித்தான்.

அந்த சிரிப்பில் லிட்டர் கணக்கில் ஜொள் வழிந்தது.

கரும்பன்னி   போல் இருக்கிறான். அவனுக்கு தான் ஒரு ஹீரோ என்று நினைப்பு.

அவனே ஆட்களை அழைத்து எங்களின் பேக்கேஜை டிராலியில் வைத்து தள்ளிக் கொண்டு வர வைத்தான்.

கஸ்டம்ஸில் சின்ன கேள்வி கூட இல்லை. எல்லா ஃபார்மாலிட்டியையும் அந்த ஆளே செய்து முடித்து பத்திரமாக வெளியே அழைத்து வந்தான்.

வாசலில் கார் தயாராய் காத்திருந்தது.

“ரொம்ப தேங்க்ஸ் பிரபாகரன் ஸார்.”

“இதுக்கெல்லாம் என்னத்துக்கு தேங்க்ஸ்? நீங்க கிளம்புங்க மேடம்.”

கார் புறப்பட்ட சற்று நேரத்தில் அம்மா சொன்னாள்…

“ஈவ்னிங் ரெடியா இரு. பிரபாகர் ஸார் வீட்டுக்கு வருவார்… அவர் கூட வெளியே போயிட்டு வா.”

வெளியே போயிட்டு வா என்பதன் அர்த்தம், அவனோடு போய் படுத்து விட்டு வா என்பதுதான்.

அம்மா பேச்சைத் தட்ட முடியாமல் அன்றிரவு அவனுடன் போனேன்…

 

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்