சினிமா நடிகை என்றால்… எல்லாருக்குமே விபச்சாரி என்ற எண்ணம்தான்.

1849

சினிமா நடிகை என்றால்…  எல்லாருக்குமே விபச்சாரி என்ற எண்ணம்தான்.

என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 20

 

ஒரு தடவை இந்தச் சாக்கடையில் விழுந்தால் காலம் முழுக்க அதில்தான் கிடக்க வேண்டும் என்பது என்னைப் போன்ற நடிகைகளின் தலையெழுத்து.

அதை யாராலும் மாற்ற முடியாது.

அந்தக் கடவுளே வந்தாலும் எங்களை காப்பாற்ற முடியாது.

இதிலிருந்து மீண்டு விட நினைத்தாலும் விடமாட்டேன் என்கிறார்கள்.

மறுபடி மறுபடி அதிலேயே குளிக்க வைக்கிறார்கள்.

குமட்டுகிறது வாழ்க்கை.

சினிமா நடிகை என்றால்… வெட்கத்தை விட்டு சொல்கிறேன். எல்லாருக்குமே விபச்சாரி என்ற எண்ணம்தான்.

ஆஃபிஸில் வேலை செய்யும் பெண்களை யாரும் இப்படி நினைப்பதில்லை.

நடிகை என்றால்தான் இளக்காரம்.

பச்சையாக சொல்லட்டுமா?

என்னதான்  நம்ம ஊர் ரசிர்கள்  என்னைப்போன்ற  நடிகைக்காக கோயில் கட்டினாலும், இந்த சமுதாயம் என் போன்றவர்களை  தேவடியாளாகத்தான் நினைக்கிறது.

முகத்துக்கு முன்னால் புகழ்ந்தாலும் முதுகுக்குப் பின்னால் ச்சீய்… இவள் எல்லாம் மானத்தை விற்பவள் என்று காரித் துப்புகிறது.

ஏன் இப்படி எல்லாம்?

இதற்கு யார் காரணம்?

ஏதோ ஒரு சில நடிகைகள் அப்படி இருக்கலாம்.

அதற்காக எல்லோரையும் ஒரே மாதிரி நினைப்பது என்ன நியாயம்?

முதல் சந்திப்பிலேயே பல்லைக் காட்டுவதும், படுக்கைக்குக் கூப்பிடுவதும்… இதே போல் எந்த குடும்பப் பெண்ணையாவது கூப்பிட முடியுமா?

செருப்பு பிய்ந்து போகும்.

நாளுக்கு நாள் இந்தத் தொல்லை அதிகமாகிக் கொண்டே போகிறது.

இத்தனைக்கும் புகழின் உச்சியில் இருக்கிறேன்.

பாமர ரசிகர்கள் என் மேல் பைத்தியமாக இருக்கிறார்கள்.

நிலாவைப் பார்க்க மாட்டோமா… பேச மாட்டோமா… என்று தவியாய் தவிக்கிறார்கள்.

இவர்களின் தவிப்பு என் மீதுள்ள அபிமானத்தில் வந்தது.

ஆனாலும் அவர்களுக்குத் தெரியும். நடிகை நிலாவும் வானத்து நிலாவும் ஒன்றுதான்.

வானத்து நிலாவை தூரத்தில் இருந்து ரசிக்கத்தான் முடியும். நெருங்கித் தொட முடியாது.

அது மாதிரிதான் இந்த நிலாவும் என்று ரசிகர்களுக்கு  நன்றாகவே  தெரியும்.

பணத்திமிர் எடுத்தவர்களோ, நிலா என்ன? பணத்தைக் காட்டினால் எப்பேர்ப்பட்டவளும் புடவையை அவிழ்த்துவிடுவாள் என்று நினைக்கிறார்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்களோ  தன்னுடைய  பதவியை   அதிகாரத்தைக் காட்டி படுக்க வா என்கிறார்கள்.

அதுவும் போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்களே…

அவர்களைப் பொறுத்தவரையில் நடிகைகள் எல்லோரும் பிராத்தல் கேஸ் என்பது போலத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். காக்கி உடை காமுகன்கள்!

மிகைப்படுத்தி சொல்லவில்லை. உண்மைதான்!

பிராத்தல் தொழில் செய்யும் பெண்களிடம் போலீஸ்காரர்கள் மாமூல் வாங்கிக் கொண்டு அவர்கள் தொழில் செய்வதைக் கண்டும் காணாமல் இருப்பார்கள்.

