எனக்கு வேறு வழி தெரியவில்லை. அன்றிரவு அவன் வீட்டுக்குப் போனேன். விடிய விடிய தூங்கவில்லை. தூங்கவிடவில்லை அவன்.

1670

எனக்கு வேறு வழி தெரியவில்லை.  அன்றிரவு அவன் வீட்டுக்குப் போனேன்.  விடிய விடிய தூங்கவில்லை.  தூங்கவிடவில்லை அவன்.

என் கதை’  

ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை தொடர்…

அத்தியாயம் – 19

 

அந்த நிம்மதி அதிக நேரம் நீடிக்கவில்லை.

மீண்டும் செல்போன் அடித்தது…

“ஹலோ… யாரு?”

“நான்தான்.”

அவன்தான். எனக்கு வந்த ஆத்திரத்தில் செல்போனைத் தூக்கிப் போட்டு உடைத்து விடலாமா என்று நினைத்தேன்.

அவன் தொல்லை தாங்க முடியவில்லையே.

இவனிடமிருந்து எப்படி தப்பிக்கப் போகிறோம் என்று  முதன்முறையாக எனக்கு பயம் வந்தது.

என்னை   அணுஅணுவாக  அனுபவிக்காமல் விடமாட்டான் போலிருக்கிறது.

அவனுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் என்னை நிம்மதியாக இருக்க விடமாட்டான் என்பது  புரிந்தது.

இப்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் இதே அனுபவம் ஏற்கெனவே  இன்னொரு நடிகைக்கும் ஏற்பட்டிருக்கிறது.

அவனோடு ஒரு படத்தில் நடித்தாள் அந்த பெங்களூர் நடிகை. அந்தக்காலத்தில் கொடிகட்டிப்பறந்த கன்னட நடிகையின் பேத்தி அவள்.

அவள்தான் அவனைப் பற்றி கதை கதையாகச் சொன்னாள் ஒரு தடவை.

அவளையும் இப்படித்தான் தொல்லை கொடுத்தானாம்.

அவளும் எவ்வளவோ முயற்சி செய்து அவனுக்கு பிடி கொடுக்காமல்தான் இருந்திருக்கிறாள்.

கடைசியில் காதல் என்ற அஸ்திரத்தை எய்தி அவளைக் கவிழ்த்துவிட்டானாம்.

அவனிடம் ஏமாந்ததை இன்னமும் தாங்க முடியவில்லை அவளால்.

எனக்கு அவள் மீது பரிதாபமாக இருந்தது.

ஒருவகையில் நானும் அப்படி ஏமாந்தவள்தானே?

அதை நான் அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை.

அவள் கதையை மட்டும் கேட்டுக் கொண்டேன்.

ராஸ்கல்……  சாமர்த்தியமாய் வலை விரித்து அவளை வீழ்த்தியிருக்கிறான்.

நடிகைகள் பலவீனமானவர்கள்.

சொந்த பந்தங்களின் சுகத்துக்காக எங்களின் வாழ்க்கையைத் தியாகம் செய்து கொண்டிருக்கிறோம்.

அவர்களின் சுகபோக  வாழ்க்கைக்காக மெழுகுவர்த்தியாய் உருகிக் கொண்டிருக்கிறோம்.

இந்த வாழ்க்கையிலிருந்து விடுபட வழி தெரியாமல் மனசுக்குள் நித்தம் நித்தம் புழுங்கி செத்துக் கொண்டிருக்கிறோம்.

எங்களின் மனசை சென்டிமென்டாகத்  தொட்டுவிட்டால் நாங்கள் சரண்டர்.

நம்மீது அன்பு வைக்க ஒருவன் கிடைத்திருக்கிறான் என்ற சந்தோஷத்தில் அவர்களின் காதலை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொண்டு விடுவோம் – அவன் ஏற்கனவே கல்யாணமாகி குழந்தை பெற்றவனாக இருந்தாலும்.

அதுவும் ஒரே ஹீரோ நம்மைக் காதலிக்கிறான் என்கிறபோது அவனை நிராகரிக்க எவளுக்குத்தான்  மனசு வரும்?

எங்களின் இந்த பலவீனத்தை நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டு எங்கள் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள் இந்த  ஹீரோக்கள்.   பாவிகள்.

அந்த பெங்களூர் நடிகையிடம் நன்றாகப்  பழகி,  அதைவிட நன்றாகப் புளுகி அவளை  நம்ப வைத்து இருக்கிறான்.

என் பெயர் உட்பட பல நடிகைகளின் பெயர்களை   அவளிடம்  சொல்லி,  நாங்கள் எல்லாம் அவனிடம் படுக்க அலைவதாகவும், அவனுக்கு எங்கள் மீது இஷ்டமே இல்லை என்றும், அவன் அவளைத்தான் விரும்புவதாகவும் சொன்னானாம்.

அதை அவளும் நம்பி விட்டாள் – காதல் போதையில்.

தினமும் போனில் மணிக்கணக்கில் பேசுவானாம்.

அவளுடைய பிறந்த நாளை ஞாபகம் வைத்து நடுராத்திரி பன்னிரண்டு மணிக்குப் போன் பண்ணி வாழ்த்தியிருக்கிறான்.