நடிகைகளிடம் மாமூல் வாங்குவதில்லை. அதற்குப் பதிலாக அவர்ல்களுடன் ஓசியில்  படுக்க    வேண்டும்  என்று எதிர்பார்க்கிறார்கள்.

இந்தக் காக்கிச்சட்டை போட்ட கழுகுகளிடமிருந்து எப்படி தப்பிப்பது என்றுதான் தெரியவில்லை.

முடியாது என்று மறுத்தால் மறைமுகமாக  அல்ல நேரடியாகவே  மிரட்டுகிறார்கள்.

பிராத்தல் கேஸில் மாட்டிய சில நடிகைகளின் பெயர்களைச்  சொல்லி   ‘உனக்கும் அந்த கதி தேவையா?’ என்பது போல்…

விபச்சார வழக்கில் பிரபல நடிகை கைது என்ற செய்தி இப்போது சகஜமாகி விட்டது.

இதில் எத்தனை நடிகை உண்மையாய் தவறு செய்து மாட்டியிருப்பார்கள்?

என்னைக் கேட்டால் போலீஸ் அதிகாரிகள் படுக்கக் கூப்பிட்டு மறுத்ததினால்தான்,    அவர்களை பிராத்தல் கேஸில் கைது செய்து  இப்படி  அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது…

நான் இப்படி சொல்ல காரணம் இருக்கிறது.

என்னுடைய அனுபவத்தில்  நானும் இப்படி மறைமுகமாக மிரட்டப்பட்டிருக்கிறேன்.

மிரட்டலுக்குப் பயந்து போலீஸ்அதிகாரிகளிடம் படுத்தும் இருக்கிறேன்.

எனக்கு  வேறு வழியே இல்லை.

பெரிய புரட்யூஸர் ஒருவரின் மகளுக்கு   போனவாரம்  கல்யாணம்.

போயிருந்தேன்.

போகாமல் இருந்தால் தப்பாக நினைப்பார்கள்.

தவிர அன்றைக்கு செகண்ட் சண்டே என்பதால்  ஷூட்டிங் இல்லை.

ப்ரீயாகத்தானே இருக்கிறோம்? என்று போனேன்.

ஏன்தான் போனோம் என்று இப்போது வருத்தப்படுகிறேன்.

போகாமல் இருந்திருந்தால் அந்த போலீஸ் அதிகாரியை சந்தித்திருக்க மாட்டேன்.

அவரால் இப்போது அனுபவிக்கும் தொல்லையும் இருந்திருக்காது.

புரட்யூஸர் வீட்டுக் கல்யாணம் எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்?

எக்கச்சக்கக் கூட்டம்.

ஏறக்குறைய சினிமா இன்டஸ்ட்ரியில் ஒருத்தர் பாக்கியில்லாமல் வந்திருந்தனர்.

நான் போவதற்குக் கொஞ்சம் முன்னால்தான் ரஜினி ஸார், கமல் ஸார் வந்து போனதாகச் சொன்னார்கள்.

சினிமாக்காரர்கள் கூட்டம் மட்டுமில்லை, அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெரிய பெரிய தொழில் அதிபர்கள் எல்லாம் வந்திருந்தனர்.

அத்தனை கூட்டத்திலும் அந்த போலீஸ் அதிகாரியைப் பளிச்சென்று என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

போலீஸ் அதிகாரி என்றால் முரட்டு மீசை, தொப்பையுடன்தான் இருப்பார்கள்.

அவர் வித்தியாசமாக இருந்தார்.

காக்கிச் சட்டை போடாமல் இருந்தால் அவரை போலீஸ் என்று சொல்லவே முடியாது.

அப்படியொரு அமைதியான தோற்றம் சிவனே என்று ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்.

இத்தனைக்கும் அவர் சாதாரணமானவரில்லை.

மெட்ராஸை நடுநடுங்க வைத்த ஒரு ரௌடியை நடுரோட்டில் சுட்டுக் கொன்ற தைரியமான போலீஸ் அதிகாரி.

அப்போது எல்லா பத்திரிகைகளிலும் அவர்தான் ஹீரோ!

எந்தச் சேனலைத் திருப்பினாலும் அவரது பேட்டிதான் வந்தது.

அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன்.

“இந்த மாதிரி போலீஸ் அதிகாரிகள் ஊருக்கு ரெண்டு பேர் இருந்தாப் போதும். ரௌடிங்க தொல்லையே இருக்காது” என்று ஸ்கூலில்கூட அவரைப் பற்றி பெருமையாய் பேசியிருக்கிறோம்.

அவரை இப்போதுதான் நேரில் பார்க்கிறேன்.