இவள் க்ளீன்போல்ட் ஆகிவிட்டாள்.

உன்னைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை… அப்படி இப்படி என்று பினாத்தியிருக்கிறான்.

பெரிய ஹீரோ தன்னைப் பற்றி இப்படி எல்லாம் பேசினால் அவளுக்கு எப்படி இருக்கும்?

நாளடைவில் அவளுக்கும் காதல் ஜூரம் பற்றிக் கொண்டு விட்டது.

பிறகென்ன?

கணக்கில்லாமல் தன் கற்பை அவனோடு பங்கு போட்டிருக்கிறாள்.

கல்யாணப் பேச்சு எடுத்தபோதுதான் அவனது சுயரூபம் தெரிந்திருக்கிறது அவளுக்கு.

உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்- என்றவன், திடீரென தன் அப்பா, அம்மா பெண் பார்த்து வைத்திருப்பதாக குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறான்.

அப்புறம்தான் அவளுக்குத் தெரிந்திருக்கிறது.

அந்தப் பெண்ணை அவன் பெற்றோர் செலக்ட் பண்ணவில்லை என்ற விஷயம்.

நடிக்க வருவதற்கு முன்பே அந்தப் பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறான் இந்த களவாணிப்பயல் .

கடைசியில் அந்தப் பெண்ணையே கல்யாணம் செய்து கொண்டு விட்டான்.

அவனை நம்பி தன்னைக் கொடுத்த அந்த நடிகையின் கதி பரிதாபமாகிவிட்டது.

அவனுக்கென்ன?

இப்போது பொண்டாட்டி புள்ளை என்று நல்ல வாழ்க்கை அமைந்து விட்டது.

அப்படியும் நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு அலைகிறான்.

இவனை எப்படி சமாளிப்பது?

பேசாமல் அம்மாவிடம் சொல்லிவிடலாமா?

வேறு வினையே வேண்டாம்.

அவளே சீவி சிங்காரிச்சு  அவனிடம்அ னுப்பி வைத்துவிடுவாள் அந்த அரக்கி.

“அவன்கிட்ட படுத்தால் படம் வரும்னா படுக்கிறதுல என்னடீ  தப்பு”

– என்று நியாயம் சொன்னாலும் சொல்லுவாள். எமகாதகி அவள்.

“என்ன நிலா, சைலண்ட்டா இருக்கே?”

“ஒண்ணுமில்லை… சொல்லுங்க.”

“பளிச்சுன்னு சொல்லிடவா?

“ஐ வாண்ட் யூ.

“என்ன சொல்றே?”

ராஸ்கல், பாண்டி பஜாரில் ஏதோ பொருள் வாங்குவதுபோல் என்னமாய் கேஷுவலாய் கேட்கிறான் பாருங்கள்?

உன் பொண்டாட்டியை வேற எவனாவது இப்படி கேட்கணும்டா…

பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

அதை என் இசைவாக எடுத்துக் கொண்டு அவனே பேசினான்.

“வொய்ஃப் லண்டன் போயிருக்கா. வீட்டுல நான் மட்டும்தான் இருக்கேன்.

ஸ்டில் ஐயம் பேச்சிலர். நீ வரணும். எப்ப வர்றே? இன்னைக்கு நைட்?”

என்ன பதில் சொல்ல?

அதுக்கு வேற ஆளைப்பாரு என்று முகத்தில் அடித்தமாதிரி பதில் சொல்ல வேண்டும் போல் மனசுக்குள் வேகம்.

ஆனால் வார்த்தைகள் வரவில்லை.

வந்தாலும் என்னால் அப்படி சொல்ல முடியாது.

சொல்லிவிட்டு இந்த சினிமா ஃபீல்டில் நடிகையாய் என்னால்  குப்பை கொட்டவும் முடியாது.

இவன் போன்ற ஹீரோக்கள் நினைத்தால் என்னை ஒரே நாளில் ஒழித்துக் கட்ட முடியும்.

ராசி இல்லை, திமிர் பிடித்தவள், நடிக்கத் தெரியலை – இப்படி எத்தனையோ காரணங்களைக் கற்பிக்கலாம்.

அதை சினிமா உலகம் நம்பும்.

அப்புறம்?

என்னை சீண்ட மாட்டார்கள்.

டி.வி. சீரியலில்தான் நடிக்கப் போக வேண்டும்.

இப்போதுகூட பாருங்கள்?

இவன் கொடுக்கும் தொல்லையினால் பயங்கர டென்ஷன்.

என்னால் ஈடுபாட்டோடு நடிக்க முடியவில்லை.

நான்கைந்து டேக் வாங்க வேண்டியிருக்கிறது.

டைரக்டர் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டார்.

இதே நிலை தொடர்ந்தால் என் கேரியர் அவ்வளவுதான்.

கேரியரை விடுங்க.

என் மன நிம்மதி?

என்ன செய்வேன் நான்?

எனக்கு வேறு வழி தெரியவில்லை.

அன்றிரவு அவன் வீட்டுக்குப் போனேன்.

விடிய விடிய தூங்கவில்லை.

தூங்கவிடவில்லை அவன்.

 

(சொல்றேன்)

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்