கல்யாணத்திற்கு வந்து விட்டு உடனே கிளம்பிப் போனால் தப்பாகி விடும் என்பதால் கொஞ்சம் நேரம் கச்சேரி கேட்பதுபோல் உட்கார்ந்திருந்தேன்.

வீட்டுக்குப் போய் என்ன பண்ணப் போகிறோம்?

ப்ரீயாக இருக்கிறேன் என்று தெரிந்தால் எவனுக்காவது என்னை புக் பண்ணி  படுக்க அனுப்பி விடுவாள் என் அம்மா.

அந்த புரட்யூஸர் என் அருகில் வந்தார். கூடவே அந்த போலீஸ் அதிகாரி.

“வணக்கம் நிலா மேடம்! கல்யாணத்துக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷம்…”

என்று பேச்சை ஆரம்பித்தவர், அருகில் இருந்த போலீஸ் அதிகாரியை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

“ஸாரைத் தெரியுமில்லே…”

“தெரியுமே… ரௌடியை என்கவுண்டர்ல சுட்டுக் கொன்றாரே? நல்லா ஞாபகமிருக்கு.”

“ஆமாம்… ஸார்தான் இப்ப நம்ம ஏரியா ஏ.ஸி. அதுமட்டுமில்லே… நம்ம படங்களுக்கு எல்லாம் ஸார்தான் ஃபைனான்ஸ்.” என்று சிரித்தார்.

“ஓ! அப்படியா?”

பேசிக்கொண்டிருக்கும்போது யாரோ வி.ஐ.பி. வர, அவரை வரவேற்பதற்காக புரட்யூஸர் அவசரமாக அந்த இடத்தைவிட்டு நகர, நானும் அந்த போலீஸ் அதிகாரியும் மட்டும் இருந்தோம்.

என்ன பேசுவது என்று தெரியாமல் நான் அமைதியாக இருந்தேன்.

தொண்டையை கணைத்துக் கொண்டு அவர் கேட்ட கேள்வி என்னை நிலைகுலைய வைத்தது.

“பொக்கே பிசினஸ் எல்லாம் எப்படி போய்க்கிட்டிருக்கு?”

அதிர்ச்சியில் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

விஷமமாகச் சிரித்தார்.

சிரித்துக் கொண்டே அந்த போலீஸ் அதிகாரி கேட்டதும் எனக்கு சுரீரென்றது.

இதெல்லாம் இவருக்கு எப்படித் தெரியும்?

கேட்டதோடு அல்லாமல் ஒரு மாதிரியாக சிரிப்பதை வைத்துப் பார்த்தால் இவருக்கு என்னைப் பற்றிய விஷயங்கள் எல்லாம் தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?

என்ன பதில் சொல்வதென்று எனக்குப் புரியவில்லை. ஏஸியின் குளிர்ச்சியை மீறி என் முகம் வியர்த்துக் கொண்டியது.

உடம்பில் நடுக்கம் ஏற்படுவதையும் உணர்ந்தேன்.

அச்சத்தோடு அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

என்னை கையும் களவுமாக பிடித்தவிட்ட இறுமாப்பு தெரிந்தது அவர் பார்வையில்.

எனக்கு உன்னைப் பற்றி எல்லாம் தெரியும் என்பதுபோல் அவரது பார்வை என்னைத் துளைத்தது.

என்ன சொல்லி சமாளிப்பது?

நாக்கு வறண்டு போனது.

நல்ல வேளை… கடவுள்போல் அங்கு வந்தார் எனக்குத் தெரிந்த டைரக்டர் ஒருவர்.

“ஹாய் நிலா… ஹவ் ஆர் யூ?”

“‘ஃபைன். நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லாருக்கேன். வீட்டுல அம்மா எப்படி இருக்காங்க?”

“நல்லாருக்காங்க.”

அவரிடம் பேசிக் கொண்டே அந்த இடத்தை விட்டு அவசரமாக நகர்ந்த எனக்கு அதற்கு மேல் அங்கிருக்கவே பிடிக்கவில்லை.

வீட்டுக்குக் கிளம்பினேன்.

வீட்டுக்கு வந்த பிறகும் எனக்குப் படபடப்பு அடங்கவில்லை.

போலீஸ்காரன் புத்தி தெரிந்ததுதான்.

சும்மாவிட மாட்டான்.

ஏதாவது ஒரு வழியில் என்னைத் தொந்தரவு செய்யப் போவது நிச்சயம்.

நான் பயந்த மாதிரிதான் நடந்தது.

 

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்